Published:Updated:

கழுகார் பதில்கள்

அத்திவரதர்
பிரீமியம் ஸ்டோரி
அத்திவரதர்

பெருமாளே... அடிமடியிலேயே கை வைக்கப் பார்க்கிறீர்களே!

கழுகார் பதில்கள்

பெருமாளே... அடிமடியிலேயே கை வைக்கப் பார்க்கிறீர்களே!

Published:Updated:
அத்திவரதர்
பிரீமியம் ஸ்டோரி
அத்திவரதர்

@பெருமாள்.எஸ்., காஞ்சிபுரம்.

அத்திவரதர் வைபவத்தைவைத்து கோடிக்கணக்கில் சம்பாதித்த அரசு மற்றும் அதிகாரிகள், காஞ்சிபுரத்தில் நிரந்தர தங்கும் விடுதிகளோ, கழிவறைகளோ, தரமான சாலைகளோ, பேருந்து நிழற்குடைகளோ அமைக்க முயற்சி செய்யாதது ஏன்?

பெருமாளே... அடிமடியிலேயே கை வைக்கப் பார்க்கிறீர்களே! இதற்காகவா 48 நாள்களும் அவர்கள் படாதபாடுபட்டு ‘பை’களை நிரப்பினார்கள்?!

@பி.அசோகன், கொளப்பலூர்.

கூட்டணிக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தமிழக எம்.பி-க்கள் நால்வரின் தலை தப்புமா?

இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையத்தின் விதிகள் மீறப்பட்டுள்ளனவா என்பது உறுதியாகவில்லை. அப்படியே மீறப்பட்டிருந் தாலும் கவலைப்படத் தேவையில்லை என்பது தான் கடந்தகால அனுபவங்கள் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கும் பாடம்.

விதிமீறல்களுக்கு எதிராக தேர்தல் ஆணையம் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை எடுத்ததாக வரலாறே இல்லை. அதேபோல நீதிமன்றங்களிலும் இதுபோன்ற விஷயங்களில் விரைவாக நீதி கிடைப்பதில்லை. தீர்ப்பு வருவதற்குள் பதவிக் காலமே முடிந்திருக்கும்.

2016-ம் ஆண்டு ராதாபுரம் தொகுதியில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க-வின் இன்பதுரை வெற்றிபெற்றார். ‘வாக்கு எண்ணிக்கையில் விதிமீறல்கள் நடந்துள்ளன. வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும்’ என்று கேட்டார் தி.மு.க வேட்பாளர் அப்பாவு. ஆணையம் இதை சட்டைசெய்யவேயில்லை. விவகாரம், நீதிமன்றத்துக்குச் சென்றது. இன்பதுரை, மூன்றரை ஆண்டுகள் பதவியை அனுபவித்து முடித்துவிட்ட நிலையில், `சில பூத்கள் மற்றும் தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும்’ என உயர் நீதிமன்றம் கடந்த வாரம்தான் உத்தரவிட்டுள்ளது. அடுத்து உச்ச நீதிமன்றத்தில் தடை கேட்கத் தயாராகி விட்டார் இன்பதுரை.

எனவே, அந்த நான்கு பேரும் கவலைப்படத் தேவையேயில்லை.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இ.இளஞ்சேரன், குடவாசல், திருவாரூர் மாவட்டம்.

கமல்ஹாசன் பேசும்போது, ‘கடைக்குட்டி இந்தியை நாம் பாதுகாக்க வேண்டும்’ என்று கூறியுள்ளாரே?

ஒரு மொழி முன்தோன்றியது, பின்தோன்றியது என்பதையெல்லாம் வைத்து மதிப்பீடு செய்வது சரியானதல்ல. மொழியின் முக்கியமான பயன்பாடே தகவல் தொடர்புதான். அதைவிடுத்து, என்னுடையது உயர்ந்தது... உன்னுடையது தாழ்ந்தது என்றெல்லாம் பேசுவதும் விவாதிப்பதும் தேவையில்லாத ‘ஆணி’களே. ‘யாதும் மொழியே, யாவரும் கேளீர்’ என்று சொல்வதுதான் எக்காலத்துக்கும் எல்லோருக்கும் ஏற்றதாக இருக்கும்.

