Published:Updated:

கழுகார் பதில்கள்

வெளிமாநில தொழிலாளர்கள்
பிரீமியம் ஸ்டோரி
வெளிமாநில தொழிலாளர்கள்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்துவம் இருக்கும். அதை அப்படி அப்படியே ஏற்று ரசித்துவிட்டுக் கடந்து செல்வதுதான் சரியான ரசனை.

கழுகார் பதில்கள்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்துவம் இருக்கும். அதை அப்படி அப்படியே ஏற்று ரசித்துவிட்டுக் கடந்து செல்வதுதான் சரியான ரசனை.

Published:Updated:
வெளிமாநில தொழிலாளர்கள்
பிரீமியம் ஸ்டோரி
வெளிமாநில தொழிலாளர்கள்

@இரா.சாந்தகுமார், மாடம்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம்.

‘வழிபாட்டுத்தலங்களைத் திறந்தால், பாதுகாப்பு கொடுப்பதற்கு காவல் துறையில் போதிய பலமில்லை’ என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு சொல்லியிருப்பது நம்பும்படியாகவா இருக்கிறது?

காவல் துறையினரில் பெரும்பாலானோர், டாஸ்மாக் கடைகளில் டோக்கன் கொடுக்கும் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். மிக மிக முக்கியமான அந்தப் பணிக்கே காவலர் பற்றாக்குறை இருக்கிறது என்பதுதான் உண்மை!

கழுகார் பதில்கள்

@ஆ.பிரகாஷ், நூம்பல், சென்னை.

‘டாஸ்மாக் வருமானம்தான் தமிழக அரசின் முக்கியமான வருமானம். அதைவிட்டால், அரசாங்கத்தையே நடத்த முடியாது’ என்கிறார்கள். மாற்று வருமானத்துக்கு வழி சொல்லுங்கள் கழுகாரே?

ஏற்கெனவே பல்வேறு வழிகளை நிபுணர்கள் பலரும் சொல்லிக்கொண்டுதான் உள்ளனர். ஆனால், அவையெல்லாம் ஆட்சியாளர்களின் காதுகளில் ஏறினால்தானே! குஜராத்தில் மது விற்பனை கிடையாது. ஆனாலும் இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத்தானே அந்த மாநிலமும் இருக்கிறது. பால் உற்பத்தியில் மட்டுமே பல்லாயிரம் கோடி ரூபாய் வருமானத்தைப் பார்க்கிறது குஜராத்.

கனிமவளம், வரிவசூல், பத்திரப்பதிவுத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளில் நடக்கும் மோசடிகளையும் முறைகேடுகளையும் தடுத்து நிறுத்தினாலே, டாஸ்மாக் வருவாயை விஞ்சிவிட முடியும். இவையெல்லாம் ஆள்வோருக்கும் தெரியும். ஆனால், மேலே குறிப்பிட்ட மோசடிகளுடன் கூடுதலாக டாஸ்மாக் மூலமாகவும் ஒரு கமிஷன் வரும்போது, ‘ஆட்டத்தைக் கலைக்க’ யாருக்கு மனதுவரும்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

@ப.த.தங்கவேலு, பண்ருட்டி, கடலூர் மாவட்டம்.

மக்களின் உயிரைக் காப்பதா அல்லது நிதிநிலையைக் காப்பதா... ஆட்சியாளர்களுக்கு எது முக்கியம்?

ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்வதுதான் அவர்களுக்கு எப்போதுமே முக்கியம். அதற்காக, எதையும்... யாரையும்... எப்போதும் பலி கொடுக்கத் தயாராகவே இருப்பார்கள்.

@வெங்கடேஷ் மணி, சென்னை.

ஜூஸ் கடைகளில் இனி ஆரஞ்சு, லெமன் ஆகியவற்றுக்குப் பதிலாக கபசுர ஜூஸ், நிலவேம்பு ஜூஸ் எல்லாம் விற்பனை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்தானே?

நல்ல விஷயம்தான். ஆனால், ‘அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்பதையும் மனதில்கொள்ள வேண்டும். பழ ஜூஸ் போல் இஷ்டத்துக்குக் குடித்துவிட்டு, மருத்துவமனைகளைத் தேடும் நிலையை நாமே உருவாக்கிக்கொள்ளக் கூடாது.

@பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை, சேலம் மாவட்டம்.

இந்தத் தருணத்தில் சின்னத்திரையும் கைபேசியும் இல்லாமல்போயிருந்தால்?

இயற்கையை இன்னும் நெருக்கமாக உணர்வதற்கு வாய்ப்புகள் கிடைத்திருக்கும்.

@சி.கார்த்திகேயன், சாத்தூர், விருதுநகர் மாவட்டம்.

அரசியல் சூறாவளிகள் பலவற்றையும் சமாளித்த எடப்பாடியாரால், ‘கொரோனா’வைச் சமாளிக்க முடியவில்லையே?

அது என்னதான் கேட்கிறது என்பதைக் கண்டுபிடித்துவிட்டால், எளிதாகச் சமாளித்துவிடுவார்.

@மாணிக்கம், திருப்பூர்.

சிவாஜி, நாகேஷை விஞ்சிய நடிகர் உலகத்தில் உண்டா?

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்துவம் இருக்கும். அதை அப்படி அப்படியே ஏற்று ரசித்துவிட்டுக் கடந்து செல்வதுதான் சரியான ரசனை. ‘ம்... அவரை அடிச்சுக்க ஆளே இல்லை’ என்று பேச ஆரம்பித்து, சகநண்பர்களுடன் அடித்துக்கொள்ளும் சூழலை உருவாக்க வேண்டாமே!

@ஹெச்.மோஹன், மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்.

சிறுவயது அனுபவத்தில் இன்றளவும் மறக்க முடியாத ஏதாவது ஒன்று?

சிகரெட் பாக்கெட்டுகளின் உள்ளே ‘H’, ‘M’, ‘T’ என்ற எழுத்துகளில் ஏதாவது ஒன்று அச்சிடப் பட்டிருக்கும். `மூன்று எழுத்துகளையும் சேகரித்துக் கொடுத்தால், HMT வாட்ச் பரிசாகக் கிடைக்கும்’ என்றொரு செய்தியைக் கேட்டு காடு, மேடெல்லாம் நடைபோட்டு சிகரெட் பாக்கெட்டுகளைத் தேடிய அனுபவம். ஆகா! ஆனால், ‘M’ மட்டும் கடைசி வரை கிடைக்கவே இல்லை. அப்படியே முழுமையாகச் சேகரித்தாலும், யார் அந்த வாட்சைக் கொடுப்பார்கள் என்பதையும் கடைசி வரை தெரிந்துகொள்ளவேயில்லை.

வெளிமாநில தொழிலாளர்கள்
வெளிமாநில தொழிலாளர்கள்

@கே.கே.வெங்கடேசன், செங்கல்பட்டு-1.

வெளிமாநில ஏழைத் தொழிலாளர்கள், தம் மாநிலத்துக்குத் திரும்பிச் செல்வதற்காகப் படும் துன்பங்களைப் பார்க்கும்போது, ‘இந்தியா இன்னும் ஏழைநாடாகவே இருக்கிறதே!’ என்ற கவலை எழுகிறதே?

நம்புங்கள்... ஆட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரும் ‘ஏழையின் மகன்’தான்!

@ஜெயம் ஆப்செட், பொறையார்.

லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள்கூட, ரேஷன் கடையில் இலவசப் பொருள்கள் வாங்க வரிசைகட்டி நிற்கிறார்களே?

பாவம், ‘வறுமைக்கோட்டை’த் தாண்ட வழி தெரியவில்லைபோலிருக்கிறது!

@பி.அசோகன், கொளப்பலூர் ஈரோடு மாவட்டம்.

இப்போதும்கூட, ‘காவலர்கள் மக்களின் நண்பர்கள்’ என்பதை ஒப்புக்கொள்ள மனம் மறுக்கிறதே?

ஆளுங்கட்சி மற்றும் அரசியல் கட்சிக் கொடிகளுடன் பறக்கும் வாகனங்கள், உள்ளூர் பணக்காரர்களின் பகட்டான வாகனங்கள், அஹாஜுகா பேர்வழிகளின் அட்ராசிட்டி வாகனங்களையெல்லாம் கண்டால் ‘சல்யூட்’ அடித்து வழி அனுப்புகின்றனர். ஆட்டோ, டூவீலர் என மூட்டை முடிச்சுகளுடன் பயணிக்கும் பரிதாப ஜீவன்களை விரட்டியடித்து, திருப்பி அனுப்புகின்றனர். இப்போதும் இதையெல்லாம் கண் முன்னே காணும்போது எப்படி மனம் ஒப்புக்கொள்ளும்?

@ந.அய்யப்பசாமி, தேவாரம், தேனி மாவட்டம்.

‘கொரோனா நோய் வேகமாகப் பரவுவதற்கு கோயம்பேடு வியாபாரிகள்தான் காரணம்’ என்கிறாரே முதல்வர் எடப்பாடி பழனிசாமி?

நொண்டிக்குதிரைக்கு சறுக்கியது சாக்கு!

@ஆர்.சுந்தரராஜன், சிதம்பரம், கடலூர் மாவட்டம்.

‘சாலையில் நடக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் ராகுல் காந்தி அமர்ந்து பேசுவதற்குப் பதிலாக, அவர்களுடைய பெட்டியைத் தூக்கிக்கொண்டு கூடவே நடக்கலாம்’ என்கிறாரே அமைச்சர் நிர்மலா சீதாராமன்?

ராகுல் காந்தியைக் கிண்டலடிப்பதாக நினைத்துக்கொண்டு, பரிதாபத்துக்குரிய அந்த ஏழைகளைக் கேவலப்படுத்துவதுடன், தன்னுடைய தரத்தையும் தாழ்த்திக்கொள்கிறார் நிர்மலா.

@சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம், திருநெல்வேலி மாவட்டம்.

‘சட்டத்தால் மக்களை ஒருபோதும் திருத்தவோ, கட்டுப்படுத்தவோ முடியாது. மக்களாகவே திருந்திக்கொள்ள வேண்டும்’ என்கிறாரே அமைச்சர் செல்லூர் ராஜு?

பிறகு எதற்கு இந்த அமைச்சர் பதவி, ஆட்சியெல்லாம்!

@ஜெயக்குமார், கரந்தை, தஞ்சாவூர்-2.

பிரதமர் நரேந்திர மோடி, 15,00,000 ரூபாயை நமது வங்கிக்கணக்கில் எப்போது சேர்ப்பார்?

அடடே... புது ஆத்துப்பாலத்துக்கிட்ட ஹெலிகாப்டர்ல இருந்து கொட்டினப்ப நீங்க அள்ளிக்கலையோ ஜெயக்குமார்?!

@ஆ.பிரகாஷ், அய்யப்பன்தாங்கல், சென்னை.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஜோதிமணியை (காங்கிரஸ் எம்.பி), கரு.நாகராஜன் (பா.ஜ.க தலைவர்) விமர்சனம் செய்தது தனிமனித அணுகுமுறையா அல்லது பா.ஜ.க-வின் கொள்கையே அப்படித்தானா?

ஜோதிமணி, ‘பிரதமரை மக்கள் கல்லால் அடித்திருப்பார்கள்’ என்று தன் பேச்சில் வெறுப்பைச் சேர்த்தது முதல் தவறு. அதற்கு கரு.நாகராஜன் தந்த பதில், அநாகரிகத்தின் உச்சம். ‘பாரத் மாதா’ என்று நாட்டையே பெண்ணாகப் பார்க்கும் அந்தக் கட்சியில் இப்படியும் ஒருவர். இதையெல்லாம் வைத்து, அந்தக் கட்சியின் கொள்கையே இதுதான் என்கிற முடிவுக்கெல்லாம் வந்துவிடாதீர்கள். ஆதியிலிருந்தே அனைத்துக் கட்சிகளிடமும் இந்த ‘அநாகரிகக் கொள்கை’யும் சேர்ந்தே இருக்கிறது. சமீபகால உதாரணமாக, ‘பெரும் ஆளுமைகள்’ எனப் போற்றப்படும் கருணாநிதி, ஜெயலலிதா எல்லோரும்கூட அருவருக்கத்தக்க இந்தக் ‘கொள்கை’யை கையில் எடுத்திருக்கிறார்களே!

@.ஜெ.ஜானி, போரூர், சென்னை-116.

`கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு கோட்டைவிட்டுவிட்டது’ என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளாரே?

‘பங்காளி’யிடம் ‘பாட்டாளி’ எதைக் கோட்டை விட்டாரோ?!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை,

சென்னை- 600002 kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!