Published:Updated:

கழுகார் பதில்கள்

புஷ்பம் பிரியா சௌத்ரி
பிரீமியம் ஸ்டோரி
புஷ்பம் பிரியா சௌத்ரி

இது ஓர் அரசியல் ஸ்டன்ட் என்று சொல்லப் பட்டாலும், அரசியலைச் `சாக்கடை’ என்று இளைஞர்கள் ஒதுக்கும் காலத்தில், இவர்கள் வருகை வரவேற்புக்குரியதுதான்.

கழுகார் பதில்கள்

இது ஓர் அரசியல் ஸ்டன்ட் என்று சொல்லப் பட்டாலும், அரசியலைச் `சாக்கடை’ என்று இளைஞர்கள் ஒதுக்கும் காலத்தில், இவர்கள் வருகை வரவேற்புக்குரியதுதான்.

Published:Updated:
புஷ்பம் பிரியா சௌத்ரி
பிரீமியம் ஸ்டோரி
புஷ்பம் பிரியா சௌத்ரி

சீ.பாஸ்கர், நந்திவரம்-கூடுவாஞ்சேரி.

பிரதமர் நரேந்திர மோடி, பத்திரிகையாளர்களைச் சந்திப்பதில்லையே... ஏன்?

பத்திரிகையாளர்களைச் சந்தித்தால், அவர்களின் கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும். அதற்கு இவர் சொல்லும் பதில்களுக்கான விமர்சனங்களையும் தாங்கிக்கொள்ள வேண்டும். எதற்கு இந்த வம்பெல்லாம் என்று அவர் நினைத்து, தனது செயல்பாடுகள் அனைத்தும் மக்களின் விருப்பப்படியே நடப்பதுபோல ஒரு மாயையை உருவாக்கவே ‘நான் மன் கி பாத்ல என்ன பேசணும்னு சொல்லுங்க...’’ என்று கேட்கிறார்போல!

வண்ணை கணேசன், சென்னை-110.

எந்தவொரு கட்சியும், மற்றொரு கட்சியுடன் கூட்டணி வைக்க தொண்டர்களைக் கேட்பதில்லையே... ஏன்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கசாப்புக்கடைக்காரர்கள் ஆட்டிடம் அனுமதி கேட்பதில்லை!

புஷ்பம் பிரியா சௌத்ரி
புஷ்பம் பிரியா சௌத்ரி

பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி.

பீகார் தேர்தலில் லண்டன் ரிட்டர்னான 28 வயது ‘புஷ்பம் பிரியா சௌத்ரி’யின் கட்சியான ‘புளூரல்ஸ்’ படுதோல்வி கண்டது பற்றி!?

தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்துக்கொண்டு அனைத்துத் தொகுதி களிலும் வேட்பாளர்களைக் களமிறக்கினார் - ஐக்கிய ஜனதா தளத் தலைவர்களில் ஒருவரான வினோத் சௌத்ரியின் மகள் - புஷ்பம் பிரியா சௌத்ரி. இது ஓர் அரசியல் ஸ்டன்ட் என்று சொல்லப் பட்டாலும், அரசியலைச் `சாக்கடை’ என்று இளைஞர்கள் ஒதுக்கும் காலத்தில், இவர்கள் வருகை வரவேற்புக்குரியதுதான்.

@V.பாலசுப்பிரமணியன், மன்னார்குடி.

வாய் கூசாமல் பொய் பேசும் இந்திய அரசியல்வாதிகள், உண்மையிலேயே இறைவன் இருப்பதை நம்புகிறவர்களா?

‘காசேதான் கடவுளடா’ என நினைப்பார்கள் போல!

ம.தமிழ்மணி, குப்பம், ஆந்திரா.

கழுகார் மிகவும் விரும்பிக் கொண்டாடும் பண்டிகை எது?

ஜனநாயகத்தில் மிகப்பெரிய பண்டிகையே தேர்தல்தான். கடமையை உணர்ந்து நேர்மையுடன் அந்தத் தேர்தலை மக்கள் எதிர்கொள்ளும் நாளே கொண்டாட்டத்துக் குரிய நாள்!

@ஆர்.அஜிதா கம்பம்.

எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்களில் யாரையெல்லாம் நம்புகிறார்?

நம்பிக்கையா... அரசியல் அரிச்சுவடியிலேயே இல்லாத ஒரு விஷயத்தைக் கேட்கிறீர்களே அஜிதா!

கழுகார் பதில்கள்

@சுலைமான் பாஷா.

‘அமித் ஷா வருகை எதிர்க்கட்சிகளை பயம்கொள்ள வைக்கும்!’ என்ற எல்.முருகன் பேச்சு யாரை மனதில் வைத்து?

அரசாங்கத் தடையையும், நீதிமன்றக் கண்டிப்பையும் ஒரு பொருட்டாக எண்ணாமல், ’வேல் யாத்திரை நடத்தியே தீருவோம்’ என்று தடையை மீறி நடத்திக் கொண்டிருக்கும் வேளையில், உள்துறை அமைச்சரின் வருகை என்பது பொதுவாகவே பயமளிக்கக்கூடிய விஷயம்தான்.

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

அரசியல்வாதிகள் எப்படி இருக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள்?

எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்திருந்ததெல்லாம் ஒரு காலம். இப்போதெல்லாம் ‘நரி இடம் போனாலென்ன வலம் போனாலென்ன... மேல விழுந்து பிடுங்காமல் போனால் சரி’ என்கிற மனநிலைக்கு மக்கள் மாறிக்கொண்டிருக் கிறார்கள். ஆனால், மக்களின் இந்த மனநிலை ஆபத்தான ஒன்று!

கழுகார் பதில்கள்

சண்முகம், மதுக்கூர்.

கழுகார் சமீபத்தில் படித்து, பகிர நினைக்கும் உலகச் செய்தி ஒன்று..!

துர்க்மெனிஸ்தானில் அலபாய் என்றொரு நாய் இனம் இருக்கிறது. இங்கே ராஜபாளையம் இனம்போல, அந்த நாட்டில் அலபாய் இன நாய்கள் மிகப் பிரபலம். துர்க்மெனிஸ்தான் அதிபர் Gurbanguly Berdymukhamedov, ஆறு மீட்டர் உயரத்தில் தங்கமுலாம் பூசிய சிலை ஒன்றைக் கடந்த வாரம் அந்த நாய்க்குத் திறந்து வைத்திருக் கிறார். ‘‘நாட்டில் பஞ்சமும் வறுமையும் தலைவிரித்தாடுகின்றன. பெரும் பணக்காரர்கள் குடியிருக்கும் குடியிருப்பில், இந்தச் சிலையைத் திறந்துவைத்திருக்கிறார் அதிபர். அங்கே இருப்பவர்களுக்கு எங்கள் பசி தெரியுமா!” என்று கொதித்துக் கொண்டிருக்கிறார்கள் மக்கள். அந்த வேதனை அந்நாட்டு மக்களுக்கு மட்டுமான தாகத் தோன்றவில்லை.

P.அசோகன், கொளப்பலூர், கோபிச்செட்டிபாளையம்.

இந்த தீபாவளி எப்படி இருந்தது?

2020 மார்ச்சுக்குப் பிறகு எல்லாருடைய வாழ்க்கையையும் கொஞ்சமாவது பாதித்த கொரோனா துன்பங்களெல்லாம் வெடித்துச் சிதறிவிட்டதாகவும், கொட்டிய மழை இந்த ஆண்டின் பழைய கவலைகளையெல்லாம் கழுவிவிட்டதாகவும் தோன்றியது. இனிவரும் நாள்களை நம்பிக்கையோடு எதிர்கொள்வோம்!

@சௌந்தர், அரியலூர்.

என்னிடம் வேலை செய்யும் இருவரில் ஒருவர் மிகச் சாதுர்யமாகவும் வேகமாகவும் வேலைகளைச் செய்கிறார். இன்னொருவர் சொதப்புகிறாரே...

ஓர் அரண்மனையில் எலி ஒன்று இருந்தது. மன்னனின் ஆணைப்படி அரண்மனையின் வளர்ப்பு பூனைகளைவிட்டு அதைப் பிடிக்க முயன்றனர் பணியாட்கள். பூனைக்குப் போக்குக் காட்டிய எலி, ஓடி ஒளிந்துவிட்டது. பல நாள்கள் இது தொடர, மந்திரியிடம் புலம்பினார் மன்னர். மந்திரி உடனே, பணியாள் ஒருவர் வீட்டில் வளரும் பூனையைக் கொண்டுவரச் சொல்லி எலியைப் பிடிக்க ஏவினார். ஒரே முயற்சியில் பிடித்துவிட்டது அந்தப் பூனை. மன்னர், ‘‘இந்தப் பூனை மட்டும் ஒரே நாளில் எப்படிப் பிடித்தது?’’ என்று கேட்டார்.

மந்திரி சொன்னார்: ‘‘அந்தப் பூனைக்குப் பசி இருந்தது மன்னா. அரண்மனைப் பூனைக்குப் பசி இருக்கவில்லை!’’

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை,சென்னை-600 002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!