ஆர்.ராமசாமி, பொள்ளாச்சி.

தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன், ‘கல்வித்துறை அறிவிப்புகளால் குழப்பமில்லை’ என்று கூறியுள்ளாரே?

‘காலாண்டு விடுமுறையின்போது, காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளிகளில் தினமும் நடக்கும் நிகழ்ச்சிகளில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும்.’

‘பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை இல்லை என்று பரவும் செய்தியில் உண்மை இல்லை. கண்டிப்பாக விடுமுறை உண்டு.’

‘காலாண்டு விடுமுறையின்போது காந்தி ஜெயந்தி நிகழ்ச்சிகள் கட்டாயம் நடக்கும். விருப்பமுள்ள மாணவர்கள் பங்கேற்கலாம்.’

‘12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, விடுமுறையில் தொழிற்பயிற்சி வகுப்புகள் நடக்கும்.’

‘காலாண்டு விடுமுறைக்குப் பிறகு பள்ளிகளில் காந்தி ஜெயந்தி நிகழ்ச்சிகளை நடத்தலாம்.’

இவ்வளவு தெளிவாக தமிழக கல்வித்துறை இருக்கும்போது, குழப்புவதாகக் கூறுவது அநியாயம்தானே!

கழுகார் பதில்கள்

கே.கணேசன், பெங்களூரு.

இஸ்ரேல் தொழில்நுட்பம் என்பது, தற்போது தண்ணீர் இல்லாமல் தவிக்க ஆரம்பித்திருக்கும் தமிழகம் போன்ற பகுதிகளுக்கு சரியாகத்தானே இருக்கும்?

‘நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்’

- ஔவைக் கிழவி மூதுரையில் சொல்லிச் சென்றிருக்கும் இந்த அரும்பெரும் தத்துவம்தான் நம்முடைய நீர்மேலாண்மையின் அடிநாதம். ஆனால், துளிகூட புல்லுக்குச் சென்றுவிடக் கூடாது என்று பயிரின் வேருக்கு மட்டுமே நீரைப் பாய்ச்சுவதுதான் இஸ்ரேல் தொழில்நுட்பம். பெரும்பாலும் இப்படித்தான் நடக்கிறது அங்கே. முழுக்க தண்ணீர் பற்றாக்குறையுடன் இருக்கும் பாலைவன பூமிதான் இஸ்ரேல். அந்த மண்ணுக்கு அவர்களுடைய தொழில்நுட்பம் சரிப்படலாம். போதுமான அளவுக்கு நீர் கிடைக்கும் நம் பிரதேசத்தில் அதைச் செயல்படுத்த நினைப்பதே ஆபத்தானது. புல்லுக்கும் நெல்லுக்கும் பாய்ந்தோடுவதுதான் உயிர்ச்சூழலை உரப்படுத்தி, உணவுச்சங்கிலியை நிலைப்படுத்தி, உயிர்ச் சங்கிலியை உறுதியாக்கும். நம்மிடம் மிச்சம் மீதி இருக்கின்ற நீர்நிலைகளை சரிவர பராமரித்தால் கூட போதும், இஸ்ரேல் பிரதமர் தமிழகத்துக்கு விசிட் அடிப்பார்!

@ஜுபைதூர் அகமது.

‘ஊடகங்களின் செய்திகளில் நம்பகத்தன்மை இல்லை’ என்பதை மக்கள் உணர்ந்துவிட்டனர். நம்பகத்தன்மையை ஊடகங்கள் மீண்டும் மீட்குமா?

பெரும்பாலான ஊடகங்கள் அரசியல் கட்சிகள், தொழிலதிபர்கள் என வெவ்வேறு துறை சார்ந்த நபர்களின் கைகளில் சிக்கியிருப்ப தால் வந்த சோதனை இது. அதற்காக அத்தனை ஊடகங்களையுமே மக்கள் நம்பவில்லை என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது. ஆதாரபூர்வமான செய்திகளைத் தரும் ஊடகங்களின் மீது, மக்கள் எப்போதுமே நம்பிக்கை வைத்திருக்கத்தான் செய்கிறார்கள்.

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம், தூத்துக்குடி.

தொண்டன் - பக்தன் வித்தியாசம்?

கண்மூடித்தனமாக நம்புபவன்; கண்ணை மூடிக்கொண்டு நம்புபவன்.

தா ரவி, சிதம்பரம், கடலூர் மாவட்டம்.

‘பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் உயிருடன் இருப்பதை சோனியா குடும்பத்தினர் விரும்பவில்லை’ என்று பாபா ராம்தேவ் பேசியிருப்பது?

தற்போது மன்மோகன் சிங் பிரதமர் ஆசனத்தில் இருந்திருந்தால், ‘மோடியும் அமித் ஷாவும் சோனியா குடும்பம் உயிரோடு இருப்பதை விரும்பவில்லை’ என்று இதே நாக்கு வாய் மாற்றி ஆசனம் செய்திருக்கும். வியாபாரமே உலகம்!

கழுகார் பதில்கள்

வி.வெற்றி, கரந்தட்டாங்குடி, தஞ்சாவூர்.

‘புகையிலைப் பயன்பாட்டைத் தவிருங்கள்’ என்று ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் வேண்டுகோள் விடுத்திருக்கிறாரே?

‘புகையிலைத் தயாரிப்புகளைத் தடை செய்யுங்கள்’ என்பதுதான் நீண்டகாலமாகவே ‘ஜன் கி பாத்’. பிரதமரின் மனசாட்சி, முதலில் இதற்கு பதில் சொல்லவேண்டும்.

@ஸ்ரீ.பூவராகவன், படியூர், காங்கேயம்.

நவராத்திரி கொலு விற்பனையில் பெரியாரும் இடம்பிடித்திருக்கிறாரே?

‘கடவுள் இல்லை’ என்று ‘இந்த ராமசாமி’யைப் பேசவைத்ததே ‘அந்த ராமர் சாமி’தான் என்பாரும் உண்டே!

எஸ்.பிரேமச்சந்திரன், காஞ்சிபுரம்.

துப்புரவுப் பணியாளர் பணிக்கு, இளங்கலை, முதுகலை பொறியியல் பட்டதாரிகள்கூட விண்ணப்பித்திருப்பது எதைக் காட்டுகிறது?

வேலைவாய்ப்பின்மையை வெளிச்சம் போடுகிறது. அதேசமயம், துப்புரவுப் பணியாளர் போன்ற வேலைகள் இளக்காரமானவை என்கிற அளவுக்கு விவாதிக்கப்பட்டால், அது தவறு. சட்டபூர்வமான எந்தப் பணிக்கும் எந்த உயர்படிப்பு படித்தவர்களும் தகுதியிருப்பின் விண்ணப்பிக்கலாம், பணியிலும் சேரலாம். இதையெல்லாம் அவமானமாகப் பார்க்கும், விவாதிக்கும், எழுதும் போக்கு மாற வேண்டும்!

மேலைநாடுகள் பலவற்றில் உழைப்பாளிகளுக்கு மரியாதை (Dignity of labour) அதிகம். தெரு கூட்டுவோருக்கும் அலுவலகத்தில் மேஜை - நாற்காலி போட்டு வேலை செய்வோருக்கும் ஏறக்குறைய ஒரே சம்பளம்தான். இந்த நிலையை நோக்கி நம் நாடும் நகரும்போது, எல்லாம் ‘ஒப்பப்பர்’ ஆகியிருப்பர்.

@க.துள்ளுக்குட்டி, நூர்சாகிபுரம்.

151-வது ஆண்டிலும் மகாத்மா காந்தியின் தேவை அதிகரித்துள்ளதா, குறைந்துள்ளதா?

குறைந்தால் நன்றாக இருக்கும்.

@அ.குணசேகரன், புவனகிரி.

கடந்த ஆண்டுகளிலும் ‘நீட்’ தேர்வுகளில் ஆள்மாறாட்டம் நடந்திருக்குமோ?

ஆரம்பத்திலிருந்தே அது ‘நோட்’ தேர்வுதானே!

@ம. இராஜீவ்குமார், கோயம்புத்தூர்.

தமிழக அரசியல்வாதிகளில் ஊழல் வழக்கு இல்லாத கட்சித் தலைவர் யார்?

அதிகாரத்துக்கு வராதவர்கள்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை- 600002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!