Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார்
பிரீமியம் ஸ்டோரி
கழுகார்

பேய்க்கும் பேய்க்கும் சண்டை!

கழுகார் பதில்கள்!

பேய்க்கும் பேய்க்கும் சண்டை!

Published:Updated:
கழுகார்
பிரீமியம் ஸ்டோரி
கழுகார்

@உஷாதேவி, சென்னை-2.

நம் நாட்டின் தேசிய விலங்காக நரி, தேசிய பறவையாக காகம் ஆகியவற்றை ஏற்றுக்கொண்டால் பொருத்தமாக இருக்குமா?

முதலில் தேசிய பறவை, தேசிய விலங்கு, தேசிய மரம், என்றெல்லாம் தனித்த அந்தஸ்துகளை வழங்குவதே தவறு. ஒருவகையில் இதுவும் தீண்டாமையே. இந்தப் பூமியில் (நாட்டில்) பிறந்த அத்தனை ஜீவன்களுக்கும் இங்கே சமமாக வாழ சகல உரிமைகளும் இருக்கின்றன. அப்படியிருக்க, ஒரே விலங்கு, ஒரே பறவை என்றெல்லாம் தூக்கிவைத்துக் கொண்டாடுவது நியாயமற்ற செயலே. அனைத்துமே தேசிய ஜீவன்கள்தான். அனைத்துமே கொண்டாடப்பட வேண்டி யவைதான்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

@இந்து குமரப்பன், விழுப்புரம்.

‘மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் 20 பேரை வாங்க நினைத்தால், நாங்கள் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் 60 பேரை வாங்குவோம்’ என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசப்படுகிறாரே?

பேய்க்கும் பேய்க்கும் சண்டை!

@அன்புச்செழியன், குத்தாலம், நாகப்பட்டினம் மாவட்டம்.

‘ஒரே நாடு, ஒரே கார்டு’ என்று சொல்லும் மத்திய அரசு, ‘ஒரே சாதி’ என்றும் ஏன் சொல்லக் கூடாது?

ஒரே போடு!

ராஜேந்திர பாலாஜி,  திண்டுக்கல் சீனிவாசன்
ராஜேந்திர பாலாஜி, திண்டுக்கல் சீனிவாசன்

@ந.எ.நாராயணன், கொளத்தூர்.

மாவட்டங்களை நாடாளுமன்றத் தொகுதியின் அடிப்படையில் பிரித்து, அதனுள் அடங்கிய சட்டமன்றத் தொகுதிகளை உப மாவட்டங்களாக வைத்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் உபமாவட்ட ஆட்சியர் என்றிருந்தால்... நிர்வாகம் சிறப்பாக இருக்குமல்லவா?

பிரிக்கப்படாத மாவட்டங் களையே மிகச் சிறப்பாக ஆட்சி செய்த நிர்வாகிகளும் உண்டு. எனவே, நிர்வாகி யார் என்பதைப் பொறுத்துதான் சிறப்பு வந்து சேரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘திருப்பூர்’ அர்ஜுனன்.ஜி, அவிநாசி.

தற்போதைய அரசியல் சூழ்நிலைகளைப் பார்க்கும்போது ‘தர்மமே வெல்லும்’ என்பதெல்லாம் வெறும் ஏட்டளவில்தானோ?

மாறி மாறி வெற்றி பெறுகிறார்கள். தோல்வி யுற்றவர்களைப் பார்த்து வெற்றி பெற்றவர்கள், இந்த வசனத்தை உச்சரிக்கிறார்கள். ஆக, எப்போதுமே ‘சூது மட்டுமே கவ்விக்கிடக்கிறது’ என்ற உண்மையை இரு தரப்புகளுமே ஒப்புக்கொள்கின்றன.

@வாசுதேவன், காடுகுடி, பெங்களூரு.

வேற்றுக்கிரகவாசிகள் என்பது எவ்வளவு தூரம் உண்மை?

வேற்றுக்கிரகங்கள் என்பது உண்மையாக இருக்கும்போது, வேற்றுக்கிரகவாசிகளும் உண்மையாக இருக்கலாம் தானே! இதுவரையில் அத்தகை யோரை நாம் பார்க்கவில்லை என்பதற்காக, அப்படி யாரும் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிடவே முடியாதுதானே! காலம்தான் பதில் சொல்லும். என்ன... அதற்குள் நம் காலம் விடைபெற்றிருக்கும்.

‘வண்ணை’ கணேசன், சென்னை-110.

சிலவற்றுக்கு, ‘காலம் பதில் சொல்லும்’ என முடித்துவிடுகிறார்கள். ஏன், உடனே விடை காண முடியாதா?

முடியாது.

@ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

85-ம் ஆண்டு விழா காணும் தினமணி நாளிதழுக்கு, கழுகாரின் வாழ்த்துச் செய்தி?

தினமணி, இன்றைக்கு இந்தியா முழுவதும் கிளை பரப்பியிருக்கும் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் கைகளில் இருக் கிறது. இந்த எக்ஸ்பிரஸுக்கு அடிபோடப்பட்டது தமிழகத்தில்தான்.

சுதந்திரப் போராட்ட வீரர் வரதராஜுலு நாயுடுவால் 1931-ல் சென்னையில் தொடங்கப்பட்டது ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’. நிதி நெருக்கடி காரணமாக சதானந்த் என்பவரின் கைகளுக்கு மாறிய சூழலில், 1933-ல் ‘தினமணி’ நாளிதழும் வெளியானது.

ராம்நாத் கோயங்காவின் கைகளுக்கு நிர்வாகம் மாறிய பிறகுதான், இந்தியா முழுக்க கிளை பரவியது. ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகளிலும் நாளிதழ்களை வெளியிட்டு அசத்தினார் கோயங்கா.

தமிழகத்தில் சுதந்திரத் தீயைப் பற்றவைப்பதற்காக அர்ப்பணிப்போடு பணியாற் றிய நாளிதழ்களில் ‘தினமணி’க்கு முக்கிய இடமுண்டு.

சுதந்திரத்துக்குப் பிறகு, இந்திரா காந்தி ஏற்படுத்திய நெருக்கடி நிலையின்போது ஆட்சியாளர்களின் கெடுபிடி களுக்கு துளிகூட அடி பணியாமல் துணிந்து நின்று பல்வேறு விஷயங்களையும் மக்களிடம் கொண்டுசேர்த்த மகத்தான வரலாறுகொண்ட நாளிதழ். நூற்றாண்டு காண வாழ்த்துகள்!

இல.கண்ணன், நங்கவள்ளி, சேலம் மாவட்டம்.

‘எம்.ஜி.ஆர் வழியில் வந்த நாங்கள், புகை பிடிப்பதில்லை... மது அருந்துவதில்லை’ என்றெல்லாம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருக்கிறாரே?

ஆனால், மக்களைக் குடிகாரர்களாக மாற்றிவிட்டார்களே!

@எம்.எஸ்.சிவக்குமார், கணபதி, கோவை-6.

பொருளாதாரம் மேம்படுவதற்காக நம் நாட்டை 10 ஆண்டுகளுக்கு கியூபா நாட்டிடம் குத்தகைக்கு விட்டால் என்ன?

ஏற்கெனவே ஆங்கிலேயர் களிடம் குத்தகைக்கு விட்டதன் பின்விளைவுகளே இன்னமும் முடிந்தபாடில்லையே!

@ஸ்ரீ.பூவராகவன், படியூர், காங்கேயம்.

மேடையில் தலைவர்கள் தூங்கி விடுகிறார்களே?

ஓயாது பயணம் செய்கிறார் கள்; மேடைதோறும் முழங்கு கிறார்கள்; நாள் முழுக்க உழைத்துக் களைக்கிறார்கள்; எந்த இடமாக இருந்தாலும் தன்னிலை மறந்து தூங்கவும் செய்கிறார்கள். இதையெல்லாம் ஒரு குற்றமாக எடுத்துக்கொள்ளத் தேவையேயில்லை. தாகம், பசி போல மனிதனுக்குத் தேவைப் படும் மிகமிக முக்கியமான விஷயங்களில் ஒன்றுதானே தூக்கமும்!

@ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

‘தமிழ் மொழியைக் காக்க இளைஞர்கள் போராட வேண்டும்’ என்று உணர்ச்சிவசப்பட்டிருக்கிறாரே தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன்?

பாவம், தன்னிலை மறந்துவிட்டார்போல அந்த மேடையில்!

பி.ஐ.அமோகா, திருவண்ணாமலை.

பெரிய கம்பெனிகளுக்கு 1.45 லட்சம் கோடி ரூபாய்க்கு வரிச்சலுகைகள் தேவையா?

‘தேவைப்பட்டவர்’ களுக்குத் தானே கொடுப்பார்கள்.

கழுகார் பதில்கள்!

@ஆர். வேணுகோபால், திருச்சி-4.

பாலியல் பலாத்கார வழக்கில் ஒருவழியாக முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி (?) சின்மயானந்த் கைது செய்யப்பட்டுள்ளாரே?

அவர் மீது மிரட்டல், அச்சுறுத்துதல் போன்ற பிரிவுகளில்தான் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பெண் ஆதாரங்களைக் கொடுத்தும், பாலியல் பலாத்கார வழக்கு இன்னமும் பாயவில்லை. அதுமட்டுமல்லாமல், ‘இந்த விஷயத்தில் சின்மயானந்திடம் பணம் பறிக்கும் வேலைகள் நடந்துள்ளன’ என்று வழக்கின் போக்கும் திசை மாற ஆரம்பித்துள்ளது. அந்தப் பெண்ணுக்கு உதவிய சிலரை போலீஸ் கைதுசெய்துள்ளது. மேற்கொண்டு, அந்தப் பெண்ணிடமும் விசாரணை நடக்கவிருக்கிறது. எல்லாம் அந்த ஆதியோகிக்கே வெளிச்சம்!

@ராம்குமார்.

ரஜினியின் கட்சிப் பெயரில் திராவிடம் இருக்குமா?

முதலில் குழந்தை பிறக்கட்டும்!

@இந்து குமரப்பன், விழுப்புரம்.

‘துபாய் போன்று பிரமாண்ட நகரமாக சென்னையை உருவாக்குவோம்’ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே?

ம்... ஏற்கெனவே மு.க.ஸ்டாலின் புண்ணியத்தில் ‘சிங்கப்பூர்’ என மாறியிருக்கிறது சென்னை. அதை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் ‘துபாய்’ ஆக்குவதாக எடப்பாடி பழனிசாமி கூறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது!

@ஜெ.பரணி.

நித்தியானந்தாவின்‌ செயல்பாடுகள்‌, சாதாரண மக்களுக்கே வெறுப்பு மற்றும்‌‌ சந்தேகத்தைத் தருகின்றன. அப்படியிருக்க, இந்த அரசாங்கம் என்னதான் செய்து கொண்டிருக்கிறது?

‘ஆன்மிக அரசியல்!’

@வேணுகோபால்.

அமெரிக்கா சென்ற மோடி சாதித்தது என்ன?

அதிகம் சாதித்துக்கொண்டவர்... ட்ரம்ப்!

@லா.ரா.கணபதி, மடிப்பாக்கம்.

குரு இல்லாது ஞானம்பெற இயலுமா?

முடியும், இயற்கையை முழுமையாகப் புரிந்து கொண்டுவிட்டால்!

@இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

சமுதாயத்துக்காகப் பாடுபடும் தன்னைப் பாராட்ட யாருக்கும் மனமில்லை என்று வருத்தப்படுகிறாரே பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்?

பாடுபடுபவர்கள், பாராட்டுகளை எதிர் பார்ப்பதில்லை!

கே.பாலு, வேர்க்கிளம்பி, கன்னியாகுமரி மாவட்டம்.

‘இடைத்தேர்தல் என்பது ஊழல் நாடகம்’ என்கிறாரே கமல்?

அப்படியென்றால், பொதுத்தேர்தல் என்பது ‘ஊழல் சினிமா’வோ!

@கணேசன் நாராயணன், பெங்களூரு.

சீமானின் ‘நாம் தமிழர் கட்சி’ ஏன் தேர்தல்களில் போட்டியிடுவதில்லை?

என்ன... சமீபத்தில் ‘கோமா’ளி படம் பார்த்தீர் களா?

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை- 600002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism