Published:Updated:

கழுகார் பதில்கள்

பாரதிராஜா, இளையராஜா
பிரீமியம் ஸ்டோரி
பாரதிராஜா, இளையராஜா

பூங்காற்று திரும்புமா!

கழுகார் பதில்கள்

பூங்காற்று திரும்புமா!

Published:Updated:
பாரதிராஜா, இளையராஜா
பிரீமியம் ஸ்டோரி
பாரதிராஜா, இளையராஜா

‘கோடந்தூர் எம்.ஜி.ஆர்.’ மனோகரன், சின்னதாராபுரம், கரூர் மாவட்டம்.

`கடல் சீற்றத்தால் சில நகரங்கள் நீரில் மூழ்கும்’ என்ற கணிப்பு உண்மையா?

உண்மை ஆகக் கூடாது.

வி.ஹரிகிருஷ்ணன், திருக்கழுக்குன்றம், காஞ்சிபுரம் மாவட்டம்.

ரஜினிகாந்தின் திரைப்பட சேவைக்காக வாழ்நாள் சாதனையாளர் விருதை அறிவித்துள்ளதே மத்தியில் ஆளும் பி.ஜே.பி?

ரஜினியின் சேவையில் எந்தச் சந்தேகமும் இல்லை. மிகச்சிறந்த நடிகர் என்று உலக அளவில் அறியப்பட்ட சிவாஜி கணேசன், முழுமையான காங்கிரஸ்காரர். அந்தக் காலத்தில் கட்சிக்காக ஊர் ஊராகச் சென்று தேர்தல் பிரசாரம் செய்தவர். ஆனால், காங்கிரஸின் ஆட்சிக்காலத்தில் சிறந்த நடிகர், வாழ்நாள் சாதனையாளர் என்றெல்லாம் கடைசி வரை சிவாஜி கணேசன் அங்கீகரிக்கப்படவே இல்லை. சிவாஜி ராவ், கொடுத்துவைத்தவர்.

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்

ஜெ.ஜானி, போரூர், சென்னை-116.

திருவள்ளுவருக்கும் காவி வேட்டி கட்டிவிட்டார்களே?

காந்தி, அம்பேத்கர், பெரியாரெல்லாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கே.பாலு, வேர்க்கிளம்பி, கன்னியாகுமரி மாவட்டம்.

விதிமீறலுக்காக தமிழகப் போக்குவரத்து போலீஸார் தரும் அபராத ரசீதில்கூட தமிழ் இல்லையே?

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு போன்போட்டுப் பாருங்கள்... ‘தெலுகுல சேவைகளுக்கு ஒகட்டினி பிரஸ் செய்யண்டி’, ‘பிரஸ் 2 ஃபார் இங்கிலீஷ்’, `இந்தி மே ஜான் காரி கேலியே தீன் தபாயே’. ஏடிஎம் மையக் கணினிகளில் தமிழைத் தேர்ந்தெடுத்துப் பாருங்கள், பணம் கிடைத்தால் நீங்கள் படா அதிர்ஷ்டசாலி!

ஆர்.ராமசாமி, பொள்ளாச்சி.

‘சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர் மகாராஷ்டிரா முதல்வராகப் பதவி ஏற்பார் என என் தந்தை பால் தாக்கரேவுக்கு வாக்குறுதி அளித்துள்ளேன்’ என்றே பி.ஜே.பி-க்கு கட்டையைப் போட்டுக்கொண்டிருக் கிறாரே உத்தவ் தாக்கரே?

பாவம், அவரும் எவ்வளவு காலத்துக்குத்தான் பல்லக்கு தூக்கிக்கொண்டே இருப்பார்.

@டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

பாரதிராஜா, இளையராஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்துள்ளது பற்றி?

பூங்காற்று திரும்புமா!

பாரதிராஜா, இளையராஜா
பாரதிராஜா, இளையராஜா

@டி.ஜே.தனபாலன் நஞ்சுண்டாபுரம்.

‘மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமைக்கப்படும்’ என்று டீஸர் வெளியிட்டுள்ளாரே பி.ஜே.பி அமைச்சர் ஒருவர்?

ஒரே போடு!

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14.

‘தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி விரைவில் கவிழ்ந்துவிடும்’ என்ற ஆரூடம் பொய்த்துவிட்டதே?

அவர், தன் கட்சிக்காரர்களை உசுப்பேற்றுவதற்காக அவ்வப்போது எதையாவது பேசிக்கொண்டிருக்கிறார். அதையெல்லாம்போய் நம்பிக்கொண்டு...

எல்.ஆர். சுந்தராஜன், மடிப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்.

ஓர் இரவு மழைக்கே ஆட்சியாளர்களின் சாயம் வெளுத்துவிட்டதே?

ஆனால், நமக்கு நாமே மாறி மாறிப் பூசிக்கொள்ளும் கரி மட்டும் கரையவே மாட்டேனென்கிறதே!

செ.அ.ஷாதலி, கோனுழாம்பள்ளம்.

சந்தர்ப்பவாத அரசியல் என்பது எது?

சமீபத்திய உதாரணம் ஹரியானா, மகாராஷ்டிரம்.

சம்பத்குமாரி, பொன்மலை.

``இரண்டே ஆண்டுகளில் தமிழகத்தை ‘சிங்கப்பூர்’ ஆக்குவோம்’’ என்று ஓ.பி.எஸ் கூறுகிறாரே?

முதலில், தமிழ்நாடாக விட்டுவைத்திருப்பார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறதே!

பாகாநத்தம். பா.சத்ரியன்.

எம்.பி., எம்.எல்.ஏ-க்கள்போல் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லையே. அவர்களும் மக்களால்தானே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?

மக்களிடம் ‘வாங்குவது’ மட்டுமே போதும் என விட்டுவிட்டார்கள்போல!

லட்சுமிசெங்குட்டுவன், வேலூர், நாமக்கல் மாவட்டம்.

தமிழிசை இல்லாத தமிழக அரசியல், சப்பெனப்போய்விட்டதே?

ம்... உமக்கெல்லாம் அரசியல் என்பது, யூடியூப் காமெடி சேனலாகிவிட்டது.

தமிழிசை
தமிழிசை

பி.சாந்தா, மதுரை-14.

‘பொதுத்தகவல்களை வெளியிட அதிகாரிகள் வெட்கப்படுவது ஏன்?’ என்று நீதிமன்றம் கேட்டுள்ளதே...

என்னது... அதிகாரிகள் வெட்கப்படுகிறார்களா! அவர்களைப் பொறுத்தவரை நீதிமன்றத்துக்கு ‘பெப்பே’தான்! தகவல்களைக் கேட்கும் பொதுஜனம்தான் ‘எத்தனை தடவை அலைவது?’ என வெட்கித் தலைகுனிந்து கிடக்கிறது.

பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி.

`‘தமிழகத்திலிருந்துதான் இந்திய வரலாறு தொடங்கப்பட வேண்டும் என்பதை கீழடி ஆய்வு உறுதிசெய்திருக்கிறது’’ என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது சரிதானே?

அவரவர் வரலாறு அவரவர் இடங்களிலிருந்து தொடங்கப்பட்டால் போதும். நாகரிகமடைந்துவிட்ட இந்தக் காலத்திலும், ‘என் வரலாறு பெரிது... உன் வரலாறு சிறிது’, ‘நான் ஆண்ட பரம்பரை’ என்றெல்லாம் அடித்துக்கொண்டு நிற்பது வெகுமானமல்ல, அவமானம். அரசியல் சுயலாபங்களுக்காக இஸ்லாம், கிறிஸ்துவம், இந்து, பௌத்தம் என மதச்சாயம் பூசிக்கொண்டு ஆட்சி நடத்தப்பட்டது/நடப்பதுதான் உலகின் இன்றைய அனைத்து பிரச்னைகளுக்கும் ஆணிவேர். ஆன்மிகம் வேறு ஆட்சி வேறு என்றுணர்ந்து, இந்தப் பூமியில் இருக்கும் ஒவ்வொரு நுண்ணுயிரியையும் காப்பவன்தான் அரசன் என்பதை உணர்ந்து ஆள்வோர் செயல்பட்டால், இதுபோன்ற கூக்குரல்கள் எழாது!

@ஜே.பரணி, தர்மபுரி.

உணர்ச்சிவசப்படாமல் யோசித்தால், ஆழ்துளைக்கிணற்றில் சிக்கி சுஜித் வில்சன் மரணமடைந்த விஷயத்தில் பெற்றோர் சட்டப்படி‌ தண்டிக்கப்பட வேண்டும். ஆனால், போட்டிபோட்டுக்கொண்டு நிதி உதவி செய்வது..?

நிதி உதவி என்பது, மனிதாபிமான அடிப்படையிலானது. அதை கேள்விக்குள்ளாக்கத் தேவையில்லை. ஆனால், கைவிடப்பட்ட கிணற்றை மூடாமல் அப்படியே விட்டுவிட்டால், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 304-IIன்படி `நிலத்தின்/கிணற்றின் உரிமையாளர்மீது வழக்கு பதிவுசெய்து கைதுசெய்யலாம்’ என்கிறது சட்டம். அரசாங்கத்தின் அத்தனை இயந்திரங்களையும் அங்கே இயக்கியவர்கள் இதை மறந்து, எதிர்க்கட்சிகளின் வாயை அடைப்பதில் மட்டுமே குறியாக இருந்தது தவறு.

@பல்லவ மன்னன், திருநெல்வேலி.

`தமிழ்நாடு தினம்’ கொண்டாடும் வேளையில், ‘தமிழ்நாட்டுக்கு என தனிக் கொடி வேண்டும்’ என்று கோரிக்கைகள் எழ ஆரம்பித்துவிட்டனவே?

முதலில் தனிக் குவளை, தனிச் சுடுகாடு ஒழியட்டும்!

@கே.ஆர். உபேந்திரன், தஞ்சாவூர்-6

தீபாவளியின்போது விதிகளை மீறியதற்காக ஆம்னி பஸ்களிடமிருந்து 4.52 கோடி ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளதே?

முதலில் ஆம்னி பஸ்களே விதிமீறல்தான். தமிழகத்தைப் பொறுத்தவரை, அவை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு சுற்றுலா ஊர்தி/ஒப்பந்த ஊர்தி என்ற வகையில் மட்டுமே இயக்கப்பட வேண்டும். ‘மதுர... மதுர...’, ‘திருநவேலி... திருநவேலி...’ என்றெல்லாம் பட்டவர்த்தனமாகக் கூவிக்கூவி, ஆன்லைனில் டிக்கெட் போட்டெல்லாம் ஆதாரபூர்வமாகவே இயக்குகிறார்கள். முக்கியமான இந்நாள்/முன்னாள் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், கல்வி வள்ளல்கள் எனப் பலரும் இப்படி விதிகளை மீறித்தான் கல்லாகட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை- 600002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!