Published:Updated:

கழுகார் பதில்கள்

நிதிஷ் குமார் - குஷ்பு
பிரீமியம் ஸ்டோரி
நிதிஷ் குமார் - குஷ்பு

அலுவலகங்களில்கூட ‘கிரேஸ் டைம்’ அதிகபட்சம் 15 நிமிடங்கள்தான். இந்த வசனம் வந்து 25 வருஷங்கள் ஆச்சே பாஸ்.

கழுகார் பதில்கள்

அலுவலகங்களில்கூட ‘கிரேஸ் டைம்’ அதிகபட்சம் 15 நிமிடங்கள்தான். இந்த வசனம் வந்து 25 வருஷங்கள் ஆச்சே பாஸ்.

Published:Updated:
நிதிஷ் குமார் - குஷ்பு
பிரீமியம் ஸ்டோரி
நிதிஷ் குமார் - குஷ்பு

@கே.கே.வெங்கடேசன், அழகேசன் நகர், செங்கல்பட்டு.

94 வருட பாரம்பர்யமிக்க லக்ஷ்மி விலாஸ் வங்கிக்கு விதிக்கப்பட்ட வர்த்தக் கட்டுப்பாடுகள் குறித்து...

சென்ற முறை பட்ஜெட் தாக்கல் செய்தபோது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தன்னை லட்சுமியாகச் சித்திரித்த ஒரு படத்தை சந்தோ ஷமாகப் பகிர்ந்தார். அந்தப் பேரைக் காப்பாற்ற வாவது இந்த வங்கியைக் காப்பாற்றியிருக்கலாம். ஏற்கெனவே ‘யெஸ்’ஸுக்கு ‘நோ’ சொன்னவர் களாச்சே... பாவம் பணம் போட்டவர்கள்!

@சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம், திருநெல்வேலி.

அரசியல்வாதிகள் யார் முன் மௌனம் காப்பர்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கண்ணாடிக்கு முன்னால்!

@எல்.ஆர்.சுந்தரராஜன், மடிப்பாக்கம்.

‘ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஒரு பைசாவுக்குக்கூட ஊழல் நடைபெறாது’ என ஸ்டாலின் மக்களுக்கு உறுதி அளிப்பாரா?

ம்ம்... ‘ஒரு பைசாவுக்கு’ ஊழல் நடைபெறாது என்று உறுதி அளிக்க வாய்ப்புண்டு!

@சரவணகுமார் சின்னசாமி, தாராபுரம்.

சிறையிலிருந்து விடுதலையானவுடன், அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக சின்னம்மா சசிகலாவை அறிவித்த கையோடு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் திருமதி சசிகலாவும் இணைந்து, ‘துரோகிகளை அடையாளம்காண நாங்கள் நடத்திய திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று’ என்று அறிவிக்கும் நிலை வரும்போல் தெரிகிறதே..?

இன்னும் ஒரு பக்கம் எழுதினால் வெப் சீரிஸுக்கு கதைச்சுருக்கம் தயாராகிவிடும்... ட்ரை பண்ணுங்களேன்!

நிதிஷ் குமார்
நிதிஷ் குமார்

த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்.

`எதிலும் சமரசம் செய்துகொள்ளாமல் செயல்படுவேன்’ என்று நிதிஷ் குமார் கூறியிருக்கிறாரே..?

அந்த நம்பிக்கையில்தான் நான்காவது முறையாக அவரை பீகார் மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். நடையாய் ‘நடந்தவர்கள்’ வாழ்வை அவர் நிலை ‘நிறுத்துவார்’ என்று நம்புகிறார்கள்!

தாமஸ் மனோகரன், உழவர்கரை, புதுச்சேரி.

`லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக...’ அரசியலுக்கு வர ரஜினிக்கு வாய்ப்பு உண்டா?

அலுவலகங்களில்கூட ‘கிரேஸ் டைம்’ அதிகபட்சம் 15 நிமிடங்கள்தான். இந்த வசனம் வந்து 25 வருஷங்கள் ஆச்சே பாஸ். இன்னுமா இந்த உலகம்...

ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்.

தண்டி யாத்திரை, ரத யாத்திரை, பாத யாத்திரை, வேல் யாத்திரை... என்ன வித்தியாசம்?

‘யாத்திரை’ என்ற ஒரு சொல் ஒத்துப்போகிறது என்பதற்காக எதை எவையெவற்றோடு ஒப்பிடுகிறீர்கள் செல்லையா! ரொம்ம்ம்ம்பத் தப்பு!

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

புதுவையில் கருணாநிதி பெயரில் காலைச் சிற்றுண்டித் திட்டத்தை அரசு செயல்படுத்தியிருப்பது பற்றி..?

நல்ல முயற்சி. யார் பெயரில் செய்தால் என்ன... ஏழை மாணவர்கள் பசியாறினால் சந்தோஷம்!

@சீ.பாஸ்கர், நந்திவரம்-கூடுவாஞ்சேரி.

வாரிசு அரசியல் எங்கே, எந்தக் கட்சியில் அதிகமாக இருக்கிறது?

எந்தெந்தக் கட்சி அரசியல்வாதிகளுக்கு வாரிசுகள் இருக்கிறார்களோ அந்தக் கட்சியில் வாரிசு அரசியலும் இருக்கிறது!

@P.அசோகன், கொளப்பலூர்.

சார், தெரியாமல்தான் கேட்கிறேன்... நாமெல்லாம் வாக்களித்து ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பது எதற்காக?

எதிர்பார்த்து தேர்ந்தெடுத்து... ஏமாந்து... ரொம்ப வெறுத்துட்டீங்கபோல அசோகன்!

ம.ராகவ்மணி, வெள்ளக்கோவில்.

அ.தி.மு.க., எந்தக் கொம்பனுக்கும் பயப்படாது என்று காட்டமாகப் பேசியிருக்கிறாரே அமைச்சர் சி.வி.சண்முகம்?

இருட்டுப் பாதையில் நடந்துபோகும்போது, பயப்படாமலிருக்க, சிலர் சத்தமாகப் பாடிச் செல்வதைப் பார்த்திருக்கிறீர்களா? அதுபோலத்தான், வீராவேச வசனங்களுக்குப் பின்னால் வேறு காரணங்களும் இருப்பதுண்டு!

@வாசுதேவன், பெங்களூரு.

விரைவில் முடியப்போகும் 2020-ன் சாதனை?

இரண்டாயிரத்து இருபதே சாதனைதான்!

 குஷ்பு
குஷ்பு

@எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

விபத்தில் சிக்கிய குஷ்பு, தன்னை முருகன் காப்பாற்றியதாகக் கூறியிருக்கிறாரே..?

அந்த ட்வீட்டில் அடுத்த வரியை கவனித்தீரா... ‘என் கணவர் முருகன் மீது வைத்த நம்பிக்கை’ என்றொரு ட்விஸ்ட் வைத்திருக்கிறாரே!

@V.பாலசுப்பிரமணியன், மன்னார்குடி.

முதல்வர் தாயுள்ளத்துடன் செயல்படுவதாக அனைத்து அமைச்சர்களும் கூறுவது எதைக் காட்டுகிறது?

‘ஃபிடல் காஸ்ட்ரோ’வும் ‘சே குவேரா’வும் தத்தமது படையைப் பசையுடன் பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது!

@புவனேஸ்வரி

இந்தியாவில், எப்போது அனைத்து நதிகளையும் இணைப்பார்கள்?

இருக்கிற நதிகளை, நீர்நிலைகளை முதல்ல ஒழுங்கா பாதுகாக்குறதே இங்கே பெரிய பிரச்னையா இருக்கே புவனேஸ்வரி?! இதுல இணைப்பு வேற நடக்கும்னு நம்புறீங்களா?

கருப்பசாமி, விருதுநகர்.

சென்னை மழைக்கு இன்னும் சாலைகளில் தண்ணீர் தேங்கிக்கொண்டுதான் இருக்கிறதா?

இல்லையா பின்னே... சாலை விரிவாக்கம், மழைநீர் வடிகாலுக்கான முறையான வழிமுறைகள் இவற்றையெல்லாம் 2015 வெள்ள அபாய நாள்களுக்குப் பிறகாவது தீவிரமாகச் செயல்படுத்தியிருக்க வேண்டும். நடக்க வில்லையே! ஜப்பான் டோக்கியோவில் பல வருடங்களுக்கு முன்பே மழைநீர், சாலையில் தங்காமல் வடிந்து செல்ல, மிகப்பெரிய அளவிலான ‘டன்னல்கள்’ (Flood Tunnels) பூமிக்கடியில் அமைக்கப்பட்டன. மால்களின் பார்க்கிங் லாட் அளவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட அந்தக் கட்டமைப்பால், சாலைகளில் அங்கு நீர் தேங்குவதே இல்லை. சென்னையிலும் அதை நடைமுறைப்படுத்த வேண்டியதற்கான அவசியம் நிச்சயம் வந்துவிட்டது!

கணேஷ், சென்னை-110.

என்னதான் அரசியல்வாதிகள் காரசாரமாகப் பேசிக்கொண்டாலும், திடீரென்று சந்தித்தால் சந்தோஷமாகக் கைகுலுக்கிக்கொள்கிறார்களே?

கணேஷ்... பல விஷயங்களில் இவர்கள் வெளியில்தான் விரோதிகள். இவர்களுக்கு அவர்களும், அவர்களுக்கு இவர்களும் ஆட்சி மாறும்போது சிலபல திட்டங்களுக்கு ‘அண்ட் கோ’ போட்டுக்கொள்பவர்கள்தான்! அது தெரியாமல் அப்பாவித் தொண்டர்கள்தான் தங்களுக்குள் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை,சென்னை-600 002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!