Published:Updated:

கழுகார் பதில்கள்

குஷ்புவால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் எவ்வளவு வளர்ச்சியடைந்ததோ அந்த அளவுக்கு பா.ஜ.க-வும் வளர்ச்சியடையும்!

பிரீமியம் ஸ்டோரி

ம.தமிழரசிமணி, வெள்ளக்கோவில்.

குஷ்பு வருகையால் இனி தமிழ்நாட்டில் பா.ஜ.க வளர்ச்சியடையுமா?

குஷ்புவால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் எவ்வளவு வளர்ச்சியடைந்ததோ அந்த அளவுக்கு பா.ஜ.க-வும் வளர்ச்சியடையும்!

ச.ந.தர்மலிங்கம், ஈரோடு.

‘மக்கள் விரும்பும்போது ‘விஜய் மக்கள் இயக்கம்’ அரசியல் கட்சியாக மாறும்’ என்று கூறுகிறாரே எஸ்.ஏ.சந்திரசேகர்..?


மக்கள் விருப்பப்படியா..? எல்லாமே மக்கள்மீது திணிக்கப்படுபவைதானே... விஜய் அரசியலுக்கு வருவது குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுவதே விஜய்மீதான ஒருவிதத் திணிப்புதான்!

மாணிக்கம், திருப்பூர்.

ஒருவரை மிதித்து முன்னேறும் அரசியல் அரிச்சுவடி, எந்தக் காலத்திலாவது இல்லாமல் இருந்திருக்கிறதா?


அதுதான் ‘அரிச்சுவடி’ என்று நீங்களே சொல்லிவிட்டீர்களே... இனிமேலாவது அப்படியொரு காலம் வராதா என்ற ஏக்கம்தான் எல்லோருக்கும்!

கார்த்திக் திவ்யா, அரியலூர்.

டாஸ்மாக், ஆன்லைன் ரம்மி... இவற்றில் தடைசெய்ய வேண்டியது எது?

சயனைடா, பால்டாயிலா... இரண்டில் எது உயிருக்கு ஆபத்தானது என்பதுபோல கேட்குறீங்களே!

கு.ப.இரகுநாதன், பூவிருந்தவல்லி.

தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு நவம்பர் 30, 2020 வரை என்றால் என்ன அர்த்தம்?

ஊரடங்கு, ஊரடங்குக்குள்ள ஊரடங்கு, அதுக்குள்ள ஓர் ஊரடங்கு, அதுக்குள்ள இன்னோர் ஊரடங்குனு நாம பார்க்குற 10-வது கட்ட ஊரடங்கு இது. ஒவ்வோர் ஊரடங்குலயும் என்னென்ன தளர்வுகள் வந்துச்சுனு தனியா விநாடி வினாவே நடத்தலாம்கிற அளவுக்கு நீண்டுக்கிட்டே போகுது. இதுக்கு மேல நாம் ‘புத்தியல்பு’க்குப் பழகிக்கறதுதான் சிறந்தது!

ஆர்.அஜிதா கம்பம்.

குஷ்புவுக்கு பா.ஜ.க இன்னும் பதவி கொடுக்காமல் இருக்கிறதே?


புதிதாகக் கட்சியில் சேர்க்கப்பட்ட ஆர்ட்டிஸ்ட்டு களுக்கும், அக்யூஸ்ட்டுகளுக்கும், அண்ணாமலைகளுக்கும் பின்னால் நீண்ட வரிசையில் கடைசியாக நிற்கிறார் குஷ்பு. வானதி சீனிவாசனுக்கே இப்பதானே விடிஞ்சிருக்கு!

சீ.பாஸ்கர், நந்திவரம்.

இன்றைய காலகட்டத்தில் எது வளர வேண்டும்... எது வீழ வேண்டும்?


அநீதி வீழ்ந்து, மானுட அறம் செழித்தோங்க வேண்டும் என்பதே நம் விருப்பம்.

கழுகார் பதில்கள்

காட்டாவூர் தேனரசு, செங்குன்றம், சென்னை-52.

‘நிலவில் வீடு கட்டிக்கொடுப்போம்’, `சந்திரனில் குடியமர்த்துவோம்’ என்று கட்சிகள் தேர்தல் அறிக்கை வெளியிட்டுவிட்டால்..?


பழசுதான். இருந்தாலும் இந்தக் கேள்விக்குப் பொருத்தமா இருக்கும்... ‘கேப்பையில நெய் வடியுது’னு சொன்னா, எப்படினு கேட்காம ‘எனக்கும் காப்படி ஊத்து’னு கேட்கறவங்க இருக்கறவரைக்கும் இந்த மாதிரி அறிக்கைகள் வந்துட்டுதான் இருக்கும்!

சம்பத்குமாரி, பொன்மலை.

முடிவெடுக்க வேண்டிய நேரத்தில் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி, காணாமல்போனவர்கள் அரசியலில் பலர். அந்த லிஸ்ட்டில் யார் அடுத்து?

‘சூப்பரா’ன கேள்விக்கு ஒரு ஸ்டாரே தரலாம்!

சரோஜா பாலசுப்ரமணியன், கோலார் தங்கவயல்.

டாஸ்மாக்ல கூட்டம் அதிகமா வந்துட்டா உடனடியா கூடுதல் கவுன்ட்டர் தொறக்குற அரசாங்கம், நெல் கொள்முதல் நிலையத்துலேயும் ஏன் அது மாதிரி செய்ய மாட்டேங்குது?

முன்னதுல கட்டிங் ஜாஸ்தி; பின்னதில் அவ்வளவு தேறாது. விவசாயி முதல்வர் இப்போ வேற வெள்ளாமையில இருக்கிறாரு!

சிவாஜி, சென்னை.

கமலின் `பிக் பாஸ்’, அவருக்கு வாக்குகளைப் பெற்றுத் தருமா?

`பிக் பாஸ்’ மாதிரியே ஒரு நபருக்கு 50 ஓட்டுனுவெச்சா நடக்கலாம்!

விஜயகுமார், காட்பாடி.

மனுதர்மம்’ குறித்து என் போன்ற புதிய தலைமுறைக்கு விளக்கலாமே..?

உங்களுக்காகத்தான் மேனாள் நீதிபதி சந்துரு நான்கு பக்கங்கள் எழுதியிருக்கிறார்... 28-ம் பக்கம் பாருங்க!

மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி.

நீண்டகாலம் வாழ்வதற்கு மனிதன் ஆசைப்பட என்ன காரணம்?


மரணத்துக்குப் பிறகு என்ன நிகழ்கிறது என்ற புதிரும், சொர்க்கம் - நரகம் போன்றவற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லாததும் முக்கிய காரணம். அதனால்தான் இந்தக் கணம், கையில் உண்மையாக இருக்கும் இந்த உலகத்திலேயே முடிந்தவரை தொடர ஆசைப்படுகிறான். எல்லாவற்றுக்கும் மேலாக, துயரங்களுக்கும் போராட்டங்களுக்கும் மத்தியிலும், இந்த உலகம் தன் சுவாரஸ்யத்தை இன்னும் இழக்காமலிருப்பதும் ஒரு காரணம்!

பாலா, மதுரை.

ஜனநாயகத்தின் வேர் எங்கே உள்ளது?

சக மனிதன்மீதான மரியாதையில், அவனது உரிமைக்காக நெகிழும் ஈர நெஞ்சில்!

அருண், திண்டுக்கல்.

சமூக ஊடகங்களில் பேசியும் எழுதியும்கூட கட்சியை வளர்க்க முடியுமா?

அப்படி நம்பி கோடிக்கணக்கில் பிசினஸ் நடக்கிறதே. கட்சியை வளர்க்க முடியுமோ இல்லையோ... பல ‘ஸ்ட்ராட்டஜி கும்பல்களின்’ வங்கிக்கணக்கு வளரும்

கழுகார் பதில்கள்

தாமரை நிலவன், கீழ்க்கட்டளை.

‘தே.மு.தி.க தலைமையில் மூன்றாவது அணி அமைய வாய்ப்புள்ளது’ என்று விஜய பிரபாகரன் கூறியிருப்பது அவரின் தன்னம்பிக்கையைக் காட்டுகிறதா?

‘ஒரே நேரத்தில் இரண்டு முயல்களைத் துரத்தினால் ஒன்றைக்கூட பிடிக்க முடியாது’ என்பது ஓஷோவின் மொழி. கூட்டணியும் வேண்டும், மூன்றாவது அணியும் வேண்டும், ஆட்சியிலும் பங்கு வேண்டும் என்று மூன்று, நான்கு முயல்களைத் துரத்துகிறார் விஜய பிரபாகரன். பாவம்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள்,

ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு