Published:Updated:

கழுகார் பதில்கள்

அதெல்லாம் அவசரம் அவசரமாகப் பலருடைய பாக்கெட்டுகளுக்கும் எப்போதோ போய்ச் சேர்ந்திருக்கும்.

பிரீமியம் ஸ்டோரி

@வேணுகோபால், பெங்களூரு.

‘மாநில சுயாட்சி’ என்பதில் குஜராத்தின் முன்னாள் முதல்வர் மோடியின் பார்வை, இன்றைய இந்தியப் பிரதமர் மோடியின் பார்வை?

‘வயிற்றுவலியும் தலைவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்’ என்பார்கள். குஜராத்தின் காந்திநகரில் கோலோச்சிக்கொண்டிருந்தபோது, ‘ஜி.எஸ்.டி வரி என்பது மாநில உரிமையைப் பறிக்கும் செயல்’ என்று எதிர்ப்பு காட்டிய அதே மோடிதான் டெல்லிக்கு வந்ததும் அதிரடியாக அதை அமல்படுத்தினார். இப்போது, மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக அவராலேயே பறிக்கப்படுகின்றன. கூட்டாட்சித் தத்துவம் என்பதற்கு அவர் தற்போது தோண்டிக்கொண்டி ருக்கும் குழி, அவரையும்கூட சேர்த்தே காவு வாங்கிவிடும் என்பதுதான் உண்மை. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது ஆடிய ‘ஆணவ ஆட்டத்தை’ மோடி மறந்துவிடக் கூடாது.

@ஆர். குருராஜன், ஸ்ரீரங்கம், திருச்சி-6.

இந்த கொரோனா... நமக்கு மற்றும் உமக்கு என்ன கற்றுக் கொடுத்திருக்கிறது?

எளிமையே இனிமை!

@பொ.பொன்ராஜ்குமார், ராஜபாளையம், விருதுநகர் மாவட்டம்.

‘வேகமாகச் செயல்படாத அதிகாரிகள் பணியிலிருந்து விரட்டப்படுவார்கள்’ என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எச்சரிக்கிறாரே?

‘இதையும் மிக மிக வேகமாகச் செய்ய வேண்டும்’ என்று அவரைக் கேட்டுக்கொள்கிறேன். ‘வேண்டப்பட்டவர்’, ‘வேண்டப்படாதவர்’ என்று பாகுபாடு பார்க்காமல் செய்ய வேண்டியது முக்கியம் என்பதையும் கூடவே வலியுறுத்திக் கொள்கிறேன்.

கழுகார் பதில்கள்

@மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி, மதுரை-9.

ஊரடங்கு முடிந்த பிறகு பேருந்து, ரயில் இவற்றில் எந்தப் பயணம் பாதுகாப்பானது?

நடை, மிதிவண்டி, மோட்டார் சைக்கிள் இவற்றுக்குப் பிறகுதான்... பிற அனைத்துமே!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

@‘கடல்’ நாகராஜன், கடலூர்-1.

இந்த ஊரடங்கு காலத்தில் நடப்பவற்றில் நீங்கள் வருந்திய நிகழ்ச்சி, வியந்த நிகழ்ச்சி?

அவர் ஓட்டிவந்த ஆட்டோவை ஊரடங்கு காரணமாக அதன் உரிமையாளர் திரும்பப் பெற்றுக்கொண்டுவிட்டார். வருமானமின்றி வாடிய சூழலில், ஒரு விபத்து அவரை நடமாட முடியாமல் முடக்கிப்போட்டுவிட்டது. கையிலிருந்த பணத்தில் அவர் ஒரு சைக்கிள் வாங்க, அதில் அவரை ஏற்றிக்கொண்டு பீகாரில் இருக்கும் சொந்த கிராமத்தை ஏழு நாள்களில் சென்றடைந்தார், அவரின் மகளான 15 வயது சிறுமி. அந்தக் குடும்பம், இந்த நிலைக்கு ஆளாக்கப்பட்ட சூழல், வருத்தப்பட வைக்கும் அதேசமயம், அந்தச் சிறுமியின் தன்னம்பிக்கை, தைரியம், விடாமுயற்சி அனைத்தும் வியக்கவைக்கின்றன.

