Published:Updated:

கழுகார் பதில்கள்!

மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

அந்த ‘56 இன்ச் மார்பு’க்காரர் வேலையைக் காட்டியதால்தானே கம்பிக்குள் கடிதமே!

கழுகார் பதில்கள்!

அந்த ‘56 இன்ச் மார்பு’க்காரர் வேலையைக் காட்டியதால்தானே கம்பிக்குள் கடிதமே!

Published:Updated:
மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

@அ.குணசேகரன், புவனகிரி.

மத்திய அரசு எதை நோக்கிப் பயணித்தால் நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லும்?

அதிகார போதையைத் தலைக்கு ஏற்றிக்கொள்ளாமல், கூட்டாட்சித் தத்துவத்தை உணர்ந்து, இந்தியாவில் வாழும் அனைத்து ஜீவன்களின் நலனையும் உறுதிப்படுத்துவதை நோக்கிப் பயணித்தால்.

கழுகார் பதில்கள்!

எஸ்.செழியன், திருநெல்வேலி.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று ஐ.நா சபையில் முழங்கியிருக்கிறாரே பிரதமர் நரேந்திர மோடி?

இந்திய பிரதமர் ஒருவர், உயிர்ப்பான தமிழ் தந்திருக்கும் உன்னதமான, ஒப்பற்றத் தத்துவ வரிகளை உலக அரங்கில் ஓங்கி உரைத்திருப்பது, தமிழுக்கும் தமிழர் களுக்கும் ஏன்... இந்திய துணைக் கண்டத்துக்கே பெருமை.

சம்பத்குமாரி, பொன்மலை, திருச்சி.

அப்பா ப.சிதம்பரத்துக்கு அனுப்பிய பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியில், ‘எந்த 56-ம் உங்களை ஒன்றும் செய்ய முடியாது’ எனக் குறிப்பிட்டுள்ளாரே மகன் கார்த்தி சிதம்பரம்?

அந்த ‘56 இன்ச் மார்பு’க்காரர் வேலையைக் காட்டியதால்தானே கம்பிக்குள் கடிதமே!

‘ஏழாயிரம்பண்ணை’ செல்லையா, சாத்தூர்.

‘அ.தி.மு.க-வுக்கு வீழ்ச்சி என்பதே கிடையாது’ என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளாரே?

‘அ.தி.மு.க-வை வீழ்த்த எங்களை விட்டால் வேறு ஆளே கிடையாது’ என்று அவர் பேசியது, உங்கள் காதில் தவறாக விழுந்திருக்கும் என நினைக்கிறேன். எதற்கும் அவர் பேசிய ஆடியோ/வீடியோ இருந்தால் திரும்பவும் நன்றாகக் கேட்டுப்பாருங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி.

‘அரசு மருத்துவர்கள் யாரும் இனி தனியாக கிளினிக் வைப்பதோ, தனியார் மருத்துவ மனைகளில் பணியாற்றுவதோ கூடாது’ என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளாரே?

இந்தியா முழுமைக்கும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிய அருமையான திட்டம். இதுபோல, மக்களுக்கு முழுமையாக உதவக்கூடிய இன்னும் நல்ல பல திட்டங்களும் இருக்கின்றன. ஒரு மாநிலத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் அமல்படுத்தப்பட வேண்டிய நல்ல திட்டங்கள் அவை. இந்த முயற்சியில், பிரதமர் நரேந்திர மோடி உடனே இறங்க வேண்டும். இதில் அவர் வெற்றி கண்டால், ஏழைகளின் இதயங்களில் நீக்கமற நிறைந்துவிடுவார். ஆனால், இதையெல்லாம் விட்டுவிட்டு எப்போது பார்த்தாலும், எதையாவது பற்றவைப்பதிலேயே தான் குறியாக இருக்கின்றன அவருடைய ‘பரிவாரங்கள்!’

