அலசல்
Published:Updated:

கழுகார் பதில்கள்

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டாலின் ( படம்: வி.ஸ்ரீனிவாசுலு )

‘கிடைக்கிற வரை லாபம்’ என்கிற மனோபாவம் கொண்டவர்கள்தான் இங்கே அதிகம்.

@மா.மீனாட்சிசுந்தரம், மதுரை.

லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றவர்கள், ராஜ்யசபா மூலம் எம்.பி ஆவதுதான் ஜனநாயகமா?

லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவதே ‘பணநாயகம்’ என்று மாறிவிட்டதே!

@அ.ரா‌ஜப்பன், கருமத்தம்பட்டி.

எம்.எஸ்ஸி பட்டம்பெற்ற பெண் ஒருவர், கோயம்புத்தூர் மாநகராட்சியில் துப்புரவாளர் பணியில் சேர்ந்திருப்பது எதைக் காட்டுகிறது?

‘செய்யும் தொழிலே தெய்வம்... அந்தத் திறமைதான் நமது செல்வம்’ என்று பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல் வரி களில் இருக்கும் உண்மையை எல்லோரும் உணர வேண்டும் என்பதைக் காட்டுகிறது. ஆனால், இதைச் சொல்லி மட்டும் அப்படியே கடந்துவிட முடியவில்லை. ‘கல்வி வள்ளல்’கள் பிழைப்பதற்காக ஏகப்பட்ட படிப்புகள் மற்றும் கல்லூரிகளை உருவாக்கிக் கொண்டே இருக்கும் அரசுகள், படிப்புகளுக்கேற்ற வேலைகளை உருவாக்குவ தில்லை. ‘வேலை தருவது/தேடித்தருவது’ தங்களுடைய வேலை இல்லை என்பதுபோலவும் ஒதுங்கிக்கொள்கின்றன. இதையெல்லாமும் சுட்டிக்காட்டித்தான் ஆகவேண்டும்.

@இரா.கோதண்டராமன், அசோக் நகர், சென்னை-83.

அரசாங்கத்தில் நல்ல நல்ல பதவிகளில் இருப்பவர்கள்கூட லஞ்சம் வாங்கி, தங்கள் பதவியை இழப்பது ஏன்?

‘கிடைக்கிற வரை லாபம்’ என்கிற மனோபாவம் கொண்டவர்கள்தான் இங்கே அதிகம். அப்படி இல்லாதவர்கள்மீது, ‘பிழைக்கத் தெரியாதவர்’ என்பது தொடங்கி பலவிதமான முத்திரை களைக் குத்திக் கேவலப்படுத்துகிறது இந்தச் சமூகம். ஓட ஓட விரட்டப்படுபவர்கள், ஒரு கட்டத்துக்குமேல் தாக்குப்பிடிக்க முடியாமல் வீழ்கிறார்கள். இதிலிருந்தெல்லாம் தப்பிப் பிழைத்து, கடைசி வரை நேர்மையோடு நிற்பவர்கள் அரியவகை மனிதர்களே. அவர்களின் சதவிகிதம் 0.0000000000001 என்கிற அளவில்கூட இல்லை.

ஸ்டாலின்
ஸ்டாலின்
படம்: வி.ஸ்ரீனிவாசுலு

@`திருப்பூர்’ அர்ஜுன்.ஜி, அவிநாசி.

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் சட்டமன்றத்தை தி.மு.க புறக்கணிக்கிறதே... இது சரியா?

நூற்றுக்கு நூறு சரி. ஊருக்கே உதாரணமாக இருக்க வேண்டியவர்களே கும்பலாகக் கூடிக்கூடிப் பேசிக் கொண்டிருந்தால், மக்களிடம் போய் எப்படி எடுத்துச் சொல்ல முடியும்?

ஜி.வி.மனோ, கொலுவைநல்லூர், தூத்துக்குடி மாவட்டம்.

கொரோனா வைரஸ், சீனாவால் உருவானதா... உருவாக்கப்பட்டதா?

‘இதை உருவாக்கியது நீதான்’ என்று அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொண்டுள்ளன. உருவானதா அல்லது உருவாக்கினார்களா என்பது அவர்களாக ஒப்புக்கொண்டால்தான் தெரியும். ஆகமொத்தத்தில், ‘வல்லரசுகளைவிட உலகத்துக்குத் தேவை நல்லரசுகளே’ என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது.

@ஸ்ரீமல்லிகா குரு, மேற்கு மாம்பலம், சென்னை-22.

தமிழக காங்கிரஸ் எம்.பி-யான விஷ்ணுபிரசாத் அடிக்கடி பா.ஜ.க தலைவர்களைச் சந்திக்கிறாரே?

ஒருவேளை, பாட்டாளி மச்சான் தந்த அறிவுரையாக இருக்குமோ!

@ப்ரதீப்குமார், வஞ்சிபாளையம்.

நகரும் ரேஷன் கடைகள் (மொபைல்) வெற்றிபெறுமா?

நிச்சயமாக வெற்றிபெறத்தான் செய்யும். அதேசமயம், அதிலும் அளவைக் குறைத்துக் கொடுப்பது, அரிசி மூட்டையைப் பதுக்குவது எல்லாமும் வெற்றிகரமாகவே இருக்கும். இந்தத் தகிடுதத்தங்களுக்கெல்லாம் எத்தகைய சூழலிலும் பிரச்னை வந்துவிடாத அளவுக்கு ஏற்பாடுகள் செய்த பிறகே எதையுமே நம் அரசுத் துறையினர் கையிலெடுப்பார்கள்.

@மு. நடராஜன், திருப்பூர்-7.

முதலில் பாதிப்புக்குள்ளான சீனா, வெகுவிரைவில் இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டது. ஆனால், இத்தாலியில் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றனவே?

‘தும்பைவிட்டு வாலைப் பிடித்தால்’ இப்படித்தான். ‘எங்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை கொடுக்கத்தான் செய்தது. ஆனால், அதையெல்லாம் அசட்டை செய்துவிட்டு பொது இடங்களுக்கெல்லாம் சென்றோம். அதன் விளைவைத்தான் தற்போது அனுபவிக்கிறோம். உலக மக்களே... இந்தத் தவற்றை நீங்கள் செய்யாதீர்கள்’ என்று இத்தாலி தேசத்து பெண் ஒருவர் உருகி உருகி எழுதியதாக ஒரு கடிதம் ஊடகங்களில் உலா வருகிறது. அது, நமக்கான இறுதி எச்சரிக்கையும்கூட!

@ஆர்.நாராயணசாமி, ஒரத்தநாடு, தஞ்சாவூர் மாவட்டம்.

‘குற்றச்சம்பவம் எப்படி நடந்தது என்று காவல்துறை முன் விவரிக்க மாட்டேன்’ என ஒவ்வொருவரும் கோர்ட்டுக்கு சென்றால்?

அது ஆபத்தானது. அதேசமயம், நடந்த சம்பவத்தைப் பற்றி ஏற்கெனவே விசாரித்துவிட்ட பிறகு, ‘நாங்க ஆளுங்கட்சி. உன் கண்ணுல விரல விட்டு ஆட்டுவோம்ல’ என்று ஒருவரை அலைக் கழிப்பதும் மனஉளைச்சலுக்கு உள்ளாக்குவதும் சரியல்லதானே. அது விபத்து என்று அலட்சியமாக விட்டுவிடாமல், முக்கியத்துவம் கொடுத்து விசாரிப்பது சரியே. அதேசமயம், ஆளுங்கட்சிப் புள்ளிகள், அமைச்சர்கள் மீதெல்லாம் சுமத்தப் படும் பஞ்சமாபாதகக் குற்றச்சாட்டுகள் குறித்தெல்லாம் இப்படி விசாரிப்பதில்லையே! பொள்ளாச்சி தொடங்கி இதற்கு எத்தனையோ உதாரணங்கள் இருக்கின்றனவே!

ஹெச்.மோஹன், மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்.

எங்கள் ஊரின் பெயர் மீண்டும் பத்திரிகை மற்றும் மீடியாக்களில் பிரபலமாகும் காலம் வருமா?

ம்... உங்களுக்கு இப்படியும் ஒரு மோகம்!

அ.யாழினி பர்வதம்,சென்னை-78.

‘எங்கள் கைலாசா நாட்டை கொரோனா தாக்காது. எங்களை பரமசிவன் பாதுகாக்கிறார்’ என்கிறாரே நித்யானந்தா?

இவர் வேறு அவ்வப்போது குறுக்கு மறுக்காக சைக்கிளை ஓட்டி கிச்சுக்கிச்சு மூட்டிக்கொண்டிருக்கிறார்.

நித்யானந்தா
நித்யானந்தா

லட்சுமி செங்குட்டுவன், வேலூர், நாமக்கல் மாவட்டம்

எம்.ஜி.ஆர் ஆட்சியில் புயல், ஜெயலலிதா ஆட்சியில் சுனாமி, எடப்பாடி ஆட்சியில் கொரோனா... இது எப்படி இருக்கு?

பக்தவத்சலம் ஆட்சியில் தனுஷ்கோடியைச் சின்னாபின்னமாக்கிய சூறாவளி, கருணாநிதி ஆட்சியில் ‘நிஷா புயல்’, ஓ.பி.எஸ் ஆட்சியில் ‘வர்தா புயல்’ இதையெல்லாம் சொல்ல மறந்து விட்டீர்களே!

@தீப்தி பிரதீப்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் இடஒதுக்கீடு சாத்தியமா?

அரசாங்கம் நினைத்தால் எதுவும் சாத்தியமே. ஏற்கெனவே கருணாநிதி ஆட்சியின்போது கிராமப்புற மாணவர்களுக்கென்று சில படிப்பு களில் சிறப்பு ஒதுக்கீடு இருந்தது. அது, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவ தாகவும் இருந்தது. அதேபோல் இந்த உள் ஒதுக்கீடும் நம்பிக்கையை விதைக்கட்டும். ஆனால், உச்ச நீதிமன்றம் வரைக்கும் சிலர் ஓடுவார்கள். உடனே, ‘நாங்கள் என்ன செய்ய முடியும், உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டது’ என்று ‘நீட்’போல் ஜகா வாங்காமல் இவர்கள் உறுதியாக இருக்க வேண்டுமே!

@கி.முருகன், மாப்பிள்ளைக் குப்பம், திருவாரூர் மாவட்டம்..

கொரோனா பாதிப்பைத் தடுக்கும் வகையில் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உட்பட ஆன்மிகத் தலங்கள் அனைத்திலும் பக்தர்கள் வருகை தடைசெய்யப்பட்டுள்ளது. கழுகாரின் ஆழ்மனதில் ஏதேனும் உதித்ததா?

‘அந்தத் தெய்வமே கலங்கி நின்னா...’ மொமென்ட்!

‘வண்ணை’கணேசன், சென்னை-110.

‘வர்த்தக நிறுவனங்களை மூடுவதால் வைரஸிலிருந்து தப்பிக்கலாம். ஆனால், பசியால் உயிரிழப்பு ஏற்படும்’ என்று சிவசேனாவின் ‘சாம்னா’ பத்திரிகை எச்சரிக்கிறதே!

உண்மைதான். அது, கொரோனாவைவிடக் கொடியதாயிற்றே. அரசாங்கங்கள் அதன் மீதும் எச்சரிக்கையோடு கண் பதிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

எஸ்.ராமதாஸ், சேலம்-30.

2000-மாவது ஆண்டு தொடங்கியதி லிருந்தே பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், சிக்குன்குன்யா, டெங்கு காய்ச்சல், கொரோனா எனத் தொடர்கின்றன. கலி முற்றுவதையும் மனித இனம் மறையப் போவதையும் தானே இவையெல்லாம் காட்டுகின்றன?

இதற்கு முன்பாக ஸ்பானிஷ் ஃப்ளு, பெரியம்மை, சின்னம்மை, பிளேக், காலரா இப்படி எத்தனையோ வந்துள்ளன. அவற்றையெல் லாம் வென்றுதான் இன்றைக்கும் உயிர்த்திருக்கிறது இந்த இனம். எனவே, தேவையற்ற பயத்தையும் பதற்றத்தையும் பரவவிடாமல் விட்டொழிக் கலாமே!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!