@கிணற்றுத்தவளை, புதுக்கோட்டை.

ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் இப்போது இயற்கையாகவே சுத்தமாகிவிட்டனவாமே! அவற்றைத் தூய்மைப்படுத்த ஒதுக்கிய பெருந்தொகை யானது... அவசர, ஆக்கபூர்வப் பணிகளுக்குத் திருப்பிவிடப்படும்தானே?

ம்க்கும்... அதெல்லாம் அவசரம் அவசரமாகப் பலருடைய பாக்கெட்டுகளுக்கும் எப்போதோ போய்ச் சேர்ந்திருக்கும்.

@வி.கருணாநிதி, திருமக்கோட்டை, திருவாரூர் மாவட்டம்.

‘இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது’ என்று எடப்பாடி பழனிசாமிகூட மத்திய அரசுக்கு எதிர்ப்பு காட்டுகிறாரே?

‘விவசாயி’ என்று மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்லிக்கொண்டிருக்கிறார். இதை வைத்துத்தான் எதிர்வரும் தேர்தலையும் எதிர்கொண்டாக வேண்டும். குறிப்பாக, அவர் சார்ந்த மேற்கு மாவட்டங்களில் ‘இது’ இல்லையென்றால், ‘கொங்கு மண்டலத்துக்காரர்’ என்பதுகூட எடுபடாமல் போய்விடும். அந்தப் பதற்றத்தில்தான் ‘புள்ளைப்பூச்சி’க்கும் கொடுக்கு முளைத்திருக்கிறது.

மோடி
மோடி

@டி.ஏ.சத்தியமூர்த்தி.

கல்விக் கட்டணம், மருத்துவக் கட்டணம் என்று எதையெடுத்தாலும் தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதிலேயே குறியாக இருக்கின்றன. இன்றைய அசாதாரண சூழ்நிலையைப் பயன்படுத்தி அவற்றையெல்லாம் அரசுடைமையாக்கி, பொதுமக்களின் சுமையைக் குறைப்பாரா பிரதமர் மோடி?

யாரு... ‘தனி ஒருவன்’ மோடியா!

@ஜி.ஆர்.மாதேஸ்வரன், புளியம்பட்டி, சேலம் மாவட்டம்.

‘பட்டியல் இன மக்களை இழிவாகப் பேசினார்’ என்று சொல்லி, தி.மு.க-வின் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டிருக்கிறார். குடியரசுத் தலைவர் பட்டியல் இனத்தவர் என்பதால் உள்ளேவிட மறுத்த கோயில் நிர்வாகிகள்?

குடியரசுத் தலைவர் பற்றிய செய்தி இரண்டு ஆண்டுகளுக்கு முந்தையது. ‘ராஜஸ்தான், புஸ்கர் மாவட்ட பிரம்மா கோயிலில் குடியரசுத் தலைவருக்கு அவமதிப்பு’ என்று அன்று பரவிய அதே வேகத்தில், ‘அது பொய்ச் செய்தி’ என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுவிட்டதே! வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகத் தகவல்களை அப்படி அப்படியே நம்ப வேண்டாமே மாதேஸ்வரன்.

@வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டம்.

பணிச்சுமையால் ரேஷன் கடை ஊழியர்கள் சிரமப்படுகிறார்களாமே?

‘பணிச்சுமை’ என்று அவர்கள் சொல்ல வாய்ப்பே இல்லையே. அவர்களில் பெரும் பாலானவர்களுக்கு அது ‘சுகமான சுமை’யாயிற்றே எக்காலத்திலும்!

@மா.உலகநாதன், திருநீலக்குடி.

தி.மு.க-வில் ‘சாதிக்கு ஒரு நீதி’ என்கிறாரே வி.பி.துரைசாமி?

‘ச்சீச்சீய்... இந்தப் பழம் புளிக்கும்’ என்பார்கள். ஆனால், திரும்பத் திரும்ப அதைப் பலதடவை ஆசைதீரச் சாப்பிட்டு முடித்துவிட்டு முகஞ்சுளிப்பதுதான் ஆச்சர்யம்!

