பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

@ஸ்ரீபூவராகவன், படியூர், காங்கேயம்.

‘பெரியார், அண்ணா கொள்கைகள் இருக்கும் வரை எந்த ஆதிக்கச் சக்திகளும் தமிழகத்தில் நுழைய முடியாது’ என்று மு.க.ஸ்டாலின் மார்தட்டிக்கொள்கிறாரே?

என்னது... அண்ணா, பெரியாரின் கொள்கைகளா? ‘ஆதிக்கச் சக்திகள்’ என்று இவர்களால் வர்ணிக்கப்பட்ட/வர்ணிக்கப்படும் காங்கிரஸ்/பி.ஜே.பி-யுடன் மாறி மாறி கூட்டணி வைத்தபோதே அவற்றையெல்லாம் குழிதோண்டிப் புதைத்தது மறந்துவிட்டதுபோல.

கழுகார் பதில்கள்

@அ.ராஜப்பன், கருமத்தம்பட்டி.

அயோத்தி பிரச்னை சுமுகமாக முடிந்துவிட்டது என்று எந்த அளவுக்கு நம்பலாம்?

நம்பிக்கையின்பேரில்தானே தீர்ப்பே வழங்கியிருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆர்.ரமேஷ், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டம்.

‘பி.ஜே.பி., இனி ராமரை வைத்து அரசியல் செய்ய முடியாது’ என்று காங்கிரஸ் கூறியிருக்கிறதே?

அதுதான் ஏற்கெனவே மதுரா கிருஷ்ணர், காசி விசுவநாதர் எல்லோரும் தயாராக இருக்கிறார்களே!

@மா.உலகநாதன், திருநீலக்குடி.

‘சர்வாதிகாரியாக மாறுவேன்’ என்று ஸ்டாலின் சூளுரைத்திருக்கிறாரே?

ஓ... இனிமேல்தானா!

@ஆர்.சுப்ரமணியன், சென்னை.

இந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி எப்படி இருக்கும்?

அமைதியாகவே இருக்க வேண்டும்.

@சீதா.ரவி, சிதம்பரம்.

‘ஆளுமை சக்திகொண்ட கருணாநிதி, ஜெயலலிதாபோல் தற்போதைய தலைவர்கள் இல்லை’ என்று சொல்லி, ரஜினிகாந்தை மட்டும் புகழ்ந்துவந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் பேச்சில் தற்போது மாற்றம் ஏற்பட்டது ஏன்?

ச்சீச்சீய்... இந்தப் பழம் புளிக்கும்!

@பல்லவ மன்னன், நெல்லை.

அரசியல் தலைவர்களுக்கு டாக்டர் பட்டமும் விருதுகளும் வழங்குவது பற்றி?

புகழ்போதைகொண்டவர்கள்தான் இங்கே 100-க்கு 99 சதவிகிதம். கருணாநிதியை ‘கலைஞர்’ என்றும், எம்.ஜி.ஆரை ‘புரட்சித்தலைவர்’ என்றும், ஜெயலலிதாவை ‘புரட்சித்தலைவி’ என்றும்தான் அழைக்க வேண்டும். மாற்றுக்கட்சிக் காரராக இருந்தாலும் சரி, அரசியலுக்கே சம்பந்தமில்லாதவர்களாக இருந்தாலும் சரி இப்படித்தான் அழைக்கவேண்டும் என்று ‘அன்புடன்’ மிரட்டப்படுவார்கள். அப்படி அழைக்கும்போது சம்பந்தப்பட்டவர்களின் கடைவாயில் துளிர்க்கும் புன்னகைக்கு அளவே இல்லை. இந்தப் புகழ்போதைதான், தாங்கள் மக்களால் மக்களுக்கு உழைப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதை மறக்கடித்து, வானத்திலிருந்து குதித்தவர்கள்போல் உணரவைத்து, ஆட்சியையே ஊழலாலும் லஞ்சத்தாலும் நிரப்பவைத்து நாட்டையே நாசம் செய்ததற்கு முக்கிய காரணி! ‘ஊருக்கு உழைப்பதற் காக மக்கள் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். மக்கள் பணியாற்றிவருகிறேன். எனக்கு எதற்கு பட்டம்? என் பெயரைச் சொல்லி அழைத்தாலே போதும்’ என்று எந்தத் தலைவரும் சொன்னதாகத் தெரியவில்லை.

ஆர்.ராமசாமி, பொள்ளாச்சி, கோயம்புத்தூர் மாவட்டம்.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்திலிருந்து விருப்ப ஓய்வுபெறுவதற்கு 60,000 பேர் தயாராக இருக்கிறார்களாமே!

மத்திய அரசின் விருப்பமே அதுதானே! அப்போதுதானே வெகுவிரைவில் தனியாருக்கு பட்டா போட்டுக் கொடுக்க முடியும்; அடுத்த தேர்தலுக்கு 700 கோடி, 800 கோடி என நன்கொடை பெற முடியும்.

சோ.பூவேந்த அரசு, சின்னதாராபுரம், கரூர் மாவட்டம்.

ஆளானப்பட்ட சசிகலாவையே அ.தி.மு.க-விலிருந்து தூக்கியடித்துவிட்டார்கள் என்பதால், தி.மு.க பொதுச்செயலாளர் பதவி தம் குடும்பத்தைவிட்டு வெளியே செல்வதை ஸ்டாலின் விரும்ப மாட்டார்தானே?

குடும்பமா... தன்னைவிட்டே வெளியே செல்லாமல் பார்த்துக்கொண்டுவிட்டாரே! ‘ஜனநாயகம் மிகுந்த கட்சி’யான தி.மு.க-வில் பொதுச்செயலாளருக்கான அதிகாரங்களும் தலைவருக்கு மடைமாற்றப்பட்டுவிட்டது சமீபத்திய பொதுக்குழு மூலமாக!

@டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தன்னைச் சந்திக்க வருபவர்கள் ஓர் எலுமிச்சைப் பழம் கொண்டுவந்தாலே போதும் என்கிறாரே?

எலுமிச்சைப் பழமா... டயரின் அடியில் வைத்து தினம்தோறும் காலையில் வண்டியை நகர்த்துவது தொடங்கி, ஒவ்வோர் இடத்துக்கும் ஒவ்வொருவிதமான குறியீடு உண்டு. அரசியலைப் பொறுத்தவரை சைதை துரைசாமியிடம் கேட்டால், வரலாற்று விளக்கமே கொடுப்பார். 1972-ல் கருணாநிதிக்கு அவர் எலுமிச்சைப் பழ மாலை போட்ட கதை ரொம்பவே ஃபேமஸ்!

@சரவணக்குமார் சின்னாசாமி, சின்னதாராபுரம்.

ஓட்டுக்காகக் கையேந்தும் எல்லா கட்சிகளையும் கப்சிப் ஆக்கிய அயோத்தி வழக்கின் தீர்ப்பு, சட்டத்தின் நீதியா?

கழுகார் பதில்கள்

அரசியல்வாதிகள் வாயை மூடிக்கொண்டு விட்டனர். ஆனால், சட்டப் புலவர்கள் சிலர் வாயைத் திறந்துள்ளனர். ‘அரசியலமைப்புச் சட்ட மாணவனாக நான் மிகவும் கலங்கிப் போயிருக்கிறேன். சிறுபான்மையினர் உட்பட இந்தியாவின் அனைத்து குடிமக்களின் உரிமை களையும் பாதுகாக்கக் கடமைப்பட்டதுதான் உச்ச நீதிமன்றம். ஆனால், எங்கே என் உரிமைகள் என்று கேட்கும் நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள் ளேன்’ என்று கேட்டிருக்கிறார் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி. உச்ச நீதிமன்றத்தின் மற்றொரு முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கவலை பொங்க ட்வீட் செய்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சந்துருவும் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

@பிரதீபா ஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை, சேலம் மாவட்டம்.

‘மதுக்கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் ஆறாக ஓடும்’ என்று அமைச்சர்களே கூறுவது எதைக் காட்டுகிறது?

அனுபவத்தை!

@ஆர்.ஹரிகோபி, புதுடெல்லி- 75.

‘சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல், தமிழக அரசுடன் ஒத்துழைப்ப தில்லை’ என்று அரசாங்கமே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறதே?

ஆமாம்... தமிழக அரசு சொல்லும் எதையுமே அவர் கேட்பதில்லைதான். சிலைக்கடத்தல் பேர்வழிகள் என்று அவர் தேடித் தேடி வழக்கு போடுகிறார். அமைச்சர்களிடமெல்லாம் கேட்டுவிட்டு வழக்கு போடுவதில்லை. அதேபோல அமைச்சர்கள் சொல்பவர்களையெல்லாம் வழக்கிலிருந்து விடுவிப்பதுமில்லை. அமைச்சர்கள் தான் ‘தமிழக அரசு’ என்பதே அவருக்கு மறந்துவிட்டது.

@பார்த்தசாரதி, திருப்பூர்.

ஆயுதப்படை அவ்வளவு கொடுமையானதா, தவறு செய்யும் காவலர்களை அங்கே மாற்றல் செய்து விடுகிறார்களே?

ம்... காவல்துறையில் இருந்துகொண்டு கையூட்டு வாங்க முடியாத வாழ்க்கையைவிடக் கொடுமையான ஒன்று இருக்க முடியுமா?

@சு.சேகர், ஆலப்பாக்கம், சென்னை-16.

உலகப் பொதுமறை தந்தவரையும், எல்லோருக்கும் பொதுவானவர்களையும் மதங்களில் அடைப்பது மனிதமா?

கணிதம்!

@டாக்டர் குரு, சேலம்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, ‘திருவள்ளுவர் பிறந்த மண்’ என்று பெருமைப்பட்டிருக்கிறாரே?

‘தெய்வப்புலவர்’ என்றும்கூட பெருமைப் பட்டுள்ளார்.

@மணிகண்ட பிரபு, திருப்பூர்.

இடதுசாரிகளிடம் இருக்கும் குறைகளைக் கூற முன்வரும் பலரும், திராவிட கட்சிகளின் குறைகளை அதிகம் கூற முன்வருவதில்லையே?

நன்றாக இருக்க வேண்டும் என்று நம்மால் நினைக்கப்படுபவர்கள்மீதுதானே நாம் அதிக அக்கறை காட்டுவோம்.

எம்.செல்வராஜ், போரூர், சென்னை-116.

முதல்வர் எடப்பாடியாரை போரூர்-குன்றத்தூர் சாலையில் ஒரு டிரிப் வந்து போகச் சொல்ல முடியுமா?

என்ன... அதை உங்களுக்கு எட்டுவழிச் சாலையாக மாற்ற வேண்டும் அவ்வளவுதானே!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை- 600002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு