Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்

உண்மையிலேயே தாங்கள் மதுவுக்கு எதிரானவர்கள் என்றால், மது தயாரிக்கும் தொழிலிலிருந்து அனைவரும் உடனடியாக வெளியேறுவதுதான் சரியாக இருக்கும்.

@டி.கிருஷ்ணமூர்த்தி, விழுப்புரம்.

தி.மு.க-வின் முக்கிய தலைவர்கள் பலருமே மதுபான ஆலைகளை நடத்திக்கொண்டுள்ளனர். இந்த நிலையில், மதுபானக் கடைகள் திறப்பதற்கு எதிராக அந்தக் கட்சியினர் போராடுவது வேடிக்கைதானே?

ம்ஹூம்... வேதனை! உண்மையிலேயே தாங்கள் மதுவுக்கு எதிரானவர்கள் என்றால், மது தயாரிக்கும் தொழிலிலிருந்து அனைவரும் உடனடியாக வெளியேறுவதுதான் சரியாக இருக்கும். தயாரித்து விற்பனைக்கும் அனுப்பிவிட்டு, கூடவே ‘குடிக்காதீர்கள்’ எனக் கூப்பாடும் போடுவதைவிட, கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் வேறு இருக்க முடியாது.

@மூர்த்தி பாலகிருஷ்ணன், மதுரை-9.

பசியால் வாடும் மக்களை, ‘ட்ரோன் கருவி’ கொண்டு கண்டுபிடிக்க முடியாதா?

ஏற்கெனவே அனைத்தும் டிஜிட்டலிலேயே பதிவாகித்தான் இருக்கின்றன. அரசாங்கம் நினைத்தால்... ஆதார், வங்கிக்கணக்கு உள்ளிட்ட சிலபல பட்டன்களைத் தட்டி கூட்டிக்கழித்துப் பார்த்தாலே போதும், நொடிகளில் கண்டறிந்துவிட முடியும். ஆனால், நம்மை ஆண்ட/ஆளுகின்ற அரசியல்வாதிகள் அனைவரும் ‘வாக்குவங்கி’யை மட்டும்தானே காலகாலமாகக் கணக்குப்போட்டுப் பார்க்கிறார்கள்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

@அ.முஹம்மது நிஜாமுத்தீன், நீடூர்.

‘கொரோனா தொற்றை முற்றிலும் அழித்தாலும், பல்வேறு காலங்களில் புதிதாக மீண்டும் தோன்றும்’ என்பது உண்மையா?

முன்தோன்றிய மூத்த குடிகளுக்கெல்லாம் முன்தோன்றியவை வைரஸ்கள். அவை, தொடர்ந்து உருமாறிக்கொண்டேதான் இருக் கின்றன. சமீப ஆண்டுகளில்கூட ஸ்வைன்ஃப்ளூ, சார்ஸ், டெங்கு, சிக்குன்குன்யா என விதம்விதமாக நாம் பெயர் சூட்டி ‘அழகு பார்த்து’க் கொண்டுதானே இருக்கிறோம்.

கழுகார் பதில்கள்
படம்: கே.ஜெரோம்

@ஷபியுல்லா, தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம்.

கழுகாரே... கொரோனா காலம் முடிவுற்ற பிறகு மனித சமுதாயம் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள், அவற்றி லிருந்து மீள்வதற்கான அறிவுரைகள் ப்ளீஸ்?

ஜெமினி ஸ்டூடியோ அதிபரும் ஆனந்த விகடனின் அந்நாளைய ஆசிரியருமான எஸ்.எஸ்.வாசன் படைத்த பிரமாண்டங்களில் ஒன்று ‘சந்திரலேகா’ திரைப்படம். ஆனால், அந்தப் படத்தை வெளியிட முடியாமல் சிக்கலுக்கு ஆளானார்.

‘சொத்தையெல்லாம் வித்து முழுப் படத்தையும் எடுத்து முடிச்சாச்சு. படத்தை ரிலீஸ் பண்றதுக்கு பணம் பத்தலை. எல்லா இடங்கள்லயும் கடனையும் வாங்கியாயிடுத்து. என்ன பண்றதுனே தெரியலைம்மா’ என்று தன் அம்மாவிடம் கவலையை வெளிப்படுத்தினார். அவ்வளவு காலமாகச் சேர்த்துவைத்த நகைநட்டுகள் அனைத்தையும் கொண்டுவந்து கொடுத்தார் அம்மா.

எஸ்.எஸ்.வாசன்
எஸ்.எஸ்.வாசன்

‘ஒருவேளை இந்தப் படம் சரியா போகலைன்னா, திரும்பவும் நாம நடுத்தெருவுக்குத்தான் வரணும்’ என்று எஸ்.எஸ்.வாசன் சொல்ல, ‘அதனால என்னப்பா, இதுக்கு முன்னாடி நாம அங்கதான இருந்தோம். நீ கஷ்டப்பட்டு கொஞ்சம் கொஞ்சமா சம்பாதிச்சு இவ்வளவு தூரம் வந்திருக்கோம். மறுபடியும் அங்க போறதுல நேக்கு எந்த வருத்தமும் இல்ல’ - சட்டென பதில் கொடுத்தார் அந்தத் தாய்.

‘சந்திரலேகா’ படம் வெளியாகி, உலகமே எஸ்.எஸ்.வாசனை உச்சிமுகர்ந்தது... அவர் மேலும் உச்சத்துக்கு உயர்ந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

@சசி பிரபு, சென்னை.

‘கலைஞன் தனித்துவமானவன். அவன், சராசரிகளைவிட உயர்ந்தவன்’ எனும் கருத்தை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?

யாரும் யாரைவிடவும் உயர்ந்தவர்கள் இல்லை. வேண்டுமானால், தனித்துவமானவர்களாக இருக்கலாம். கண்ணுக்குத் தெரியாத ஒரு வைரஸ், ‘உலகிலேயே உயர்ந்தவன் நான்தான்’ என உருட்டி மிரட்டிக்கொண்டிருப்பதை மறந்துவிடாதீர்கள்!

@எல்.மோகனசுந்தரி, கிருஷ்ணகிரி-1.

கொரோனா முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதுபோல் பலரும் தைரியமாக நடமாடத் தொடங்கிவிட்டார்களே?

தொலைக்காட்சியில் தோன்றி, ‘வீட்டைவிட்டு வெளியே வராதீர்கள்’ என ஒரு பக்கம் அறிவித்தபடி இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இன்னொரு பக்கம், சிவப்பு மண்டல சென்னையிலேயே அனைத்துக் கடைகளையும் திறக்க அனுமதியும் கொடுக்கிறார். இடையில், தமிழகம் முழுக்க (சென்னை நீங்கலாக) டாஸ்மாக் கடைகளை போலீஸ் பாதுகாப்புடன் திறந்து ‘சரக்கு’களை வேறு விற்பனை செய்யவும் அனுமதித்தார். ‘நலத்திட்ட உதவிகள்’ என்ற பெயரில் அரசு, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, பொதுநல அமைப்பினர் எனப் பலரும் கொஞ்சம்கூட பாதுகாப்பில் அக்கறைகாட்டாமல் கூட்டம் கூட்டமாக ஆங்காங்கே மீடியாக்களுக்கு போஸ்கொடுக்கிறார்கள். பிறகு, மக்களுக்கு ‘தைரியம் வராமல்’ என்ன செய்யும்!

@இல.கண்ணன், நங்கவள்ளி, சேலம் மாவட்டம்.

‘தமிழகத்தில் யாரும் பட்டினியால் வாடவில்லை’ என்கிறாரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி?

பாவம், அதெல்லாம் அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஸ்டெர்லைட் ஆலைப் போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு நடத்தப் பட்டதே அவருக்குத் தெரியாதே!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

@மதிராஜா திலகர், சின்னபுங்கனேரி.

மே 17-ம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதா?

அதை நீட்டித்தால் என்ன... நீட்டிக்காவிட்டால் என்ன... இப்போதே ஊர் அடங்கிக் கிடக்கவில்லையே!

@கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூர்-77.

அன்றாடம் வயிற்றுப்பிழைப்புக்காக தொழில் நடத்துபவர்கள் டீக்கடையைத் திறக்கக் கூடாது. ஆனால், அரசாங்கம் மட்டும் மதுக்கடைகளைத் திறக்கலாம் என்பது எந்த அளவுக்கு சரி?

ஆட்சியாளர்களின் வயிறு மிகப்பெரியதாயிற்றே!

@ஆணைக்கூத்தன், பெரம்பூர், சென்னை-11.

இந்த ஊரடங்கு, மத்திய அரசுக்கும் பல மாநில அரசுகளுக்கும் இடையே சுமுக உறவை ஏற்படுத்தியிருக் கிறது. தொடருமா இந்த நல்லுறவு?

அரசாங்கம் என்பது உருவாக்கப்பட்டதே, சாதி, மத, அந்தஸ்துகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களும், அனைத்து ஜீவன்களும் சம உரிமைகளுடன் வாழ்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், அதை மறந்து ‘கட்சி’ கட்ட ஆரம்பித்தவர்கள், அரசாங்கத்தை ஆளுங்கட்சியின் அங்கமாகவே மாற்றிவிட்டனர். ஆட்சிக்கு வரும் கட்சிக்காரர்களின் சுயநலம் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகளிடையே மோதல்போக்கு ஆரம்பித்து, மக்கள் நலன் தொடர்ந்து பலிகொடுக்கப்படுகிறது. ‘ஆபத்து’ என்றதும் இப்போது ‘சுமுக உறவு’ உருவாகியிருக்கிறது. ஆனால், இதுவும்கூட அனைத்து மாநில அரசுகளுடனும் ஏற்படவில்லை என்பது வேதனையே!

@பா.ஜெயப்பிரகாஷ், மாக்கினாம்பட்டி, கோயம்புத்தூர் மாவட்டம்.

தன்னம்பிக்கை என்பது ஒருவனுக்கு எப்போது தலைக்கனமாக மாறுகிறது?

‘என்னால் மட்டுமே’ என அது ‘வீங்க’ ஆரம்பிக்கும்போது!

@இராஜேந்திரன், நூத்தஞ்சேரி.

‘கொரோனாவை ஒழித்துக்கட்ட என்னிடம் மருந்து இருக்கிறது. இன்னும் எத்தனை உயிர்களை பலிகொடுக்கப் போகிறீர்கள்?’ என்று கேட்டதற்காக சித்தவைத்தியர் திருத்தணிகாசலத்தைக் கைதுசெய்துள்ளனரே?

அவர் பதிவுபெற்ற மருத்துவர் அல்ல. ஆனால், ‘பரம்பரை மருத்துவர்’ எனச் சான்று பெற்றிருக்கிறார். சீனாவில் கொரோனா பெரிதாக பரவ ஆரம்பித்த ஜனவரி மாதத்திலேயே, நம்முடைய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் வரை தேடிச் சென்று கொரோனாவுக்கு எதிரான சித்தமருந்துகள் பற்றிப் பேசியிருக்கிறார். அப்போதிருந்தே அவர் கூறிவந்த ‘கபசுரக் குடிநீர்’ உள்ளிட்டவற்றை தற்போது அரசாங்கமே மக்களுக்குக் கொடுக்க ஆரம்பித்துள்ளது. ‘சித்தமருத்துவ மூலிகைகள் மூலமாக கொரோனா தடுப்பு மருந்து உருவாக்குவதில் முதற்கட்ட வெற்றி’ என தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகமும் அறிவித்துள்ளது. அவர், இத்தனை ஆண்டுக்கால அனுபவ அறிவால் பேசினார்... இவர்கள் ஆராய்ந்து பார்த்துவிட்டு அதையேதான் சொல்கின்றனர். இதற்கிடையில், ‘கொரோனா வுக்கு மருந்து இருக்கிறது என்று மக்களை ஏமாற்றினார்’ என ‘சட்டம் தன் கடமை’யைச் செய்திருக்கிறது. நீதிமன்றம், நியாயத்தைக் கண்டறிந்து சொல்லும் வரை காத்திருங்கள்.

@சுப்ரமணி, ராணிப்பேட்டை.

‘தமிழ்நாட்டில் ஊழலை ஒழித்து நல்லாட்சி தருவார்’ என நீங்கள் யாரை முன்மொழிவீர்கள்?

வேறு ஒருவரை நான் ஏன் முன்மொழிய வேண்டும் (ஹிஹி)?

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை,

சென்னை- 600002 kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!