@பி.அசோகன், கொளப்பலூர், ஈரோடு மாவட்டம்.

இனி, கடினமான வேலைகளைச் செய்ய தமிழ்நாட்டில் ஆட்கள் இல்லைதானே?

நேற்றுவரை அதையெல்லாம் செய்துகொண்டிருந்தவர்கள் நாம்தான். நாளையிலிருந்து செய்யப்போவதும் நாம்தான்!

@கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்-6.

‘பேப்பர் மூலம் கொரோனா பரவலாம்’ என்ற வதந்தியை நம்பி செய்தித்தாளை தொடவே மறுக்கும் மக்கள், அழுக்கான பணத்தாள்களைக்கூட சர்வ சாதாரணமாக மடித்து, பைக்குள் வைத்துக்கொள்கிறார்களே?

குணம் குப்பையிலே... பணம் பந்தியிலே!

@எல்.மோகனசுந்தரி, கிருஷ்ணகிரி.

தமிழகத்தில் இனி அரசு அலுவலகங்களுக்கு ஆறு நாள் வேலையாமே?

வேலை நாள்கள் எத்தனையாக இருந்தால் என்ன... ‘வேலை’ நடக்க வேண்டுமே!

@ ‘படியூர்’ ஸ்ரீபூவராகவன், காங்கேயம்.

‘மக்களிடம் வருமானம் இல்லை’ என்கிறார்கள். ஆனால், டாஸ்மாக் கடைகளில் கூட்டத்தைப் பார்த்தீர்களா?

‘வருமானம் இல்லை’ என்ற கவலையை மறக்க அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. அண்டா, குண்டாவை அடகுவைத்தும், அரசாங்கம் கொடுத்த 500, 1,000 பணத்தை வைத்தும் குடிக்கிறார்கள்போல!

@அருண்பிரசாத், மதுரை.

அரசு அறிவிக்கும் அனைத்துச் சலுகைகளும் பாமர மக்களுக்குச் சென்றடைகின்றனவா?

பணக்காரர்களுக்குத் தவறாமல் சென்றடை கிறது என்பது மட்டும் நன்றாகத் தெரியும்.

@சையது முஹம்மது தமீம், திருமங்கலக்குடி.

அமெரிக்காவில், மனநல ஆலோசனை வழங்கும் நாய்க்கெல்லாம் கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்கிறார்களே... என்ன கொடுமை?

இங்கே நிறைய பேர் பணத்தைக் கொடுத்தும், அதிகாரத்தை வைத்தும் ‘டாக்டர்’ பட்டம் சுமந்து திரிகிறார் கள், பெருமைக்காக. ஆனால், அந்த நாய் சுமப்பதோ... தன் இணையற்ற செயலுக்காக. இதில் எங்கிருந்து வருகிறது கொடுமை!

@வேதிதா, கோயம்புத்தூர்.

ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் அவசரச் சட்டம் இப்போது அவசியமா?

தேர்தல் நெருங்குகிறது; அதற்கான செலவுகள் வேறு இருக்கின்றன; சசிகலா வேறு விரைவில் வெளியில் வரவிருக்கிறார்... இப்போது அவசரப்படாமல், வேறு எப்போது அவசரப்படச் சொல்கிறீர்கள்!

@வேணுகோபால் ராஜேந்திரன்.

கொரோனா, ரஜினியின் அரசியலுக்குச் சாதகமா... பாதகமா?

‘அண்ணாத்தே’யின் சினிமாவுக்கே அது பாதகத்தைக் கொண்டுவந்துவிட்டதே. அந்தக் கவலையிலிருந்தே அவரால் இன்னமும் மீள முடியவில்லை. நீங்கள் என்னடாவென்றால், அவருடைய அரசியல் பற்றிக் கவலைப்பட ஆரம்பித்துவிட்டீர்கள்!

கேள்விகள் அனுப்ப வேண்டியமுகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை- 600002 kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு