Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்

கொரோனாவின் அட்டகாசத்தைவிட, தமிழக அரசாங்கத்தின் அட்டகாசம் தாளவில்லை.

@காந்தி, திருச்சி.

மீதியுள்ள பஞ்சாயத்துத் தேர்தல் என்ன ஆனதோ?

ம்... வாழ்க்கையே ‘பஞ்சராகி’க் கிடக்கிறது. நீங்கள் கொரோனாவுக்குக் குறுக்கே சைக்கிளை ஓட்டத் துடிக்கிறீர்களே!

@திருப்பூர் சாரதி.

‘மதுவிலக்கை அமல்படுத்தினால், கள்ளச்சாராய தாதாக்கள் உருவாகி பணக்காரர்கள் ஆகிவிடுவார்கள்’ என்று ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி கருணாநிதி கூறியுள்ளாரே?

பணக்காரர்களாக மட்டுமல்ல, அரசாங்கத்தையே ஆட்டிப்படைக்கும் தொழிலதிபர்கள், கல்வி வள்ளல்கள் என்றெல்லாம்கூட விஸ்வரூபமெடுத்து விடுவார்கள். இன்றைய/நேற்றைய மக்கள் பிரதிநிதிகள், இன்றைய கல்வி வள்ளல்களில் சிலர் என, பலரும் ஒருகாலத்தில் இப்படி கள்ளச்சாராயம் காய்ச்சிய வர்கள்தான். அதற்காக, அரசாங்கமே சாராயம் விற்பதால் அவர்கள் அடங்கிவிடுவார்கள் என அர்த்தமல்ல. இன்றைக்கு சாராய ஆலை, சாராய சப்ளை, பார் உரிமம் என சட்டபூர்வமாக அமர்ந்திருப் பவர்களில் பலரும் அதே ‘கள்ளச்சாராய பார்ட்டி’கள்தான்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

@திருச்சிற்றம்பலம் சுரேஷ்.

தமிழக அரசு எப்போதுதான் சுதந்திரமாகச் செயல்படப்போகிறது?

ஓ... ‘அடிமை அரசு’ என்று அடிக்கடி மு.க.ஸ்டாலின் சொல்வதைவைத்து கேட்கிறீர்களோ!

@நவோதயா செந்தில், புதுச்சேரி.

ஊரடங்கு காலத்தில் கழுகார் விரும்பிப் படித்த புத்தகம்?

‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார் அடிக்கடி வற்புறுத்திக் கொண்டே இருக்கும் ‘சிறியதே அழகு’ (small is beautiful) என்ற புத்தகம். இது, ஜெர்மனியைச் சேர்ந்த பொருளியல் வல்லுநர் இ.எஃப்.ஷுமாசர் (E.F.Schumacher) எழுதிய புத்தகம். இந்த கொரோனா காலத்துக்கு மட்டுமல்ல, எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய பொக்கிஷம் அது. ‘பொருளாதார வளர்ச்சி’ என்ற பெயரில் உலகம் மீள முடியாத பல்வேறு சிக்கல்களில் மாட்டிக்கொண்டு தவிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் ஆதாரங்களுடன் அலசி ஆராய்ந்து, 1973-ம் ஆண்டிலேயே வெளியிடப்பட்ட புத்தகம். ‘அதிக உற்பத்தி என்பதைவிட, அதிகமானவர்களால் செய்யப்படும் உற்பத்திதான் ஸ்திரமற்ற பொருளாதாரம், சுற்றுச்சூழல் சீர்கேடு, வேலை வாய்ப்பின்மை எனப் பல பிரச்னை களுக்கும் தீர்வைத் தந்து, சமூகத்தை எந்நாளும் நலமுடனும் மகிழ்வுடனும் வாழவைக்கும்’ என்பதுதான் இந்தப் புத்தகத்தின் அடிநாதம். உண்மைதானே... சிறியதாக இருக்கும்போதுதானே எதுவுமே அழகு!

@ராம்குமார்.

‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்பதில், ‘மருத்துவம் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கும்’ என்று இனி சேர்த்துச் சொல்லலாம்தானே?

புதிதாக எதையும் சேர்க்கத் தேவையே இல்லை. ‘தொழில்’ என்பதிலேயே மருத்துவம், தூய்மைப்பணி என எல்லாமும் அடக்கம். ஆனால், முதன்மைத் தொழில் என்பதால் உழவுக்கு தனிமரியாதை கொடுத்துவிட்டு, மற்ற அனைத்தையும் ‘தொழில்’ என்பதில் அடக்கிவிட்டார்கள் முன்னோர்கள். நாம்தான், அதை வைத்து வர்க்கபேதம் பார்த்து சில தொழில்களையெல்லாம் ஒரு தொழில் என்றே ஏற்றுக்கொள்ளாமல் ஒதுக்கிவைக்கிறோம். தேவைப்படும்போது மட்டும் தூக்கிப் பிடிக்கிறோம். உழவர்களையும்கூட அந்த நிலையில்தானே இதுநாள் வரை வைத்திருந்தோம். தேவை வந்துவிட்டதால், தூய்மைப் பணியாளர்களின் கால்களில் விழுந்து இப்போது ‘வைரல்’ ஆக்குகிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

@நீலன், கோயம்புத்தூர்.

‘2 கோடி ரூபாய் மதிப்புள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்துவிட்டன’ என்று விவசாயிகள் கதறியபோது கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள், ‘வீட்டில் பால் கெட்டுப்போச்சு’ என்று சொன்னதும் எஸ்.வி.சேகர் வீட்டுக்கு ஓடியிருக்கிறார்களே?

விவசாயிகளின் கதறல், எஸ்.வி.சேகரின் ட்வீட் போல் இங்கே ‘ட்ரெண்ட்’ ஆவதில்லையே!

கழுகார் பதில்கள்

@இ.முத்துக்குமார், கிருஷ்ணாபுரம்.

‘பிரபாகரன்’ என்றாலே, அது தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைத்தான் குறிக்குமா?

அந்த மலையாள படத்தின் மூலமாக இந்தப் பெயர் சர்ச்சை ஆகியுள்ளது. ஒருவேளை அவர்களுக்கு ‘நோக்கம்’ இருந்தாலும், இதை கண்டுகொள்ளாமல் போய்விட்டாலே, அவர்களுடைய ‘நோக்கம்’ நிறைவேறாமல்போய்விடுமே!

@அன்புக்கரசி பாலசுப்பிரமணியன், மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்.

‘வீட்டு வாடகை கேட்கக் கூடாது’ என்று சொல்லும் அரசு, வீட்டுவரி, மின்கட்டணம் போன்றவற்றையெல்லாம் ரத்துசெய்யவில்லையே?

வீட்டு உரிமையாளர்களிடம் வழிவது தக்காளி சட்னி. அரசாங்கத்திடம் வழிவது ரத்தம்!

@அனன்யா, பொள்ளாச்சி, கோயம்புத்தூர் மாவட்டம்.

நடிகர் சூர்யா, தனது தயாரிப்பில் உருவான ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை இணையதளத்தில் நேரடியாக வெளியிடப் போகிறாராமே?

வெங்கட்பிரபு தயாரித்திருக்கும் ‘ஆர்.கே.நகர்’ வெளியாகியேவிட்டது. ‘இன்னும் ஓராண்டுக்கு திரையுலகின் எதிர்காலம் என்னவென்றே தெரியவில்லை’ என்று பலரும் பயந்து கிடந்த சூழலில், இணையத்தில் ‘ஒளிவிளக்கு’ ஏற்றப்பட்டுள்ளது. ‘திரையரங்கத் தொழில்’ என்பதை நம்பியே வாழ்ந்துகொண்டிருந்த பலரும் நிச்சயம் பாதிக்கப்படவே செய்வார்கள்.

எஸ்.டி.டி தொலைபேசி பூத்களையெல்லாம், செல்போன் காணாமல் அடித்தபோது இப்படித்தானே நிகழ்ந்தது. மாற்றுவழிகளைத் தேடுவதைத் தவிர வேறுவழியே இல்லை.

@சரவணன்.ஓ.கே.ஏ.ஆர், சென்னை-2.

‘ஊரடங்குக் கட்டுப்பாடுகளை அவசரப்பட்டுத் தளர்த்த வேண்டாம்’ என்று உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறதே?

நூறு சதவிகிதம் தேவையான எச்சரிக்கையே. அதேசமயம், அடுத்த வேளை உணவுக்குக்கூட வழியில்லாமல் அல்லாடும் ஏழைகளின் வயிற்றுப்பசி கொரோனாவைவிட பேராபத்தானது என்று பொருளாதார நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் எச்சரிப்பதையும் சேர்த்தே மனதில்கொள்ள வேண்டும்.

கழுகார் பதில்கள்

@ப.கோபிபச்சமுத்து, கிருஷ்ணகிரி-1.

சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷை சில நாள்களாக ஊடகங்களில் காணவில்லையே?

கொரோனாவின் அட்டகாசத்தைவிட, தமிழக அரசாங்கத்தின் அட்டகாசம் தாளவில்லை. மோசமான ஒரு சூழல். அதைப் பற்றி நாட்டு மக்களுக்கு ஊடகங்கள் வாயிலாக எடுத்துச் சொல்ல வேண்டும். தினமும் மாலையில் ஓர் அறிக்கையாக வெளியிட்டால்கூட போதும். அதைவிட்டு, ‘நான்தான் மைக் முன்னே நிற்பேன்’ என்று மாற்றி மாற்றி வேஷம்போட்டு வந்து நிற்கிறார்கள். அதிலும், ‘நீயா... நானா?’ என்று போட்டி போடுகிறார்கள். இவர்களுக்கு நடுவே, ‘நான்தான்’ என்று கொடூரமாகச் சிரித்தபடி முன்னேறிக் கொண்டேபோகிறது கொரோனா!

@வேணுகோபால், பெங்களூரு, கர்நாடக மாநிலம்.

மக்களுக்கு உதவுவதற்காக அரசாங்கப் பணத்தைத்தான் செலவிடுகிறார்கள். ஆனால், ஏதோ தமது சொந்த பையிலிருந்து கொடுப்பதுபோல் யோசிக்கிறார்களே மத்திய ஆட்சியாளர்கள்?

மக்கள் என்ன... மல்லய்யா, நீரவ் மோடி, ‘பதஞ்சலி’ பாபா ராம்தேவ் வரிசையில் வருபவர்களா! அவர்களுக்கு 68,000 கோடியை அள்ளிக் கொடுத்தால், தேர்தல் காலத்தில் ‘நன்கொடை’யாகத் திரும்பி வரும். ஆனால், எந்த நம்பிக்கையில் யோசிக்காமலேயே மக்களுக்குக் கொடுப்பது?

@மு.மதிவாணன், காஞ்சிபுரம்.

‘இந்து மதத்தைக் காப்பாற்றுவதற்காக இந்துக்கள் குறைந்தது ஐந்து குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கெல்லாம் இந்து மதத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும்’ என்று நித்யானந்தா கூறியிருக்கிறாராமே?

எந்த மதத்தையும்விட, ‘இயற்கை நேயம்’ என்பதுதான் மிகமிக முக்கியம். அதைத்தான் உலக மக்கள் அனைவருக்கும் அரசியல், சாதி, மத, சமூக வேறுபாடில்லாமல் முதலில் கற்றுக்கொடுக்க வேண்டும். மனிதன் வாழ்ந்தால்தான், மதங்கள் வாழ முடியும்.

@வடபழநி, ஆர்.கே.மகேஷ், சென்னை.

பிறந்த நாளுக்கு கொரோனா கேக் ஆர்டர் செய்வதெல்லாம் கொஞ்சம் ஓவர்தானே?

அந்த உருவத்தைப் பார்த்தாலே பலருக்கும் வயிற்றைக் கலக்கும். அப்படியிருந்தும்கூட ‘பாசிட்டிவ்’வாக அணுகும் அவர்களுக்கு ‘இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!’ என்று நீங்களும் சேர்ந்தே சொல்லலாமே!

@எஸ்.எம்.சுல்தான், கோ.புதூர், மதுரை-7.

‘அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் கடினமாக உழைக்கும் அதிபர் என்று மக்கள் என்னைப் புகழ்கின்றனர்’ என அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளாரே?

‘வீட்டுக்கு வீடு வாசற்படி’ , ‘நாட்டுக்கு நாடு இம்சை அரசன் 23-ம் புலிகேசி’!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!