கழுகார் பதில்கள்!

@சரவணகுமார் சின்னசாமி, தாராபுரம்.

உலக அரங்கில் இந்தியாவின் கௌரவமாய் உயர்த்திப் பிடிக்க வேண்டிய ‘கீழடி’ நாகரிகத்தை, ஆழமாகப் புதைக்க அவசரப்படுகிறதே மத்திய அரசு... இது நியாயமா?

கீழடி குஜராத்திலோ, உத்தரப்பிரதேசத்திலோ இருந்திருந்தால் கதையே வேறு. ‘ஏற்கெனவே கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த தமிழ் என்று கொடி பிடிக்கிறார்கள். இதில், கீழடி நாகரிகம், சிந்துசமவெளி நாகரிகத்துக்கு இணையானது என்பதை ஆதாரங்களுடன் சொல்லிவிட்டால், ஆட்டம் இன்னும் அதிகமாகி விடும்’ என்பதுதான் வடஇந்திய தலைவர்கள் சிலரின் எண்ணம்.

இது காங்கிரஸ் காலத்திலிருந்தே தொடர்கிறது. அதனால்தான், ஆதிச்சநல்லூர் அகழாய்வு பற்றிய அறிக்கையையே 15 ஆண்டுகளாகப் புதைத்து வைத்துள்ளனர். குறிப்பாக, மத்திய தொல்பொருள் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் உயர் அதிகாரிகள் சிலர், வேண்டுமென்றே இந்த அகழாய்வு அறிக்கையை கிடப்பில் போட்டு வைத்ததாகக் குற்றச்சாட்டும் உண்டு.

தற்போதைய அ.தி.மு.க அரசைக்கூட விட்டு விடலாம். அது, பி.ஜே.பி அரசின் கைப்பாவையாகவே ஆகிவிட்டது. ஆனால், நேற்றைக்கு காங்கிரஸை தன் கைப்பாவையாக வைத்திருந்த தி.மு.க., இந்த விஷயத்தில் துரும்பைக் கூட அசைக்கவில்லை. மத்திய மந்திரிசபையில் இடம்பிடிப்பதற்குத்தான் போட்டிபோட்டதே தவிர, உலக அரங்கில் தமிழர் பெருமையை எடுத்துக்காட்டுவதற்காக அல்ல. இன்றைக்கு, மத்திய அமைச்சரிடம் மனுகொடுப்பதற்காக மாநில அமைச்சருடன் போட்டிபோடுகிறது அதே தி.மு.க!

‘மேட்டுப்பாளையம்’ மனோகர், கோவை-14

பாதுகாப்பற்ற முறையில் பேனர்களைக் கட்டும் அரசியல்வாதிகளின் அக்கிரமங்களுக்குத் தடை விதிக்காமல், பேனர் தொழிலையே தடைசெய்து தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கலாமா?

இதுபோன்ற சிக்கல் நிறைந்த பிரச்னைகள் இங்கே நிறையவே இருக்கின்றன. பிளாஸ்டிக், டாஸ்மாக், பட்டாசு என இன்னும் பல விஷயங்களும் இங்கே இருக்கின்றன. பேனர்களுக்காகப் பயன்படுத்தப்படும் பாலிதீன், கொடுமையான ஓர் ஆயுதமே. இவற்றின் காரணமாக ஆபத்து என்பது உறுதியாகும்போது, அதிலிருந்து விடுபடுவதைப்பற்றித்தான் யோசிக்க வேண்டுமே தவிர, இத்தனை லட்சம் பேருக்கு வேலை இழப்பு ஏற்படும் என யோசித்தால், சூழல் பேரழிவு ஒட்டுமொத்தமாக மனிதகுலத்துக்கே சமாதி கட்டிவிடும்.

லாட்டரியை ஒழித்தபோது, ‘பல லட்சம் குடும்பங்கள் வீதிக்கு வரும்’ என்றார்கள். ஆனால், லட்சோபலட்சம் குடும்பங்கள் அதனால் காப்பாற்றப்பட்டதை யாரும் நினைத்துப் பார்க்கவில்லை. அதற்காக, இத்தகைய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை அப்படியே கைவிட்டுவிட முடியாது. ஆபத்தான விஷயங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து, அந்தத் தொழில்களில் மக்கள் வெகுவாக ஈடுபடுவதற்குக் காரணமே அரசாங்கம்தான். எனவே, அவர்களுக்கெல்லாம் உரிய மாற்று ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டியதும் அரசாங்கத்தின் கடமையே.

கழுகார் பதில்கள்!

@சி. கார்த்திகேயன், சாத்தூர்.

‘அரசியல் வேண்டாம்’ என்ற சிரஞ்சீவியின் அறிவுரையை ரஜினி, கமல் கேட்க வாய்ப்பு உண்டா?

கமல் ஏற்கெனவே வந்துவிட்டார். எனவே, அவர் இந்த அறிவுரையை ஏற்பாரா எனத் தெரியவில்லை. ரஜினியைப் பொறுத்தவரை, ஏற்கெனவே சிரஞ்சீவியிடம் தனிப்பட்ட முறையில் நிறைய அறிவுரைகளைக் கேட்டுக்கொண்டிருப்பதுபோல்தானே தெரிகிறது.

@பி.அசோகன், ஈரோடு மாவட்டம்.

எடப்பாடி பழனிசாமி இப்படி நங்கூரமிட்டு அமர்வார் என நீங்கள் எதிர்பார்க்கவில்லைதானே?

சசிகலாவே எதிர்பார்க்கவில்லையே!

தா.ரவி, சிதம்பரம், கடலூர் மாவட்டம்.

‘முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை தமிழக அமைச்சர்கள் அடிமைகளாக இருந்தார்கள். இப்போது மனநோயாளிகளாக இருக்கிறார்கள்’ என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியிருப்பது?

அவர்கள், இப்போதும் அடிமைகள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதாவது, டெல்லி அடிமைகள். அதேபோல இவர்களும் டெல்லி அடிமைகளே. ஓர் அடிமையின் கஷ்டம் மற்றோர் அடிமைக்குத்தான் தெரியும்; கண்டிப்பாகத் தெரிந்திருக்கவேண்டும். அப்படியிருக்கும்போது காயப்படுத்திப்பார்ப்பது நியாயமல்ல.

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.

மீதி உள்ள அமைச்சர்களும் வெளிநாடு செல்கிறார்களாமே?

பாஸ்போர்ட்டை, எத்தனை ஆண்டுகளுக்குத் தான் சும்மாவே வைத்திருப்பது?!

எஸ்.ராமதாஸ், சேலம்-30.

திராவிடத் தலைகளும் தலைவர்களும், ‘தமிழ் அழிகிறது. தமிழை அழிக்கப்பார்க்கிறார்கள்!’ என்றே ஒப்பாரிவைக்கிறார்கள். சிலப்பதிகாரமும் சீவக சிந்தாமணியும் இந்தக் காலகட்டத்தில் எல்லோருக்கும் சோறு போடுமா?

‘பகவத் கீதை சோறு போடும்’ என்கிறது மத்திய அரசு. அப்படியென்றால் சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, திருக்குறள், நன்னூல், மூதுரை, தொல்காப்பியம் எல்லாமும் சோறு போடும். பலருக்கு, போட்டுக்கொண்டும் இருக்கிறது!

@கே.முத்தூஸ், தொண்டி.

டிக்-டொக் மோகம், ரொம்ப ஓவராகப் போய்க்கொண்டிருக்கிறதே?

‘வெறித்தனம்!’

ஜி.வி.மனோ, கொலுவை நல்லூர்.

தங்களின் ரோல்மாடல் யார்?

இயற்கை!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை- 600002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!