Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

‘அந்தக் காலம் மாதிரியெல்லாம் வருமா’ என யோசிப்பது, திருவள்ளுவர் காலத்துக்கு முந்தைய காலத்திலிருந்தே இருக்கிறது.

கழுகார் பதில்கள்

‘அந்தக் காலம் மாதிரியெல்லாம் வருமா’ என யோசிப்பது, திருவள்ளுவர் காலத்துக்கு முந்தைய காலத்திலிருந்தே இருக்கிறது.

Published:Updated:
கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

@ஹெச்.மோஹன், மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்.

அரசியலின் தரம் தாழ்ந்துபோனது எப்போது?

‘அரசியல்’ என்பது உருவான அந்த நொடியிலிருந்தே!

@எல்.ஆர்.சுந்தரராஜன், மடிப்பாக்கம்.

மத்திய மற்றும் மாநில மந்திரி சபைகளில் மூன்றில் ஒரு பங்கு குறைத்தால், செலவுகள் குறையும்தானே?

நல்ல யோசனை. இதுபோன்ற நேரத்தில் இப்படிப்பட்ட யோசனைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக ஏற்று செயல்படுத்த வேண்டும். ஆனால், ‘ஆட்சிகள் கரையாமல் இருக்க வேண்டும்’ என்பதில் மட்டுமே குறியாக இருப்பவர்களின் காதுகளில் இதெல்லாம் ஏற வேண்டுமே!

@சரவணகுமார் சின்னசாமி, தாராபுரம்.

காதலில் இருந்த அழகு, நேர்மை, உறுதி, அசட்டுத்தனம், வழியல், பயம் இவையெல்லாம் 90-களுக்குப் பிறகு இல்லாமல் போய்விட்டனதானே?

‘அந்தக் காலம் மாதிரியெல்லாம் வருமா’ என யோசிப்பது, திருவள்ளுவர் காலத்துக்கு முந்தைய காலத்திலிருந்தே இருக்கிறது. அதுதான் ‘நாஸ்டால்ஜியா’வின் (Nostalgia) மகிமையே. ஹலோ ‘நைன்ட்டீஸ் கிட்’ சரவணகுமார், ‘போவோமா... ஊர்கோலம்...’ என்று ‘சின்னதம்பி’ போல் நீங்கள் பாடிக்கொண்டே இருங்கள். பக்கத்திலேயே, ‘குட்டிப் பிசாசே... குட்டிப் பிசாசே... உன் தொல்லை தாங்கலையே..!’ என்று ‘2000 கிட் காளை’ ஒன்று ஆட்டம் போடட்டும். என்ன குறைந்துவிடப்போகிறது!

கழுகார் பதில்கள்

@மாணிக்கம், திருப்பூர்.

தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் மாநிலங்கள், அனைவரையும் பரிசோதித்துதானே அனுப்புகின்றன?

வெளிநாடுகளிலிருந்து வந்து இறங்கியவர்களை இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களிலும் பிப்ரவரி மாதத்திலிருந்தே ‘பரிசோதித்த’ அனுபவம் நமக்கு இருக்கிறதே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

@சையது முஹம்மது தமீம், திருமங்கலக்குடி.

‘அரசாங்க மருத்துவமனை மட்டும்தான் ஒரே வழி’ என்ற சூழலில், இப்போது சுகப்பிரசவங்களாக நடக்கின்றன. பல காரணங்களைச் சொல்லி மக்களை ‘சிசேரியன் வலை’யில் வீழ்த்தி பணம் பார்த்த தனியார் மருத்துவமனைகள், இனியாவது திருந்துமா?

அரசாங்க மருத்துவமனைகளில் தவிர்க்க முடியாத சூழல் தவிர, மற்ற அனைத்துமே சுகப்பிரசவங்கள்தான். பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளை ஒப்பிடும்போது சிசேரியன்கள் மிகமிகக் குறைவே! உயிர் காரணமில்லாமல் அரசு மருத்துவமனைகளில் கத்தரிக்கோல் தூக்குவதில்லை என்பதுதான் இதை சாத்தியப்படுத்துகிறது.

பிரசவம்தான் என்றில்லை... பல்வேறு விதமான நோய்களுக்கும்கூட ‘கொரோனா’ தற்போது ‘விடுப்பு’க்கொடுத்திருப்பது ஆச்சர்யமே! எதற்கெடுத்தாலும் கத்தரியைத் தூக்கிக் காசு பார்த்தவர்கள் திருந்த வேண்டும் அல்லது திருத்தப்பட வேண்டும்.

கழுகார் பதில்கள்

@வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டம்.

‘ஏழைகளின் வங்கிக்கணக்கில் 7,500 ரூபாய் போடுங்கள்’ என காங்கிரஸ் வலியுறுத்துகிறதே?

கார்கள், பங்களாக்கள் வைத்திருப்பவர்கள்கூட இந்தியாவில் ‘ஏழைகள்’தானே! தமிழகத்தை எடுத்துக்கொண்டால் மொத்தம் 2.07 கோடி ரேஷன் கார்டுகள் (குடும்பங்கள்) உள்ளன. சுமார் 1 லட்சம் கார்டுகள் தவிர, மற்றவை ‘அரிசி கார்டுகள்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுக்கு புயல், வெள்ளம் (பொங்கல் பரிசு) போல், இந்த கொரோனா சமயத்திலும் அரசாங்கத்தின் நிவாரணப் பொருள்கள், நிவாரணத் தொகை அனைத்தும் வழங்கப்படுகின்றன. கார்களில் சென்றுகூட இதை வாங்கிவரும் ‘ஏழை’களும் இங்கே உண்டு. ஆக, தமிழகத்தில் 2.06 கோடி ஏழைக் குடும்பங்கள். இதையே இந்தியாவுக்கு நீட்டித்தால், சுமார் 30 கோடி ஏழைக் குடும்பங்கள் (மொத்தம் சுமார் 32 கோடி குடும்பங்கள்). 7,500 ரூபாய் வீதம் வங்கியில் போட்டால்... 2.25 லட்சம் கோடி ரூபாய். ஏற்கெனவே திவாலாகிக்கொண்டிருக்கும் இந்தியா, இதைத் தாங்குமோ!

அன்றாட வாழ்க்கையின் அடிப்படைத் தேவையை பூர்த்திசெய்துகொள்ளும் அளவுக்குகூட கூலி கிடைக்காதவர்களைக் கண்டறிந்து, ‘வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறார்கள்’ என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, அவர்களுக்கு மட்டுமே உதவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஆனால், டிஜிட்டல் இந்தியாவிலும்கூட உண்மையான ஏழைகளைக் கண்டறிவது சிக்கலாகவே இருக்கிறதே!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

@ஜெ.ஜானி, போரூர், சென்னை-116.

‘பொருள்கள் தட்டுப்பாடு’ என பயமுறுத்துகிறார்களே?

தேவைக்குமேல் வாங்கிக் குவிக்காமலும், உயிர்வாழ்வதற்கு அவசியமில்லாத ஒன்றை அடித்துப்பிடித்து வாங்காமலும் இருந்தாலே போதும், அந்தப் பேச்சுக்கே இடமிருக்காது. ஆனால், மொத்தமாகக் குவித்துவைத்து அழகு பார்க்காவிட்டால் பலருக்கும் இங்கே தூக்கம் வருவதில்லை. அதனால், வசதியற்றவர்களுக்கு தகுந்த விலையில் அவை வசப்படுவதில்லை.

@ராம்குமார்.

சாப்பிட்டுவிட்டு சும்மா இருந்தால், மூலிகைச்சாறுகள் எப்படி வேலை செய்யும் கழுகாரே?

உங்களை யார் சும்மாவே இருக்கச் சொன்னது? வீட்டுக்குள்ளேயே நடமாடுங்கள், வீட்டை தினமும் தூய்மைப்படுத்துங்கள், துணிகளை கைகளாலேயே துவையுங்கள், மிதிவண்டி இருந்தால் ஸ்டாண்டு போட்டு ஓட்டுங்கள்... முழு கோழியை விழுங்கினாலும் செரித்துவிடுமே!

@அ.அழகேசன், அந்தியூர்.

நாடு முழுவதும் கல்லூரிகளை செப்டம்பர் மாதம் திறக்க, மத்திய அரசுக்கு யு.ஜி.சி பரிந்துரை செய்துள்ளதே?

