Published:Updated:

கழுகார் பதில்கள்

கிரண் பேடி
பிரீமியம் ஸ்டோரி
கிரண் பேடி

முன்னவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களை எதிர்த்து பந்துவீசிக்கொண்டிருந்தார். பின்னவர், காலி கிரவுண்டில் பந்து வீசுகிறார்

கழுகார் பதில்கள்

முன்னவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களை எதிர்த்து பந்துவீசிக்கொண்டிருந்தார். பின்னவர், காலி கிரவுண்டில் பந்து வீசுகிறார்

Published:Updated:
கிரண் பேடி
பிரீமியம் ஸ்டோரி
கிரண் பேடி

சி.நாகராஜன், புலியகுளம்.

தேர்தல் ஆரம்பமாகிவிட்டது. கருத்துக் கணிப்புகளும் களைகட்டும். கருத்துக் கணிப்புகள் குறித்த செய்தி ஏதாவது..?

அரசியல் ஆய்வாளர்கள் பிரணாய் ராய் மற்றும் தொராப் சொபாரிவாலா இருவரும் எழுதியிருக்கும் `The Verdict - Decoding India’s Election’ என்ற நூல் 392 தேர்தல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. 2019-ல் வெளியான இந்நூலில் கருத்துக் கணிப்புகள் குறித்த தகவல்களும் புள்ளிவிவரங்களும் இடம்பெற்றுள்ளன. ஒருவரை கருத்துக் கணிப்புக்காக அணுகினால், ஆகும் நேரம் சராசரியாக 20 நிமிடங்கள். ஆனால், மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் ஒரு மணி நேரம். காரணம், கருத்துக் கணிப்புக்காக அணுகுபவர்களையே கேள்வி கேட்கும் அரசியல் விழிப்புணர்வு அம்மாநிலங்களில் அதிகம் என்கிறார்கள். கருத்துக் கணிப்புக்கு உகந்த மாநிலங்களாக ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கேரளா, ஹரியானாவையும் கணிக்கக் கடினமான மாநிலங்களாக தமிழ்நாடு, ஆந்திரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களையும் நூலாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்!

கழுகார் பதில்கள்

முத்துராஜா, நல்லூர்பாளையம்.

ஆட்சிகளுக்கு எதிர்க்குரல் கொடுக்க மக்களுக்கோ, பிரபலங்களுக்கோ ஏன் தயக்கம்?

போராடும் விவசாயிகளை ‘தீவிரவாதிகள்’ என்று சொன்ன கங்கனா ரணாவத்துக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. விவசாயிகள் போராட்டத்தில் அரசு கவனம்கொள்ள வேண்டும் என்று குரல் கொடுத்த டாப்ஸி, அனுராக் காஷ்யப் ஆகியோர் வீட்டில் வருவான வரித்துறை ரெய்டு நடந்தது. இப்போது, ஏன் என்று புரிந்திருக்குமே!

டாக்டர் கே.விஸ்வநாதன், கோவை.

கொரோனா பாதிப்புக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ள புத்தகக் காட்சியில், விற்பனை மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் எப்படி கழுகாரே?

கொரோனாவுக்குப் பிறகும், பழைய கூட்டம் வருமா என்று பயந்திருந்த பதிப்பாளர்களுக்கு மகிழ்ச்சிதான். கூட்டமும் சரி... புத்தக விற்பனையும் சரி... எதிர்பார்த்ததைவிட அதிகம் என்கிறார்கள். சமூக இடைவெளி, கொரோனா பாதுகாப்பு விஷயங்களெல்லாம் நாட்டில் எல்லா இடங்களிலும் எப்படியோ... அப்படித்தான்!

@வ.நடராஜன், கூடுவாஞ்சேரி.

கட்சித்தாவல் என்பது கொள்கையை நோக்கியா, பதவியை நோக்கியா?

கொள்கையைச் சொல்லி... பதவியை நோக்கி!

@ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.

அ.தி.மு.க-வில் பா.ஜ.க தலையீடு இல்லை என்கிறாரே அமைச்சர் ஜெயக்குமார்?

‘‘கொத்துச் சாவி என்கிட்டதான் இருக்கு. ஆனா, என் கணவர் சொல்றத மட்டும்தான் கேட்பேன்” என்று பெரும்பாலான மனைவிகள் சொல்வதைப்போலத்தான்!

@மன்னை சித்து, மன்னார்குடி-1.

‘அரசியலுக்கு வாங்க’ என ரஜினிக்கு அழுத்தம். ‘அரசியலுக்கு வராதீங்க’ என சசிகலாவுக்கு நிர்பந்தம். ஆட்சி அதிகாரம் குவிந்துகிடப்பதால், அனைத்து அஸ்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றனவா?

‘போரில் பயன்படுத்தப்படும் எல்லா அஸ்திரங்களும் எதிரியைத் துளைப்பதில்லை. வீணாகும் அஸ்திரங்களே அதிகம்’ என்று ஒரு போர்க்குறிப்பு சொல்கிறது!

@சீனிவாசன், கண்டனூர், சிவகங்கை (மா).

இனி, தினகரனின் அ.ம.மு.க வண்டியின் ஓட்டம் எப்படியிருக்கும்?

வண்டியா... டயர் மட்டும்தானே இப்ப மிஞ்சியிருக்கு?

@பொ.பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி.

பறக்கும் படை நடவடிக்கைகள் சாமானிய மக்களை பாதிப்படையச் செய்துவிட்டனவே?

தேர்தல் சமயங்களில், கட்டுப்பாடுகள் என்ற பெயரில் கடுமையான சோதனைகள் சாமானிய மக்களின்மீது ஏவப்படுகின்றன. ஆனால், எந்தத் தேர்தலிலும் பணப் பட்டுவாடா மட்டும் நின்றபாடில்லை. இந்தக் கெடுபிடிகளால் லாபம் என்னவோ படைகளுக்கே!

@வேதாந்த தேசிகன் மணி, அவினாசி.

ம.நீ.ம கூட்டணியில் தே.மு.தி.க இணைந்தால் பலன் இருக்குமா?

யாருக்கு?

ராம சுந்தரம், மேட்டுப்பாளையம்.

களத்தில் நிற்கும் எந்தக் கட்சியின் மீதும் நம்பிக்கை இல்லாததால், இந்தச் சட்டமன்றத் தேர்தலை ‘காந்திய மக்கள் இயக்கம்’ முற்றாகப் புறக்கணிப்பதாக தமிழருவி மணியனின் அறிக்கை வெளியாகியுள்ளதே!

ஐயையோ.... மக்கள் இந்த அதிர்ச்சியை எப்படித் தாங்கிக்கொள்ளப்போகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை!

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

புதுச்சேரி முன்னாள் ஆளுநர் கிரண் பேடிக்கும் இந்நாள் ஆளுநர் தமிழிசைக்கும் என்ன வித்தியாசம்?

கழுகார் பதில்கள்

முன்னவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களை எதிர்த்து பந்துவீசிக்கொண்டிருந்தார். பின்னவர், காலி கிரவுண்டில் பந்து வீசுகிறார். ஆனால், இரண்டு பேருக்கும் அஜெண்டா ஒன்றுதான்!

கழுகார் பதில்கள்

@திருப்பூர்.அர்ஜுனன்.ஜி, அவிநாசி.

கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என முடிவுசெய்து, எந்தெந்தத் தொகுதி அவர்களுக்கு என்று பிரித்துக் கொடுப்பதற்கு ஏன் இத்தனை அல்லோலகல்லோலங்கள்?

நீங்கள் சொல்வதுபோல தொகுதிகள் மட்டும் பேசிப் பிரித்து முடிப்பதென்றால், இவ்வளவு சிரமம் இருக்காது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism