Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்

சுயமாகச் சிந்தித்துச் செயல்படுபவனே உண்மையான மனிதன்!

பி.சூடாமணி, திருச்சி-6.

ரசிகர்களால் மட்டுமே ரஜினியை தமிழக முதல்வர் ஆக்கிவிட முடியுமா?

‘முதல்வர் பதவி எனக்குத் தேவையில்லை’ என்று அவரே சொல்லிவிட்டார். அதுமட்டுமல்ல, ‘ரசிகர்களை மட்டும் வைத்துக்கொண்டு தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு ஜாம்பவான்களையும் வீழ்த்த முடியாது’ என்ற தன்னிலை விளக்கத்தையும் கொடுத்துவிட்டார். ப்ளீஸ், அவரை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்?

@கு.ப.இரகுநாதன், பூவிருந்தவல்லி, திருவள்ளூர் மாவட்டம்.

ரஜினியின் அரசியலைப் புரிந்துகொள்ள ஓர் அகராதி தேவைப்படும்போலிருக்கிறது. தமிழருவி எழுதித் தருவாரா?

ஏற்கெனவே அவர் அதைத்தானே செய்து கொண்டிருக்கிறார். அவர் வாய் திறப்பதற்கு முன்பாகவே இவர் பொழிப்புரை எழுத ஆரம்பித்துவிடுகிறாரே!

@ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

‘கொரோனா வைரஸ், உலகத்தில் உள்ள மக்களையெல்லாம் துன்புறுத்திவிட்டு மோடியை மட்டும் காப்பாற்றியுள்ளது’ என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகிறாரே?

மோடிக்கு ‘எதிர்ப்பு’சக்தி ரொம்பவே அதிகம் என்கிறோரோ!

@இ.முத்துக்குமார், கிருஷ்ணாபுரம்.

தலைவன் சொல்வதை அப்படியே கேட்டு நடப்பவன் உண்மையான தொண்டனா அல்லது தொண்டர்கள் சொல்வதைக் கேட்டு நடப்பவன் உண்மையான தலைவனா?

சுயமாகச் சிந்தித்துச் செயல்படுபவனே உண்மையான மனிதன்!

@‘திருப்பூர்’ அர்ஜுனன். ஜி, அவிநாசி.

ரஜினியின் பிரஸ்மீட்டில் உணவு வகைகளுக்கு மட்டும் பத்து லட்சம் ரூபாய் செலவாகியிருப்பது எதைக் காட்டுகிறது?

‘சிஸ்டம்’ மாறவே மாறாது என்பதை!

@இந்து குமரப்பன், விழுப்புரம்.

‘இந்தியாவில் நிறைய தெய்வங்கள் உள்ளன. அதனால் கொரோனோ வைரஸால் இங்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது’ என்று பா.ஜ.க மூத்த தலைவர் கைலாஷ் விஜய் பேசியது சர்ச்சையாகியுள்ளதே?

தேவையில்லாமல் தெய்வங்களை இழுத்து தெருவில் விடுவதுதானே அவர்களுடைய பிழைப்பே!

@சி.கார்த்திகேயன், சாத்தூர்

‘மாஸ்டர்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பேசியது யாருக்காக... அது யாருக்காக?

மனிதத்தின்மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பவர் அவர். `சாமியைக் காப்பாத் துறேன்னு சொல்ற எந்தக் கூட்டத்தோடயும் பழகாதீங்க. யாராவது விவாதம் பண்ணா, என்னோட மதத்துல என்ன சொல்லியிருக்குனு எதிர்வாதம் பண்ணாதீங்க. பதிலுக்கு, மனிதத் தையும் மனிதநேயத்தையும் சொல்லிக்கொடுங்க, மனுஷன மதிக்கக் கத்துக்கொடுங்க’ என்று ஆரம்பித்து அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தை யும் நமக்காக... நம் தலைமுறைகளுக்காக மட்டுமே!

விஜய் சேதுபதி - விஜய்
விஜய் சேதுபதி - விஜய்

@ஸ்ரீ.பூவராகவன், படியூர், திருப்பூர் மாவட்டம்.

‘உண்மையாக இருக்க வேண்டும் என்றால் சில சமயம் ஊமையாக இருக்க வேண்டும்’ என்று நடிகர் விஜய் கூறியிருக்கிறாரே?

‘உண்மை’ என்பதை ‘பிரச்னை இல்லாமல்’ என்று மாற்றிப் படிக்கவும்.

ஜெ.ஜானி, போரூர், சென்னை-116.

`பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவரை தமிழகத் தலைவராக நியமித்திருப்பதன்மூலம், பெரியார் மண்ணில் காலூன்ற அவர் வழியில் பயணிக்க வேண்டும் என்பதை பா.ஜ.க நன்றாகவே உணர்ந்திருக்கிறது’ என்று மாநில அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளாரே?

மூன்று ஆண்டுகளுக்குமேலாக அடிமையாகத் தொடர்ந்தும், அவர்களைப் பற்றி இவர் உணரவில்லையே!

@பி.மணி, குப்பம், ஆந்திரா மாநிலம்.

‘பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தாலும் அ.தி.மு.க அரசில் குறை காண முடியாது’ என்கிறாரே எடப்பாடி பழனிசாமி?

ஒன்றிரண்டு மட்டும் இருந்தால்தானே தனியாகத் தெரிவதற்கு!

@வி.பாலசுப்பிரமணியன், மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்.

சபரிமலை, அயோத்தி, ரஃபேல் போன்ற முக்கிய வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கிய ஒருவரை, ராஜ்யசபா உறுப்பினராக நியமித்திருக்கிறார்களே இது நியாயமா?

அவர்களுக்கு எல்லா ‘நியாய’ங்களும் தெரியும்... எல்லா ‘தர்ம’ங்களும் தெரியும்!

@கே. சங்கர், சிட்லபாக்கம் சென்னை.

நிர்பயா வழக்குக் குற்றவாளிகள் மனசாட்சியே இல்லாமல் மனு மேல் மனு போடுகிறார்கள். ‘நிர்பயா’ ஆவி வந்து இவர்களைத் தண்டித்தால்தான் உண்டா?

அவர்களுக்கு மனசாட்சி என்ற ஒன்று இருந்திருந்தால், நீங்கள் ஆவியை அழைக்கும் அளவுக்கு யோசிக்கத் தேவையே இருந்திருக்காதே!

@ராம்குமார்.

சீனர்கள் கண்டதையும் தின்றதற்கு, உலகம் முழுவதும் கைகழுவ வேண்டியுள்ளதே?

கழுகார் பதில்கள்

இதெல்லாம் தேவையற்ற பேச்சுகளே! சீனர்கள் மட்டுமல்ல, பல ஆயிரம் ஆண்டுகளாக உலகில் வாழும் ஒட்டுமொத்த உயிரினங் களுமே தாங்கள் வாழும் இடத்தில் கண்டதையெல்லாம் சாப்பிட்டுவருகின்றன. தேவை யானது எது, தேவையில்லாதது எது என்று இயற்கையே கண்டறிந்து அதை நெறிப்படுத்திவைத்துள்ளது. அவர்கள் பாம்பு, தேள், தவளை எனச் சாப்பிடுகி றார்கள் என்றால், இங்கே நண்டு, நத்தை, எலி எனச் சாப்பிடுகிறோமே!

@சரவணகுமார் சின்னசாமி, தாராபுரம்.

அறிவார்ந்த சமூகம் சட்டங்கள் பலவும் இயற்றியும்கூட மத மோதல்கள், சாதி ஆணவக்கொலைகள் தொடர்வது நெஞ்சை நொறுக்குகிறது. அடுத்த தலைமுறையிலாவது மாற்றம் வருமா?

சாதி - மதத்தைவைத்து பணம் பண்ணப்பார்க்கும் கட்சிக்காரர்கள், மதவாதிகள், சாதித்தலைவர்கள்தான் இதுபோன்ற பஞ்சமாபாதகங் களுக்குப் பின்னால் நிற்கிறார்கள். நம்மில் பலர் அவர்களில் பலரையும் தலைவர் களாகவே பார்க்கிறார்கள். சில நேரங்களில் கடவுளுக்கும்மேலே என்று அவர்களின் கால்களில் கூட விழுகிறார்கள். ‘எல்லோரும் சமம்தான்’ என்ற உண்மையை நேற்றைய தலைமுறையே உணர ஆரம்பித்துவிட்டது. ஆனாலும், தங்களின் தேவைக்காக இளைஞர்களின் மனதில் கொடுந்தீயைப் பற்றவைத்து அமைதியைக் குலைத்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த உண்மையை உணர்ந்தால், இந்தத் தலைமுறையிலேயே மாற்றம்தான்!

@`சிங்கை’ கார்முகிலன், ராணிப்பேட்டை.

கொரோனா பயமுறுத்தல் யாருக்காக?

மனித இனம் இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கும்மேல் தழைத்து நிற்க வேண்டும் என்பதற்காக!

சம்பத்குமாரி, பொன்மலை, திருச்சி.

ராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்வதில், சவுதி அரேபியாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கிறதே இந்தியா?

அமெரிக்காவின் மிக மிக நெருங்கிய நண்பர்கள் அப்படித்தான் இருப்பார்கள்!

பியூஷ் கோயல்
பியூஷ் கோயல்

@ஆர்.ஹரிகோபி, புதுடெல்லி-75.

‘ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை’ என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுவது எதற்காக?

இந்தியாவையே தனியார்மயமாக்கும்போது, தனியாக எதற்கு ஒரு திட்டம் என முடிவெடுத்திருப்பார்கள்!

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி, கரூர்.

தமிழக பா.ஜ.க தலைவராக எல்.முருகன் நியமிக்கப் பட்டிருப்பது, அந்தக் கட்சியில் கோஷ்டிப் பூசலைப் பன்மடங்கு அதிகரிக்கச்செய்துவிட்டதாமே?

கதருக்கும் காவிக்கும் இந்த விஷயத்தில் மட்டும் எப்போதுமே ஏக ஒற்றுமைதான். புதிதாக ஒரு தலைவர் நியமிக்கப்படும் போதெல்லாம் புதிதாக ஒரு கோஷ்டி உருவாகிவிடும். ஆனாலும்கூட, தேர்தல் நேரத்தில் பூத் கமிட்டிக்குக்கூட ஆட்களைத் தேடவேண்டிய நிலை என்பது தான் வேடிக்கை!

பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி.

`மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே எவ்வளவோ இருக்கும். டெல்லிக்கு ஏன் போகிறோம், யாரைப் பார்க்கிறோம் என்பதையெல்லாம் வெளிப்படையாகக் கூற முடியாது’ என்று மாநில அமைச்சர் ஜெயக்குமார் கூறுவது சரியா?

இவர்கள் ஒன்றும் மாமன் - மச்சான்கள் அல்லர், ‘எங்களுக்குள் ஆயிரம் இருக்கும்’ என்று சொல்வதற்கு. இவர்கள், மக்கள் பிரதிநிதிகள். மக்களின் தேவைக்காகச் சந்திக்கிறார்கள் என்றால், வெளிப்படையாகச் சொல்ல எந்தத் தயக்கமும் இருக்காது... இருக்கவும் கூடாது!

பொன்விழி, அன்னூர்.

எத்தனையோ இலவசங்களை வழங்கும் தமிழக அரசு, இருசக்கர வண்டி வைத்திருக்கும் குடும்பத்தினருக்கு ரேஷன் கார்டு மூலமாக இலவச ஹெல்மெட் வழங்குமா?

அட, அடுத்த தேர்தலுக்கு அருமையான யோசனை!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!