Published:Updated:

கழுகார் பதில்கள்

Rajini, Modi
பிரீமியம் ஸ்டோரி
Rajini, Modi

அழிவுக்காலம்!

கழுகார் பதில்கள்

அழிவுக்காலம்!

Published:Updated:
Rajini, Modi
பிரீமியம் ஸ்டோரி
Rajini, Modi

@லா.ரா.கணபதி, மடிப்பாக்கம்.

நல்ல திட்டங்களைத் தந்து வெற்றிபெற நினைக்காமல்... பணபலம், கார்ப்பரேட் நிறுவனங்களின் தேர்தல் ஆலோசனைகள் போன்றவற்றையை நம்பும் நிலைக்கு அரசியல் கட்சிகள் தள்ளப்பட்டிருப்பது, ஜனநாயகத்துக்கு சோதனைக்காலம் என்பதைத்தானே காட்டுகிறது?

அழிவுக்காலம்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அ.கார்த்திகேயன், சேலம்.

தமிழ் மொழிப் பாடம் விஷயத்தில் தமிழக அரசு தடுமாறிக்கொண்டே இருக்கிறது. மத்திய அரசு வேறு இந்தி, சம்ஸ்கிருதம் எனப் பூச்சாண்டி காட்டிக்கொண்டே இருக்கிறது. போகிறப்போக்கைப் பார்த்தால், தமிழ் மொழிப் பாடம், விருப்பப் பாடமாக மாறிவிடும்போலிருக்கிறதே?

கழுகார் பதில்கள்

அதுதானே மேலிருக்கும் பலருடைய விருப்பம். உலகில் 6,912 மொழிகள் தற்போது உயிர்ப்புடன் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் 50 சதவிகித மொழிகள், இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகளில் மட்டுமே இருக்கின்றன. இவற்றில் 90 சதவிகித மொழிகள் இந்த நூற்றாண்டிலேயே அழிந்துவிடக்கூடும் என்று கணித்துள்ளனர். குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் பேசும் மொழிகள், மிக மிக அபாயகரமான கட்டத்தில் உள்ளன. நம்முடைய அந்தமான் பழங்குடிகளின் பல மொழிகள் இப்படி ஏற்கெனவே அழிந்து விட்டன.

‘போ’ (Bo) என்பது, அந்தப் பழங்குடிகளின் மொழிகளில் ஒன்று. அந்த மொழி தெரிந்திருந்த கடைசிப் பெண் 2010-ம் ஆண்டு இறந்தபோது, கூடவே அந்த மொழியும் இறந்துபோனது. இத்தகைய சூழலிலும் பல ஆயிரம் ஆண்டுகளாக உயிர்ப்புடன் இருக்கும் மொழிகளுக்கு புதைகுழி வெட்ட நினைப்பதுதான் புதிராக இருக்கிறது.

கே.கே.பாலசுப்ரமணியன், குனியமுத்தூர்.

ஒவ்வொரு விஷயத்துக்கும் நீதிமன்றம் சென்றுதான் பரிகாரம் தேட வேண்டுமா?

ம்... நாட்டின் நீதி பரிபாலனம், ‘கட்டப்பஞ்சாயத்தே போதும்’ என்கிற அளவுக்கு உங்களை யோசிக்கவைத்துவிட்டது, அப்படித்தானே!

அரசி சண்முகசுந்தரம், புதுவண்ணை, சென்னை-81.

ரயில் நிலையம் மற்றும் ரயில்களைப் பராமரிப்பது, பயணிகளிடம் இன்முகம் காட்டுவது என்றெல்லாம் இருந்திருந்தால், தனியார்மய முயற்சிகள் ஆரம்பமாகியிருக்குமா?

அனைத்து அரசுத் துறைகளிலுமே பெரும்பான்மை ஊழியர்களின் அலட்சியம் மற்றும் எஜமான மனோபாவம்தான், பொதுமக்களைக் கொதிப்படையவைக்கின்றன. டிக்கெட் கட்டணம், வங்கிச்சேவைக் கட்டணம் போன்றவைதான் தங்களுடைய வாழ்வாதாரம் என்பதை மறந்து, வாடிக்கையாளர்களைத் துச்சமாக மதிக்கும் போக்கு அவர்களிடமிருந்து இன்னும்கூட விலகவில்லை.

அதேசமயம், தனியார்மய முயற்சிக்கு இதுதான் காரணம் என்ற முடிவுக்கு வந்துவிடாதீர்கள். ஆட்சிகளையே மாற்றக்கூடிய கார்ப்பரேட் முதலாளிகளின் கனவை நனவாக்கும் முயற்சியின் ஆரம்பம்தான் அது. தனியாரிடம், வாடிக்கையாளர்களுக்கான மரியாதை கூடத்தான் செய்யும். கூடவே, பாக்கெட்டை அது பலமடங்கு பதம் பார்த்துவிடும், ஜாக்கிரதை.

‘காசு கொடுத்தாலும் வசதி இருக்குல்ல’ என்பவர்களுக்காக மட்டுமே கவலைப்படுவது அரசல்ல. ‘கக்கூஸ் பக்கத்துல உக்காந்துட்டாவது 185 ரூபாயில திருநெவேலி போய்ச் சேர்ந்துடணும்லே...’ என்று தவிக்கும் சாமானிய மக்களுக்குமானதுதான் அரசு என்பதை மறந்துவிடக் கூடாது.

ஹெச்.மோகன், மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்.

சுப்பிரமணியன் சுவாமி தமிழக கவர்னர் பதவியில் அமர்ந்தால், தமிழக அரசியல் நிலவரம் எப்படி இருக்கும்?

சுவாமி ‘மலையேறி’ பல காலங்களாகிவிட்டன.

பி.சாந்தா, மதுரை-14.

நெல்லை முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி கொலை வழக்கில், தி.மு.க-வைச் சேர்ந்த சீனியம்மாள் மற்றும் கணவர் சன்னாசி ஆகியோர் கைதாகியுள்ளனரே?

இதுவே சீனியம்மாள் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவராக இருந்திருந்தால், ‘அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, எதிர்க்கட்சிக்காரர்களால் எங்கள் கட்சியின் கொள்கைக் குன்று சாய்க்கப்பட்டிருக்கிறது’ என்று தி.மு.க மேடையில் முழங்கியிருப்பார்கள். இப்போது வாய் மூடிக் கிடக்கிறார்கள். ஆக, அரசியல் கொலைகளுக்குக் காரணம் தொழில் போட்டி, சீட்டுக்கு லஞ்சம், கமிஷன், போலி கௌரவம் போன்றவைதான் என்பதை மீண்டும் ஒருமுறை நமக்கு நிரூபித்திருக்கிறது இந்தக் கொலை.

@ஜி.ஆர்.மாதேஸ்வரன், புளியம் பட்டி, ஓமலூர்.

நரேந்திர மோடி, ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் திரைக்கதை ஒன்று என்னிடம் உள்ளது. வசனம், பாடல், இயக்கம் எல்லாம் நானே. நல்ல தயாரிப்பாளர் இருந்தால் சொல்லுங்களேன்?

கழுகார் பதில்கள்

மோடியே மெகா பட்ஜெட் தயாரிப்பாளராயிற்றே! ஏற்கெனவே ஏகப்பட்ட அட்வான்ஸெல்லாம் கொடுத்துவிட்டு, கால்ஷீட்டுக்காகக் காத்திருக்கிறார். அவரிடமே பேசிப்பாருங்களேன்.

மாடசாமி, மயிலாடுதுறை.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, இவ்வளவு சொத்து (சுமார் ரூ.5,000 கோடி) சேர்த்தும் உயில் எழுதாமல் சென்றது ஏன்?

Jayalalithaa
Jayalalithaa

5,000 கோடியா! இவ்வளவு சொத்து தனக்கு இருப்பதை ஜெயலலிதாவே அறிந்திருப்பாரா என்பதே சந்தேகம்தான். கடைசியாக 2016-ம் ஆண்டு ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டபோது அவர் தாக்கல் செய்த வேட்பாளர் மனுவில்கூட, 5,000 கோடியைக் காட்டவில்லையே. யார் யாரிடமோ இருக்கும் சொத்துகளுக்கெல்லாம் வேறொருவர் சட்டப்படி உயில் எழுத முடியாதுங்கோ..!

‘மீஞ்சூர்’ கோதை ஜெயராமன், சென்னை.

“காமராஜருக்குப் பிறகு காங்கிரஸால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. அதேபோல கருணாநிதிக்குப் பிறகு தி.மு.க-வும் ஆட்சியைப் பிடிக்க முடியாது” என்கிறாரே மு.க.அழகிரி?

தனக்குப் பிடிக்காதது யாருக்கும் பிடிக்கக் கூடாது என்பதை, என்ன அழகாகக் கோத்து வாங்குகிறார். என்ன இருந்தாலும் மு.க-வின் வாரிசாயிற்றே!

எஸ்.ராமதாஸ், சேலம்.

சென்னை மாகாணத்திலிருந்து நவம்பர் 1 அன்று பிரித்துப் புதிதாக உருவாக்கப்பட்டதால் கர்நாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் அந்த நாளை விழாவாகக் கொண்டாடுகின்றன. இழந்தவர்களான நாம் ஏன் ‘தமிழ்நாடு நாள்’ என்று அதைக் கொண்டாட வேண்டும்?

இது தெரிந்துதான் காங்கிரஸ் காலத்திலிருந்தே யாரும் கொண்டாடுவதில்லை. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரும்கூட கண்டுகொள்ளவில்லை. `1969 ஜனவரி 14 தமிழர் திருநாளன்று, அன்றைய முதல்வர் அண்ணாதுரையால் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டப்பட்டது. நியாயமாகப் பார்த்தால், அந்தத் தினத்தைத்தான் ‘தமிழ்நாடு நாள்’ எனக் கொண்டாட வேண்டும்’ என்று பலரும் எடுத்துச் சொல்லிவிட்டனர். ஆனால், ஏகத்துக்கும் கொண்டாட்ட மூடுலேயே இருக்கிறாரே எடப்பாடி... என்ன செய்ய?

@ப.த.தங்கவேலு, பண்ருட்டி, கடலூர் மாவட்டம்.

தமிழக அரசின் சமீபத்திய நடவடிக்கைகளில் கழுகாரின் பாராட்டுதலுக்குரியது என்று ஏதேனும் ஒன்று?

கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை. ஆனால், மத்திய அரசின் ‘கிச்சன் கார்டன்’, பாராட்டுக்குரியது. பள்ளிதோறும் ஊட்டச்சத்து தரும் காய்கறித் தோட்டம் அமைக்கச் சொல்லி சமீபத்தில் அறிக்கையை அனுப்பியுள்ளது மத்திய கல்வித்துறை. உண்மையிலேயே பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரிய ஒரு நடவடிக்கை இது. பள்ளிக் குழந்தைகளின் மனதில் விதைக்கப்படும் இந்தப் பசுமை முயற்சி, அவர்களின் வீடுகளிலும் எதிரொலிக்கும் என்பதுதான் இதன் நேர்மறை விளைவு!

‘ஏழாயிரம்பண்ணை’ எம்.செல்லையா, சாத்தூர்.

ரயில் சிநேகிதம் எப்படி?

ரயில் சிநேகமா... இப்போதெல்லாம் அப்படிப்பட்டவர்களை விரல்விட்டுகூட எண்ண முடிவதில்லையே. சிநேகத்துடன் பக்கத்தில் இருப்பவரை லேசாகப் பார்த்தாலே, ‘மயக்க பிஸ்கட் கொள்ளையனா இருப்பானோ!’ என்கிற பதில் பார்வைதானே பாய்கிறது. தவிர, நாம் மொத்த பேரும் மொபைலில்தானே முகம் புதைத்துக் கிடக்கிறோம்.

ஜி.வி.மனோ, கொலுவைநல்லூர்.

வேளாண் சேவையில் 45 வருடங்கள் என்றெல்லாம் விளம்பரம் செய்கிறார்களே ரசாயன உர வியாபாரிகள்?

அதற்காக, ‘வேளாண்மையை ஒழிக்கும் சேவையில்’ என்றெல்லாமா போட்டு விளம்பரம் செய்வார்கள்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை- 600002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!