Published:Updated:

கழுகார் பதில்கள்

இந்த விலையேற்றத்தைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி அடுத்த மாதம் போராட்டம் நடத்தும்

பிரீமியம் ஸ்டோரி

டி.சி.இம்மானுவேல், மயிலாடுதுறை.

குலாம் நபி ஆசாத்தின் பிரிவு உபசார விழாவில், திருச்சி சிவா எம்.பி இந்தியில் பாடியிருப்பதை எப்படி எடுத்துக்கொள்வது?

அவர் இந்தியை எதிர்க்கவில்லை; இந்தித் திணிப்பைத்தான் எதிர்க்கிறார் என்று அவரே விளக்கம் சொல்லிவிட்டாரே!

உமா மகேஸ்வரன், விழுப்புரம்.

கடைசிகட்ட தொண்டர்கள் பலரும், தங்கள் தலைவருக்காகவும் கட்சிக்காகவும் மாய்ந்து மாய்ந்து வேலை செய்தாலும், கடைசி வரை ஏழையாகத்தானே இருக்க முடிகிறது?

குடும்பத்தைப் பார்க்காமல், `கட்சி... கட்சி’ என்று திரிந்தால் வேறு என்னதான் மிஞ்சும்? கட்சி வேலை என்பதெல்லாம் புலி சவாரிபோலத்தான். ‘புலியின் முதுகில் பயணம் செய்பவன், அதன் வயிற்றில் பயணத்தை முடிக்க வேண்டியிருக்கும்’ என்கிறது ஒரு சீனப் பழமொழி!

லட்சுமி செங்குட்டுவன், வேலூர்.

ஒரு மாற்றத்துக்காக, கழுகார் அரசியல் ஜோக் ஒன்றைக் கூற முடியுமா?

இன்றைய தேதிக்கு அரசியலே ஜோக்தானே பாஸ்!

கழுகார் பதில்கள்

பால சுந்தரம், தேனி.

ராகுல் அங்கங்கே புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறார். அப்படியிருந்தும் தமிழக காங்கிரஸுக்கு என்னதான் பிரச்னை?

உடனடிச் செயல்பாடுகள் இல்லாததுதான். ஓர் உதாரணம் சொல்கிறேன். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்ந்ததற்கு அறிக்கைவிட்டார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி. அப்போது ஒரு பேட்டியில், “இந்த விலையேற்றத்தைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி அடுத்த மாதம் போராட்டம் நடத்தும்” என்றார். எவ்வளவு ஸ்பீட் பாருங்கள்!

செ.அ.ஷாதலி. கோனுழாம்பள்ளம்.

அரசியல்வாதிகளில் ஏன் போலிகள் இல்லை?

ஹி... ஹி... இப்படி பதில் தெரிஞ்சுக்கிட்டே கேள்வி கேட்டா எப்படிங்க!?

சீனிவாசன், கண்டனூர், சிவகங்கை (மா).

``ஊழல், வாரிசு அரசியல், பிரித்தாளும் சூழ்ச்சி போன்றவையே திராவிடக் கட்சிகளின் கொள்கைகளாக மாறிப்போய்விட்டன’’ எனத் தமிழக பா.ஜ.க பொறுப்பாளர் சி.டி.ரவி கூறுகிறாரே?

அவர்கள் கூட்டணி வைத்திருக்கும் அ.தி.மு.க-வும் ஒரு திராவிடக் கட்சிதான் என்பதை மறந்து பேசிவிட்டார்போல!

சிவராமன், பெங்களூர்.

கமல்ஹாசனின் ‘சக்கர நாற்காலி’ கமென்டைக் கேட்டீர்களா?

“அஞ்சு வருஷத்துல பண்ண வேண்டிய வேலைகளைச் செய்வேன். அப்புறம் சக்கர நாற்காலியில இருந்துக்கிட்டு மக்களைத் தொந்தரவு பண்ண மாட்டேன்” என்று அவர் சொன்ன தொனியும், அதற்குக் கைதட்டிய கூட்டத்தின் அறியாமையும் கண்டிக்கத்தக்கதே. கமல் கொண்டாடும் அறிவியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங் உள்ளிட்ட பலர் சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டே சாதனை செய்தவர்கள்தான். அரசியல் மேடை கமலையும் விட்டுவைக்கவில்லை என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

கழுகார் பதில்கள்

திருப்பூர். அர்ஜுனன்.ஜி, அவிநாசி.

அகமதாபாத்தின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தின் பெயர் அதிரடியாக மாற்றப்பட்டிருக்கிறதே?

அதானி முனை, ரிலையன்ஸ் முனை என்று இரு முனைகளைக் கொண்ட மைதானத்துக்கு அதற்கேற்ற பொருத்தமான பெயரைத்தானே வைக்க முடியும்!

வண்ணை கணேசன், சென்னை-110.

தே.மு.தி.க யாரிடமும் கெஞ்சவில்லை என்று சுதீஷ் கூறியிருக்கிறாரே?

“நான் அழவில்லை. கண்ணு வேர்க்குது” என்ற வசனம்தான் நினைவுக்கு வருகிறது.

மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி, மதுரை.

புதுச்சேரி சம்பவம் மற்ற மாநிலங்களுக்கு அழுத்தமாகச் சொல்வது என்ன?

புதுச்சேரி மட்டுமல்ல... அருணாசலப்பிரதேசம், கோவா, மணிப்பூர், மேகாலயா, கர்நாடகா, சிக்கிம், மத்தியப்பிரதேசம், பீகார் உட்பட பல மாநிலங்கள் சொல்வதும் ஒரே செய்திதான். தேர்தலில் நின்று அதிக இடங்களில் வென்று ஆட்சியைப் பிடிக்கும் முறை என்பதெல்லாம் இந்திய அரசியலில் மாறிவருகிறது.

மல்லிகா அன்பழகன், சென்னை-78.

கமலுக்கு ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா?

ரஜினி பாணியிலேயே பதில் சொல்வதென்றால்... அது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்!

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

``தமிழக அரசியலில் உள்ள வெற்றிடத்தை நிரப்பவே சசிகலா வந்திருக்கிறார்’’ என்கிறாரே பாரதிராஜா?

அந்த வெற்றிடத்துக்கு வாயிருந்தால் “என்னை வெச்சுக்கிட்டு எவ்வளவு அரசியல்தான் பேசுவீங்க!?” என்று கேட்டிருக்கும்.

கழுகார் பதில்கள்

ஞானவேல், மேல்மருவத்தூர்.

சசிகலாவின் பலம் என்ன... பலவீனம் என்ன?

பலம் அவரது அமைதி. அதனாலேயே சசிகலாவின் எதிர்முகாமில் உள்ளவர்கள் அவரது மனவோட்டத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். அதேசமயம், அவரது பலவீனமும் அதுதான். அவரைச் சுற்றியுள்ளவர்களே அவரது மௌனத்துக்குக் காரணம் புரியாமல் முழிக்கிறார்கள்!

சம்பத்குமாரி, பொன்மலை.

செய்ய வேண்டிய விளம்பரங்களையெல்லாம் செய்துவிட்டு, ‘இனி விளம்பரம் செய்ய மாட்டோம்’ என்று தமிழக அரசு கூறியிருக்கிறதே?

எல்லாம் ஒரு விளம்பரம்தான்!

இ.நாகராஜன், சாத்தூர்.

பொதுவாக மத்தியில் ஆளும் அரசுகள், தங்களது கட்சியைச் சேர்ந்த முக்கியமானவர்களை மாநில ஆளுநர்களாக நியமிப்பது ஏன்?

ஒரு கடைக்குக் கிளை ஆரம்பித்தால், சொந்தக்காரர்களையே கல்லாவில் உட்காரவைப்பதுதானே பாதுகாப்பு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு