Published:Updated:

கழுகார் பதில்கள்

வெங்காய விலை
பிரீமியம் ஸ்டோரி
News
வெங்காய விலை

வெங்காய விலை அப்பப்போ பெரிய பிரச்னையாகி விடுகிறதே?

@பெ.பச்சையப்பன், கம்பம்.

உரிச்சா மட்டும் இல்லை... வாங்கறப்பவும் கண்ல தண்ணி வர்ற அளவுக்கு விலையேறினா பிரச்னை ஆகத்தானே செய்யும்!

@ம.தமிழ்மணி, வெள்ளக்கோவில்.

இந்த ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸின் செயல்பாடு மிக மோசமாகிப் போனதற்கு என்ன காரணம்?

அனுபவ சீனியர்களும், துடிப்பான இளைஞர்களும் சரிவிகிதத்தில் மிக்ஸாவது ஓர் அணிக்கு மிக முக்கியம். இந்த சீஸன் அணியில் அது மிஸ்ஸிங். இது கிரிக்கெட்டுக்கு மட்டும் அல்ல... அரசியலுக்கும் பொருந்தும்!

@ப.தங்கவேலு, பண்ருட்டி.

ஒருவேளை, 2015 போல எதிர்பாராமல் பெருவெள்ளம் வந்தால், சென்னை மாநகரம் எதிர்கொள்ளத் தயாராகிவிட்டதா?

பெருவெள்ளமா... சின்னத் தூறலுக்கே சென்னை பல்லிளிக்குது தங்கவேலு.

@ஆர்.சுந்தரராஜன், சிதம்பரம்-608 001.

`மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் வசனப்பேச்சு சினிமாவுக்கு மட்டுமே நன்றாக இருக்கும். ஆனால், அரசியலுக்கு நன்றாக இருக்காது!’ என்கிறாரே அமைச்சர் கடம்பூர் ராஜூ?

திரையில், தமிழ்நாட்டின் பல மாவட்ட வட்டார வழக்கு மொழிகளை அநாயாசமாகப் பேசி நடிக்கும் கமல்ஹாசன், மேடைகளில் மட்டும் நிகண்டு மொழியிலேயே பேசுவேன் என ஏன் அடம்பிடிக்கிறார் என்பது தெரியவில்லை!

@ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம் -608 001.

கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாமே..?

இது ஓர் அரசாங்கத்தின் அடிப்படைக் கடமை. அதை,தேர்தல் வாக்குறுதியாக மாற்றியது அநாகரிகம்!

ஆர்.துரைசாமி, கணபதிபுதூர்.

தன் வாழ்நாள் முழுவதும் மக்கள் சேவையே முக்கியம் என்று செயல்பட்ட அரசியல் தலைவர் யார்?

யாருங்கறதை விடுங்க... `செயல்படுகிற’ அப்படினு நிகழ்காலத்துல கேள்வியைக் கேட்கிற சூழல்ல நாம இல்லைங்கறது வருத்தம்தான்!

அ.ஜெயப்பிரகாஷ், கழுகுமலை.

சமுதாயத்தில் நடக்கும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது, தட்டிக்கேட்பது... எதைப் பத்திரிகை செய்ய வேண்டும்?

சுட்டிக்காட்டுவதன் மூலம் மக்களைத் தட்டிக்கேட்க வைக்க வேண்டும்!

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

தொண்டர்கள், ரசிகர்கள் யாருடையது அதிக வெறித்தனம்?

ரசிகர்களாக இருப்பவர்கள் தொண்டர்களாக மாறும்போது வரும் வெறித்தனம்!

ஆடியபாதம், மதுரை.

கோபம் நல்ல உணர்ச்சியா?

எந்த உணர்ச்சியும், நன்மைக்குரிய உணர்ச்சியா தீமைக்குரிய உணர்ச்சியா என்பது அது வெளிப்படும் சந்தர்ப்ப சூழ்நிலையைப் பொறுத்தே அமைகிறது. கோபம்கொள்வது ஒரு சூழலில் சிறந்தது என்றால், கோபமூட்டுவது மற்றொரு சூழலில் சிறந்ததாக அமையும். அரசியல், போர் பற்றிய நூல்களில் இது குறித்து மிக விரிவாகவும் ஆழமாகவும் பேசப்பட்டிருக்கிறது. பால்தசார் கிராசியன் என்ற ஸ்பெயின் நாட்டு எழுத்தாளரின் இந்தக் குறிப்பு மிகவும் பிடித்த ஒன்று: ‘சினமூட்டுதல் ஒரு மாபெரும் வியூகம். மிகவும் பாதுகாப்பாகப் பூட்டப்பட்ட இதயத்துக்கான ஒரு திறவுகோல். ஒருவனது மூடி மறைத்த மொழி நோக்கி ஏவப்படும் இழிமொழியானது, ஆழந்துகிடக்கும் ரகசியங்களை வேட்டையாடும் வழியாகும்!’

@பிரகாஷ் பண்ணாரி.

நான் சி.எம் ஆகணும். இப்ப என்ன செய்ய? ஐடியா ப்ளீஸ்!

சாரி... உங்களுக்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை பிரகாஷ்... கொரோனா அச்சத்தால கூவத்தூர் ரிசார்ட்லாம் மூடிவெச்சிருக்காங்களாம்!

மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி.

தமிழர்களின் ரத்தத்தில் கலந்தது எது... சினிமா? அரசியல்? அறியாமை?

முதலில் இந்த மூன்று விஷயங்களுக்கும் மிக நெருக்கமான உறவு உண்டு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சினிமா பிம்பங்களிடம் அரசியல் தலைவர்களையும், அரசியல்வாதிகளிடம் சினிமா சாகசங்களையும் எதிர்பார்த்து ஏமாந்துபோகும் அறியாமை நம் ரத்தத்தில் கலந்தது!

கழுகார் பதில்கள்

ஸ்ரீ.மல்லிகா குரு, மேற்கு மாம்பலம்.

நியாயமற்ற வழிகளில் ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றும் கூட்டத்தை விலக்கிவைக்க மக்கள் எதாவது செய்ய முடியுமா?

நியாயமான முறையிலோ, நியாயமற்ற முறையிலோ ஆட்சியைக் கைப்பற்றும் கூட்டத்துக்கு அதிகாரத்தைக் கொடுத்தது மக்கள்தானே!

@இல.கண்ணன், நங்கவள்ளி.

கழுகாரே ஸ்டாலின் ‘சைக்கிளிங்கை’ப் பார்த்தீரா?

கழுகார் பதில்கள்

புத்தாண்டு சபதமெடுத்து பத்து நாள் ஜிம்முக்குப் போவதுபோல, இது எலெக்‌ஷன் சைக்கிளிங்!

@சீ.பாஸ்கர், நந்திவரம்.

தங்களது கொள்கைகளை வீட்டிலேயே கடைப்பிடிக்கவைக்க முடியவில்லை என்று குஷ்பு யாரைக் குறிப்பிடுகிறார்?

துர்காஷ்டமியும் அதுவுமாய் இதெல்லாம் நமக்குத் தேவையா!

@V.பாலசுப்பிரமணியன், மன்னார்குடி.

விவாதங்களுக்கும், மாற்றுக் கருத்துகளுக்கும் பேட்டிகள் மற்றும் வலைதளங்களில் பதிலளிக்கும்போது நாகரிகமற்ற முறையில் பா.ஜ.க-வினர் பதிலளிப்பது சரியா?

அவரவர் சொல்லும் பதில்களிலிருந்துதான் அவரவரின் தரம் தெரியவரும்! ‘யாகாவாராயினும் நா காப்பது’ நல்லது!

கழுகார் பதில்கள்

பா.சிவகுமார், கோவை.

மு.க.ஸ்டாலின் அண்ணனாகவும், கமலஹாசன் தம்பியாகவும் நடிக்க என்னிடம் கதை இருக்கிறது. யாருக்கு அனுப்புவது?

சீரியஸாவே இதைக் கேக்குறீங்களா இல்லை... ஜூ.வில ஜோக் வராத குறையைத் தீர்த்துவெக்கறீங்களா? வர வர கற்பனைக்கு எல்லையே இல்லாமப் போச்சே சிவா!

@ம.தமிழ்மணி, வெள்ளக்கோவில்.

`அதிபர் தேர்தலில் எனக்குத் தோல்வி ஏற்பட்டால் நாட்டைவிட்டு வெளியேறுவேன்’ என்று ட்ரம்ப் கூறுகிறாரே..?

அங்கிருந்து இங்கே ஏதும் வந்துடப் போறாருனு பயப்படறீங்களா... இல்லை அதே மாதிரி இங்கேயும் யாரும் சொல்லணும்னு எதிர்பார்க்குறீங்களா?

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள்,

ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!