Published:Updated:

கழுகார் பதில்கள்

அது ‘மக்களின் மொழி’யாக இருக்க வேண்டும் என்பதே நம் ஆசை!

பிரீமியம் ஸ்டோரி

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.

லாக்டௌன் இருக்கு... ஆனா இல்லை; வேல் யாத்திரை இல்லை... ஆனால் இருக்கு. இது பற்றி..?

இருக்கிற விஷயங்களை இல்லைனு சொல்றதும், இல்லாத விஷயங்களை இருக்குனு சொல்றதும்தானே பாஸ் அரசியல்!

@பி.மணி, குப்பம், ஆந்திரா.

தமிழ்நாட்டில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அமைந்த கட்சிகளின் கூட்டணியே வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என்று எதிர்பார்க்கலாமா?

எதிர்பார்க்கிறதுதானே... என்ன வேணா எதிர் பார்த்துக்கலாம். ஆனால், தேர்தல் வரலாறுகள் சொல்லும் பாடம் வேறாக இருக்கிறதே!

@சே.எட்வின், மயிலாடுதுறை.

பா.ஜ.க-வின் ‘வேல் யாத்திரை’, தி.மு.க-வின் ‘விடியலை நோக்கி’ இரண்டையும் தமிழக போலீஸார் வெவ்வேறு கோணத்தில் அணுகுவது ஏன்?

ஒண்ணு ஆளுங்கட்சி... இன்னொன்று எதிர்க்கட்சி. கோணங்கள் வேறுபடத்தானே செய்யும்!

@ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

அரசியலுக்கு வர எத்தனை மொழிகள் தெரிந்திருக்க வேண்டும்?

ஒரே மொழி... அது ‘மக்களின் மொழி’யாக இருக்க வேண்டும் என்பதே நம் ஆசை!

கழுகார் பதில்கள்

@அ.சகாய அரசு, நாகர்கோவில்.

அமித் ஷா வருகையால் பயந்தவர்கள் யார்?

அமித் ஷா வருகைக் கெடுபிடிகளால் சென்னை சைதாப்பேட்டையிலும், விமான நிலையம் அருகிலும் டிராஃபிக்கில் மாட்டிக்கொண்ட ஆம்புலன்ஸுக்குள் இருந்தார்களே... அவர்கள். எவ்வளவு பயந்திருப்பார்கள் பாவம்!

@பாண்டி.

அரசு விழாக்கள் கட்சி விழாக்களாக மாறுகின்றனவே... அரசு அதிகாரிகளே இதற்கு உடன் போகலாமா?

அதிகாரிகள் உடன்போகவில்லையென்றால் வரும் விளைவுகளை யார் சந்திப்பது!

@இரா.கோதண்டராமன், அசோக்நகர், சென்னை.

அரசியல்வாதிகள் ஏன் வெண்ணிற ஆடைகளையே அணிகிறார்கள்?

உள்ளேதான் சாத்தியமில்லை. வெளியிலாவது சுத்தமாக, கறையில்லாமல் காட்டிக்கொள்ளலாம் என்றுதான்.

ச.ந.தர்மலிங்கம், ஈரோடு.

ஓ,பி.எஸ் ஏற்கெனவே திருப்பதிக்குச் சென்று வந்துவிட்டார். இ.பி.எஸ்ஸும் இப்போது சென்று வந்திருக்கிறாரே..?

மொட்டை போடுவதற்காக இருக்குமோ!

கழுகார் பதில்கள்

ஆதவா நவீன், திருப்பூர்.

வருங்காலத்தில் செயற்கை நுண்ணறிவு மனித மூளையை விஞ்சிவிடும் என்கிறார்களே..?

இது குறித்து உலகப் புகழ்பெற்ற அறிவியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங் சொன்னதையே குறிப்பிடுகிறேன்: “மாற்றத்துக்கு ஏற்ப தன்னை மாற்றியமைத்துக் கொள்கிற திறமைதான் அறிவுத்திறன். மாறிக்கொண்டிருக்கும் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளக்கூடிய திறமை பெற்றிருந்த ஓர் இனத்தில் எண்ணற்ற தலைமுறைகளினூடாக வளர்ச்சியடைந்த ஒன்றுதான் மனித நுண்ணறிவு. அதனால், நாம் மாற்றத்தைக் கண்டு அஞ்சக் கூடாது. நாம் அதை, நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்!”

த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்.

எடப்பாடி பழனிசாமி எதில் பணிகிறார்... எதில் துணிகிறார்?

தலைநகருக்குப் பணிகிறார் என்பது உலகறிந்த உண்மை! துணிவதா... அப்படின்னா?

வண்ணை கணேசன், பொன்னியம்மன் மேடு.

“காங்கிரஸ் கட்சி இப்போது செயல்பட்டுவரும் விதத்தில் உடன்பாடும் விருப்பமும் இல்லாதவர்கள் கட்சியைவிட்டு வெளியேறலாம்” என்று அதீர் ரஞ்சன் சௌத்ரி கூறியிருப்பது குறித்து..?

“ஏற்கெனவே வெளியேறிக்கொண்டி ருக்கிறார்கள்... இதுல இவரு வேற...” என்று தொண்டர்கள் புலம்புவது காதில் கேட்கிறது!

மு.பா.அமல்ராஜ், சென்னை.

நான் ஒரு பெட்ரோல் பங்க்கில் கேஷியராக இருக்கிறேன். இப்போதெல்லாம் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் மிக மிகக் குறைவாகவே வருகின்றன. அப்படியென்றால், அவை பதுக்கப்படுவதாகக் கருதலாமா?

கொரோனா அடித்த அடியைத் தாண்டியும், ரெண்டாயிரம் ரூவா நோட்டெல்லாம் உங்கள் நினைவில் இன்னும் இருக்கா அமல்ராஜ்!

லட்சுமி காந்தம், வேலூர்.

நான் பரிகார பூஜை செய்தால் எம்.எல்.ஏ-வாக முடியுமா?

ஆரம்பிக்கும்போதே பரிகாரமா... அப்படி என்ன பாவம் செய்தீர்கள்?

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

கிச்சன் கேபினெட், கிச்சன் கேபினெட் என்கிறார்களே... அப்படின்னா என்னாங்கய்யா?

உதயநிதி பிரசாரம் கிளம்பியிருக்கிற நேரமும் அதுவுமா இப்படி ஒரு கேள்வி கேட்கிறீங்களே... குசும்புதான் உங்களுக்கு!

கணேசன், சென்னை 110.

எந்த அரசியல்வாதியாவது மக்களிடம் மன்னிப்பு கேட்டதுண்டா?

தேர்தல் வருது சார். பாருங்க... பல காட்சிகள் அரங்கேறும்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை,சென்னை-600 002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு