Published:Updated:

கழுகார் பதில்கள்

நல்லகண்ணு
பிரீமியம் ஸ்டோரி
நல்லகண்ணு

சொகுசு கார்களில் பறக்கும் காய்கறி வியாபாரி தொடங்கி கட்டுமானத் தொழிலதிபர் வரையிலும் ‘வறுமைக்கோட்டுக்குக் கீழே’ என்றே சான்றிதழ் பெற்று வைத்துள்ளனர்.

கழுகார் பதில்கள்

சொகுசு கார்களில் பறக்கும் காய்கறி வியாபாரி தொடங்கி கட்டுமானத் தொழிலதிபர் வரையிலும் ‘வறுமைக்கோட்டுக்குக் கீழே’ என்றே சான்றிதழ் பெற்று வைத்துள்ளனர்.

Published:Updated:
நல்லகண்ணு
பிரீமியம் ஸ்டோரி
நல்லகண்ணு

@வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டம்.

தெருநாய்களை ஒழிக்காமல் இப்படி உணவிட்டுக்கொண்டிருக்கிறார்களே?

‘நமக்கு மட்டுமே சொந்தமானது இந்த பூமி’ என்று நாம் போடும் ‘கெட்ட ஆட்டம்’தான், நம்மைச் சுற்றி ‘கொரோனா’ உள்ளிட்ட வற்றுக்கு சோறு போட்டு வளர்க்கிறது. சார்ந்து வாழ்வதும் சேர்ந்து வாழ்வதும்தான் இயற்கையின் ஏற்பாடு. இதை இந்தச் சூழலிலாவது உணர்வோமே!

@நா.வளர்மதி, திருச்சி.

‘முக்கிய தலைவர்களின் பாதுகாப்பு’ என்பதற்காகவே பெரும்பாலும் சாலைகளில் நிற்கும் காவலர்கள், தற்போது மக்களைக் காப்பாற்றுவதற்காக மட்டுமே நிற்கிறார்கள். இது எந்நாளும் தொடருமா?

‘மக்கள்தான் எப்போதுமே முக்கியம்’ என்பதை ‘அந்த முக்கியங்கள்’ உணர்ந்தால்... தொடரும்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

@இந்து குமரப்பன், விழுப்புரம்.

உங்களை நெகிழவைத்த அரசியல்வாதிகள் யாராவது இருந்தால் சொல்லுங்களேன்?

தஞ்சாவூரிலிருந்து சென்னை வரக்கூடிய ரயிலின் இரண்டாம் வகுப்பு (ஸ்லீப்பர்) பெட்டியில் அமர்ந்திருந்த நான், ஒரு புத்தகத்தைப் படிப்பதில் மூழ்கியிருந்தேன். வண்டி புறப்படுவதற்கு 15 நிமிடம் இருந்த நிலையில், மஞ்சள் நிறப் பையைக் கொண்டுவந்து பக்கத்தில் வைத்த ஒரு பெரியவர், ‘இதை பார்த்துக் கொள்ளுங்கள் தம்பி’ என்று சொல்லி நகர்ந்தார். அவர், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. பின்னாலேயே எழுந்து சென்றேன். வழியனுப்புவதற்காக வந்திருந்த இரண்டு தோழர்களிடம் ‘ஆட்டோவுக்குக் கொடுங்கள்’ என்றபடி காசைக் கொடுத்துவிட்டுத் திரும்பினார்.

உரிய நேரத்துக்கு வண்டி கிளம்பவில்லை. நான்கைந்து நிமிடத்துக்குப் பிறகு நடைமேடை பரபரப்பானது. நூறு, நூற்றைம்பது பேர் கழகக் கரை வேட்டியுடன் நடைமேடையை நிறைத்தனர். வெளியே கிட்டத்தட்ட தேசியக்கொடி பறக்கும் காருடன் 20, 30 கார்களும் வந்தன. கூடவே, அரசாங்க அதிகாரிகளின் கார்கள் வேறு. ஒரே ஒரு நபர், குளிர்சாதன வகுப்புப் பெட்டியில் ஏற, மொத்த கூட்டமும் ‘வாழ்க’ கோஷம் போட்டு அதிரவைத்தது. அதன் பிறகே பச்சை சிக்னல் காட்டப்பட்டது!

நல்லகண்ணு
நல்லகண்ணு

@துவாரகநாதன் ராமசாமி.

‘டாக்டர்களில் பலரும் நிறைய சம்பாதிக்கிறார்கள். ஆனால், வருமானவரி கட்டாமல் ஏய்க்கிறார்கள்’ என்று பிரதமர் அலுவலகத்துக்குத் தெரியப்படுத்தியிருந்தேன். ஆனால், அவர்களுக்கு இதில் அவ்வளவு தூரம் அக்கறை இருப்பதுபோல் தெரியவில்லையே?

சொகுசு கார்களில் பறக்கும் காய்கறி வியாபாரி தொடங்கி கட்டுமானத் தொழிலதிபர் வரையிலும் ‘வறுமைக்கோட்டுக்குக் கீழே’ என்றே சான்றிதழ் பெற்று வைத்துள்ளனர். அப்படியிருக்க, ‘டாக்டர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள்’ என்று பெருந் தன்மையுடன் விட்டிருப்பார்கள்போலிருக்கிறது.

@ ‘சோழா’ புகழேந்தி, கரியமாணிக்கம்.

புதுச்சேரியில் ஆளுநர்-முதல்வர் மோதல் கொரோனா சமயத்திலும் தொடர்கிறது. இதை, பிரதமர் மோடி கண்டுகொள்வதேயில்லையே?

‘பாவம்... மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். இப்படியாவது அவர்களுக்கு பொழுதுபோகட்டும்’ என்று அவருடைய ‘மன் கி பாத்’ கூறியிருக்கக்கூடும்!

@எத்திராஜ், கஸ்பாபுரம், சென்னை-126.

‘தமிழ் உணர்வு’ அல்லது ‘தமிழைப் பிழையின்றி உச்சரித்தல்’ எது முக்கியம்?

தமிழன் உயிர்ப்புடன் இருப்பது எல்லாவற்றையும் விட மிக முக்கியம்.

@எல்.ஆர்.சுந்தரராஜன், மடிப்பாக்கம்.

சினிமா தியேட்டர்களை திருமண மண்டபங்களாக மாற்றிய புத்திசாலிகளும் இப்போது முட்டாள்கள் ஆகிவிட்டார்கள்தானே?

நடையைவிட்டு சைக்கிளுக்கு மாறியவர்கள்; சைக்கிளைவிட்டு மோட்டார் சைக்கிளுக்கு மாறியவர்கள்; மோட்டார் சைக்கிளைவிட்டு கார்களுக்கு மாறியவர்கள் மட்டும் புத்திசாலிகளோ! அனைவருமே இயற்கையின் சுழற்சிக்கு முன் முட்டாள்கள்தான். இதில் ஒருவரையொருவர் பார்த்து எள்ளி நகையாடிக்கொண்டிருப்பது வேடிக்கையே. இன்று நீ... நாளை நான்!

@அ.சுகுமார், காட்பாடி.

‘மதுக்கடைகளைத் திறக்கவே கூடாது’ என்று கூப்பாடு போடும் டாக்டர் ராமதாஸ், ‘இதற்கென உரிய அரசாணையைப் பிறப்பித்தால்தான் அ.தி.மு.க-வுடன் கூட்டு தொடரும்’ என்று நிபந்தனை விதிக்கலாம்தானே?

இதென்ன, தன் மகனுக்கு எம்.பி பதவி வாங்கும் விவகாரமா... அவ்வளவு கறார்காட்ட!

டாக்டர் ராமதாஸ்
டாக்டர் ராமதாஸ்

@நாகியார், கோவை.

மதுக்கடை திறப்பு - அவ்வளவு அவசரத் தேவை என்ன?

குடிப்பவர்களுக்கு மட்டுமல்ல... ‘வாங்கி வாங்கி’ பழக்கப்பட்டவர்களுக்கும்கூட ‘வெடவெட’வென கைகள் நடுங்கத்தானே செய்யும்.

@செல்வ ஷாஜி, நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம்.

கழுகாரே, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்ததா?

‘கொரோனா பாதிப்பில் உலக அளவில் முதல் இடத்தைப் பிடித்தது இந்தியா’ என்ற செய்தி வராமலிருப்பதே அதற்கு சாட்சி!

@ஆ.கணேசன், திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம்.

ஊரடங்கு தளர்த்தப்பட்டுவிட்ட பிறகும் சுயஒழுக்கம் மற்றும் சமூக இடைவெளியை நம்மவர்கள் தொடர்ந்து பின்பற்றுவார்களா?

ஊரடங்கு கடுமையாக இருந்தபோதே பல இடங்களில் சரிவர பின்பற்றவில்லை என்பதுதானே இன்றைய பிரச்னைகளுக்கு எல்லாம் அடிப்படை. அப்படியிருக்க, ‘தளர்வு’ என்றாகிவிட்ட பிறகு கேட்கவே தேவையில்லை. வீதிகளில் இறங்கிப் பாருங்கள்... உங்களுக்கே தெரிந்துவிடும்.

@பொ. பொன்ராஜ்குமார், ராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்.

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம், ‘ஜல் சக்தி’ அமைச்சகத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுவிட்டதே?

மீண்டும் கமண்டலத்தில் காவிரி!

@பி.அசோகன், கோபிச்செட்டிபாளையம் தாலுகா, ஈரோடு மாவட்டம்.

கொரோனா தனிப்பட்ட முறையில் தங்களை எவ்வாறு பாதித்தது?

கழுகார் ‘தனி ஒருவன்’ அல்ல... ‘கூட்டத்தில் ஒருத்தன்’!

@வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு, சென்னை.

‘கொரோனா காரணமாக பெரிய பாதிப்பு உருவானால், தியாகங்களுக்கு அரசு ஊழியர்கள் தயாராக இருக்க வேண்டும்’ என்று புதுவை முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளாரே?

ஊருக்கு ஊர் பங்களாக்களையும், நிலங்களையும், வெளிநாடுகளில் முதலீடுகளையும் குவித்து வைத்திருக்கும் அரசியல்வாதிகள், முதலில் தியாகம் செய்து முன்மாதிரியை உருவாக்க வேண்டும். அதன் பிறகு அரசு ஊழியர்கள் என்ன... பொதுமக்களும்கூட தாமாகவே முன்வருவார்கள்!

@கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்-6.

‘தொண்டையில் உள்ள வைரஸை சானிட்டைஸர் போலவே ஆல்கஹாலும் அழிக்கும். எனவே, மதுக்கடைகளைத் திறந்து கொரோனாவை ஒழிக்க வழி செய்யுங்கள்’ என்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ கோரியிருக்கிறாரே?

ஊருக்கு ஊர் ராஜேந்திர பாலாஜிகள், செல்லூர் ராஜுகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

@அந்திவேளை.

‘தமிழக அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கும் கடுமையான நிதிநெருக்கடியைச் சமாளிக்கவே பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன’ என்று நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதே?

அவர்களைப் பொறுத்தவரை ‘அரசாங்கம்’ என்றாலும், ‘ஆளுங்கட்சி’ என்றாலும் ஒன்றுதானே!

@சின்னஞ்சிறுகோபு, சேலையூர்.

‘கொரோனா வைரஸ், சீனாவில் உள்ள வூஹான் ஆய்வுக்கூடத்தில் உருவானதுதான்’ என்று ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூறிவருகிறாரே?

வல்லரசு அறியும் வல்லரசின் கால்!

@ஆர்.எஸ்.மனோகரன், முடிச்சூர், செங்கல்பட்டு மாவட்டம்.

அறுவடையும் கொள்முதலும் இந்தப் பருவத்தில் வழக்கமாகத்தான் நடந்திருக்கின்றன. ‘எல்லாமே முதல்வரின் முகராசிதான்’ என்கிறாரே ஓர் அமைச்சர்?

‘கொரோனாவைக் கொண்டுவந்த கொங்குநாட்டுத் தங்கமே’ என்றுகூட போஸ்டர் அடிப்பாார்கள். அந்த அளவுக்கு ‘அதிபுத்திசாலி’கள்!

@ஸ்டீபன்ராஜ், தோகா, கத்தார்.

அரசுக்கு இழப்பு இல்லை என்றால், ‘ரைட் ஆஃப்’ (Write off) எனப்படும் ‘தள்ளிவைத்தல்’ முறையை விவசாயக் கடன், கல்விக் கடன் போன்றவற்றுக்கும் செய்யலாமே?

விவசாயக் கடன், கல்விக் கடன் ஆகியவற்றுக்கு ‘தள்ளிவைத்தல்’ என்பதைவிட, ‘தள்ளுபடி’தான் (Waiver) நல்லது.

@நவோதயா செந்தில், புதுச்சேரி.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டது/பாதிக்கப்படப்போவது தனியார் கல்வி நிலையங்களா, தனியார் மருத்துவமனைகளா?

தனிநபர்கள்தான். அவற்றின் பாதிப்புகள் எல்லாவற்றுக்கும் சேர்த்து கடைசியில் நம் தலையில்தானே ‘கை’ வைப்பார்கள்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை,

சென்னை- 600002 kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!