இன்றைய சூழலை வைத்து இந்தப் பரிந்துரை முன்வைக்கப்படுகிறது. இதைவிட, எப்போது திறக்கப்பட்டாலும் மாணவர்களுக்கு கூடுதல் சுமையில்லாமல் பாடங்களைக் குறைத்து நடத்துவது எப்படி, மாணவர்கள் தடுமாறாமல் பதிலளிக்கும் வகையில் தேர்வுகளை எளிமையாக நடத்துவது எப்படி என்பது பற்றியெல்லாம் இப்போதே ஆலோசனைகளை முன்வைப்பதுதான் மிக நல்லது. இல்லையென்றால், ‘கடந்த ஆண்டு, இந்த ஆண்டு என அனைத்துத் தேர்வுகளையும் அடுத்தடுத்த நாள்களில் கட்டாயம் எழுத வேண்டும்’ என்று நம் ‘அதிபுத்திசாலி’ அமைச்சர்களும் அதிகாரிகளும் முடிவெடுப் பார்கள். உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என பெற்றோர்கள் ஓடுவார்கள். ‘அரசின் நடவடிக்கைகள் சரியானவை’ என்றே தீர்ப்புகளும் வரும். கடைசியில், பாதிக்கப்படுவது மாணவர் களாகத்தான் இருப்பார்கள்.

@அ.வேளாங்கண்ணி, சோளிங்கர், வேலூர் மாவட்டம்.

‘கொரோனா (கோவிட்-19)’ முடிந்த பிறகு உலகம் எப்படி இருக்கும்?

கொஞ்ச நாள்களுக்கு பரிதாபமாக இருக்கும். பிறகு, 4.5, 5.6, 7.8 என ஜி.டி.பி (உள்நாட்டு மொத்த உற்பத்தி) உயர்த்திக் காட்டப்படும். பழையபடி அனைத்து ஆட்டங்களும் ஆரம்பமாகும். கங்கை தொடங்கி அத்தனையும் சூதகமாகும். கோவிட்- 22, கோவிட்-23 என மறுபடியும் இயற்கை வேகமாகத் தயாராகிக்கொண்டிருக்கும்!

@கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு-77.

‘மக்கள் நெரிசலால்தான் கொரோனவால் சென்னை தவிக்கிறது. வேலைகளில் இல்லாதவர்கள், வேலையில் இருப்பவர்களின் வாரிசுகள் என அனைவரும் சொந்த ஊர்களுக்குத் திரும்ப வேண்டும்’ என்ற கருத்து பற்றி?

கொரோனா, இன்று கழுத்தை நெரிக்கிறது. ஆனால், போக்குவரத்து, குடிநீர், குடியிருப்பு, காற்று, இயற்கைச் சூழல், கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு எனப் பலவும் ஏற்கெனவே நெரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. ‘பெருநகர வளர்ச்சிக் குழுமம்’ என்ற பெயரில் அரசியல் வாதிகளும் அதிகாரிகளும்தான் வளர்ந்தார்களே தவிர, நகரத்தின் திட்டமிட்ட வளர்ச்சியைக் கண்டுகொள்ளவேயில்லை. அதுதான் சிக்கலே. ‘போதும்... இதோட நிறுத்திக்குவோம்’ என்று யோசிப்பதைத் தவிர வேறுவழியே இல்லை என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம் என்பது உண்மையே!

கழுகார் பதில்கள்

@ஆர்.சுந்தரராஜன், சிதம்பரம், கடலூர் மாவட்டம்.

நடிகை ஸ்ரீதேவிக்கு தேசியக்கொடி போர்த்திய அரசு, கொரோனா பாதிப்பால் இறந்த மருத்துவர்களுக்கு அந்த மரியாதையைச் செய்யலாமே?

மருத்துவர்களுக்கெல்லாம் ரசிகர் மன்றங்கள் இல்லையே!

@`முனைவர்’ கு.ஜெயமுருகன், சென்னை.

கேரளாவைப்போல் தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியவில்லையே?

‘உன்னால நான் கெட்டேன்... என்னால நீ கெட்டே’ என்கிற கதைதான். அரசாங்கத் தரப்பிலிருந்து ஒழுங்கான அறிவிக்கைகள், வழிகாட்டல்கள் சரியான நேரத்தில் வருவதில்லை. அப்படியே ஒன்றிரண்டு வந்தாலும், மக்கள் அதையெல்லாம் முழுமையாகப் பின்பற்றுவதுமில்லை.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை,

சென்னை- 600002 kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism