சமூகம்
Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்

‘இந்தியப் பொருளாதாரம் சரிகிறது’ என்பதும் உண்மையே.

@செ.கிருஷ்ணமூர்த்தி, மாங்காடு, சென்னை-122.

உயர் மின் அழுத்த கம்பிகள் செல்லும் வழிகளிலும் மக்கள் குடியிருப்புகளை அரசும் மின்வாரியமும் எப்படி அனுமதிக்கின்றன?

எல்லாமே பணம்தான். பணம் வந்தால் போதுமென, ஆபத்தான அந்த மின்பாதைகளுக்குக் கீழும் லேஅவுட் போடுகிறார்கள். மனையின் விலை குறைவாக இருக்கும் என மக்களும் போய் விழுகிறார்கள். தங்களுக்கு பத்திரப்பதிவு, மின்கட்டணம் என வருமானம் வந்தால் போதுமென, அரசுத் துறைகளும் நினைக்கின்றன. யாரை நோவது?

@அ.சுகுமார், காட்பாடி, வேலூர் மாவட்டம்.

இனிவரும் தேர்தல்களில் (நடந்தால்) இலவச வாக்குறுதிகளுக்கு வாய்ப்பூட்டுதானே?

‘அது’ இல்லையென்றால், எப்போதும் தேர்தலுக்கே பூட்டுதான்!

@அந்திவேளை.

‘கொரோனாவுடன் வாழ கற்றுக்கொள்ளுங்கள்’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், டெல்லி முதல்வர் எனப் பலரும் பேச ஆரம்பித்துவிட்டனரே?

‘கொரோனா’ என்பது இந்தியாவில் எட்டிப்பார்த்த நிமிடத்திலிருந்தே, நம் ஊர் சித்த மருத்துவர்கள் பலரும் இதைத்தான் சொல்லிக் கொண்டுள்ளனர். ஒரு காலத்தில் அம்மை நோய் போன்றவை இங்கே உருட்டி மிரட்டியபோது, ‘சமூக விலகல்’ என்ற ஒன்றை மட்டுமே கடைப்பிடித்து, தலைமுறைகளைத் தழைக்க வைத்தனர். அத்தகைய மருத்துவப் பாரம்பர்யம்கொண்ட பூமி இது.

@டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

‘ஊரடங்கால் பாதிக்கப்பட்ட இந்திய ஏழை மக்கள் அனைவருடைய வங்கிக்கணக்கிலும் 7,500 ரூபாய் வரவுவைக்க வேண்டும்’ என்கிறார் ராகுல் காந்தி. இது சாத்தியமா?

‘20 லட்சம் கோடி ரூபாய் அறிவிப்பு’ காரணமாக, 130 கோடி பேரின் கணக்கிலும் 15,384 ரூபாய் ஏறிவிட்டதே!

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

@மு.ராம்.

இந்தியப் பொருளாதாரம் மிகவும் சரிந்துவிட்டதாக கூறு கிறார்கள். உண்மையில் உலகப் பொருளாதாரம்தான் சரிந்துள்ளது. இது எப்படி நம்மை பாதிக்கும்?

‘இந்தியப் பொருளாதாரம் சரிகிறது’ என்பதும் உண்மையே. அதைத் தூக்கி நிறுத்தத்தான் ஏற்கெனவே பல்வேறு பொருளாதார நடவடிக்கை களை கையில் எடுத்தார் பிரதமர் மோடி. தற்போது, இந்த கொரோனா மேலும் பாதாளத்தை நோக்கித் தள்ளிவிட்டுள்ளது. பல விஷயங்களை ‘கொரோனா’ தலையில் கட்டும் வேலைகளும் நடக்கின்றன. இந்த நிலையில், ‘20 லட்சம் கோடி ரூபாய் திட்டம்’ எனச் சொல்லி அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறார் மோடி. இது, எந்த அளவுக்கு நம்மை மீட்டெடுக்கும் என்பது போகப்போகத்தான் தெரியும்.

@மா.ஜெகதீசன், சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்.

‘ரேஷன் பொருள்களை டோர் டெலிவரி செய்ய முடியுமா?’ என்று கேட்காத நீதிமன்றம், ‘மதுபானங்களை டோர் டெலிவரி செய்ய முடியுமா?’ என்று கேட்கிறதே?

அந்த அளவுக்கு நீதிமன்றங்களையும்கூட ‘மாற்றி யோசிக்க’வைத்துவிட்டார்கள்!

கழுகார் பதில்கள்

@இல.கண்ணன், நங்கவள்ளி, சேலம் மாவட்டம்.

‘கள்ளச்சாராயம் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் ‘டாஸ்மாக்’ கடைகள் திறக்க முடிவுசெய்யப்பட்டது’ என்கிறாரே அமைச்சர் செல்லூர் ராஜு?

‘சாதிச்சண்டைகள்’ நடப்பதைத் தடுக்க, ‘சாதிச்சண்டை மைதானம்’ திறக்கும் 23-ம் புலிகேசியின் வாரிசுகளாயிற்றே!

@மு.நடராஜன், திருப்பூர்-7.

‘விநாச காலே... விபரீத புத்தி’ என்பதற்கு சமீபத்திய உதாரணம்?

‘டாஸ்மாக் திறப்பு.’

@அனன்யா, பொள்ளாச்சி, கோயம்புத்தூர் மாவட்டம்.

உள்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் இருக்கும் சூழலில், ‘கொரோனா காரணமாக உள்நாடு மற்றும் அயல்நாடுகளில் கோடிக்கணக்கான இந்தியர்கள் வேலை இழப்பார்கள்’ என்கின்றன புள்ளிவிவரங்கள். என்னதான் நடக்கப்போகிறது?

‘வேலை இழப்பு’ என்பது, கொரோனாவைவிட மிக மோசமாகப் பரவ ஆரம்பித்துவிட்டது. வரும் காலங்கள், மிக மிக மோசமானதாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். ஆனால், ‘இந்த வேலைதான் என்றில்லாமல், சட்டவிரோதமற்ற எந்த வேலையையும் ரசித்து, ஈடுபாட்டுடன் செய்ய நான் தயார்’ என்ற மனநிலைக்கு வந்துவிட்டால், இதெல்லாம் ஒரு பிரச்னையாகவே இருக்காது. நம்முடைய எதிர்பார்ப்புகள் எத்தனையோ இருக்கலாம். ஆனால், அதற்காக யாரிடமும் அடிமைப்பட்டு நிற்க வேண்டிய அவசியமில்லை. வேறு வழியே இல்லை என்கிற சூழலில், மூன்று வேளை உணவுக்காக மட்டும் உழைத்தாலே போதும்தானே!

@ஆ.கணேசன், திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம்.

சென்னை மக்களை குறிவைத்துத் தாக்குகிறதே கொரோனா?

தடுக்கவேண்டியவர்கள் தடுமாறி நிற்கும்போது, தாக்கத்தானே செய்யும்!

@எம்.விக்னேஷ், மதுரை-9.

கொரோனா பாதிப்பு காரணமாக பல நாடுகளிலிருந்து வெளியேறும் தொழில் முதலீடுகளை ஈர்க்க, சிறப்புக் குழு அமைக்கிறதே தமிழக அரசு?

சல்லிசாக வரும்போது வாங்கிப் போடுவது நல்லதுதானே. ஆனால், இதைப் பயன்படுத்தியும் சுயலாபம் அடைய நினைத்தால், தமிழகத்துக்கு ‘சிறப்புக் குழி’ தோண்டுவதாகவே அது மாறிவிடும். எதிர்காலத்தில் எத்தகைய சூழலிலும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவே முடியாமல்போய்விடும். கடந்தகால அனுபவங்கள் இதைத்தான் சொல்கின்றன. ‘இவர்கள் கேட்கும் கமிஷன், நமக்கு கட்டுப்படியாகாது’ என்று ‘க்யா மோட்டார்ஸ்’ நிறுவனம் தலைதெறிக்க ஆந்திராவுக்கு ஓடிப்போனது, ஊரறிந்த கதையாயிற்றே!

@ராம்குமார்.

இந்த ஊடகங்கள்... கொரோனா செய்திகளையே காண்பித்து நிம்மதியைக் குலைப்பதைவிட்டுவிட்டு, வேறு பாசிட்டிவ் செய்திகளைக் காட்டி மகிழ்ச்சியை விதைக்கலாமே?

அந்தச் செய்திகளைப் பார்த்துவிட்டு உங்களை யார் நிம்மதியை இழக்கச் சொன்னது?

‘வீட்டைவிட்டு வெளியில் வந்தால்

நாலும் நடக்கலாம்...

அந்த நாலும் தெரிஞ்சு நடந்துக்கிட்டா

நல்லாயிருக்கலாம்...’ என நடைபோடுங்கள்.

@ஜெ. நெடுமாறன், ராமபுரம், சென்னை-89.

கொரோனாவை காரணம்காட்டி பிளாஸ்டிக் பை பயன்பாடு அதிகரித்துவிட்டதே?

‘எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான்’ என்பதுபோல், எல்லா பழிகளையும் கொரோனா மீது போடாதீர்கள். ‘ஆரம்ப ஜோர்’ என்பதுபோல் சட்டம் அமலுக்கு வந்த சில மாதங்களிலேயே அதை காலில் போட்டு மிதித்தாகிவிட்டது. அப்போதே ‘வசூல் ராஜாக்கள்’ காட்டில் ‘கூடுதல் மழை’யும் பொழிய ஆரம்பித்துவிட்டது!

@மாணிக்கம், சங்ககிரி, சேலம் மாவட்டம்.

‘ஜூன் 1-ம் தேதி 10 வகுப்பு பொதுத்தேர்வு’ என்று சொல்லும் தமிழக அரசின் நடவடிக்கை முறையானதுதானா?

‘தேர்வு அவசியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இந்த இக்கட்டான சூழலில் அதை கொஞ்சம் மாற்றி யோசிக்கலாம். மாணவர்களுக்கு அதிகம் சுமையில்லாத அளவுக்கு எளிமைப்படுத்தலாம்’ என்று கல்வியாளர்கள் பலரும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், ‘டாஸ்மாக் விற்பனை’க்கான மாற்றுவழிகளை யோசிப்பதற்கே ஆட்சியாளர் களுக்கு நேரம் போதவில்லையே! பாவம், அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்?

@பி.எஸ்.எ.ஜெய்லானி, கடையநல்லூர், தென்காசி மாவட்டம்.

ஆசிரியர் தினம், அன்னையர் தினம், காதலர் தினம், செவிலியர் தினம் என வருடம் முழுவதும் போய்க் கொண்டிருக்கும் தினங்களால் ஏதாவது பயன் இருக்கிறதா?

காலம் ஓடுகிற ஓட்டத்தில் அம்மா-அப்பாவைக்கூட ‘வெட்டிவிட்டு’ ஓடிக்கொண்டிருக்கிறோம். குறைந்தபட்சம் நினைத்துப் பார்க்கவாவது இப்படிப்பட்ட ‘தின’ங்கள் பயன்படத்தானே செய்கின்றன.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை,

சென்னை- 600002 kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!