Published:Updated:

கழுகார் பதில்கள்

உதயநிதி
பிரீமியம் ஸ்டோரி
News
உதயநிதி

ஒவ்வொரு காலகட்டத்திலும் சிலர் நினைவுக்கு வருவார்கள். இப்போதைக்கு ‘அவர்கள்’ இருவர்தான்!

வண்ணை கணேசன், சென்னை.

`நான் இன்னும் விவசாயம் செய்கிறேன்; விவசாயி என்பதில் பெருமைப்படுகிறேன்’ என்று முதல்வர் கூறுவதை நம்ப முடியவில்லையே?

இவ்வளவு ‘அறுவடை’ செய்கிறாரே... இன்னும் நம்பவில்லையென்றால் எப்படி?

தாமஸ் மனோகரன், புதுச்சேரி.

2021-ல் வாக்குகளின் விலை உயருமா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வாக்கு உங்கள் ஆயுதம். அதை விலைக்கு விற்பது குற்றம் மட்டுமல்ல... உங்கள் சந்ததிக்குச் செய்யும் துரோகம்!

@சரவணகுமார் சின்னசாமி, தாராபுரம்.

நீதிக்கு எதிரான விஷயங்களை நாம் எதிர்கொள்ளும்போது அவற்றை எப்படிக் கடப்பது?

நேர்மையுடன்!

@திருப்பூர். அர்ஜுனன்.ஜி, அவிநாசி

‘அ.தி.மு.க-வில் இரண்டு தறுதலைகள் இருப்பதாக’ உதயநிதி ஸ்டாலின் விமர்சித்திருப்பது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்ட கட்சிக்கு அழகா?

சென்ற வாரம்தான் உதயநிதிக்கு ஒரு திருக்குறளை நினைவுபடுத்தினோம். இந்த வாரம் இன்னொன்றை நினைவுபடுத்தினால் போச்சு...

யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

“ஒருவர் எதைக் காத்திட முடியா விட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல், அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகிவிடும்.”

இது அவரின் தாத்தா எழுதிய உரை!

கழுகார் பதில்கள்

கணேசன், பொன்னியம்மன்மேடு.

அறிவாளி, முட்டாள் யாரிடம் பேசி ஜெயிப்பது கஷ்டம்?

அறிவாளிபோல் நடிக்கும் முட்டாளிடம் பேசி ஜெயிப்பது கஷ்டம்.

@சின்னஞ்சிறுகோபு, சேலையூர்.

விக்கிரமாதித்தன், வேதாளம் என்றதும் கழுகாருக்கு நினைவுக்கு வருவது யார்?

ஒவ்வொரு காலகட்டத்திலும் சிலர் நினைவுக்கு வருவார்கள். இப்போதைக்கு ‘அவர்கள்’ இருவர்தான்!

கழுகார் பதில்கள்

அருண்குமார், ஓசூர்.

கொரோனாவால் வேலை இழந்துவிட்டேன். இப்போது கிடைத்திருக்கும் பணியில் ‘தற்காலிகம்தான். அதிகபட்சம் 10 மாத வேலை’ என்று சொல்லித்தான் சேர்த்திருக்கிறார்கள். நம்பிக்கையாக ஏதாவது சொல்லுங்களேன்!

ஓர் இதழில் கவிஞர் அப்துல் ரகுமானை ஒரு தொடருக்காகத் தொடர்பு கொள்கிறார்கள். “ஒவ்வொரு கவிஞரும் பத்து வாரங்கள் எழுதுகிறார்கள். அடுத்த பத்து வாரங்கள் நீங்கள் எழுத வேண்டும்” என்று கேட்கிறார்கள். அப்துல் ரகுமானும் ஒப்புக்கொண்டு எழுதுகிறார். 1984, ஜனவரி 18-ம் தேதி முதல் கட்டுரை ‘மின்மினிகள்’ என்ற தலைப்பில் வெளியாகிறது. ஹைக்கூ பற்றிய அந்தக் கட்டுரைக்கு அதிரிபுதிரி வரவேற்பு. தொடர்ந்து அவர் எழுதிய கட்டுரைகளுக்கும் வரவேற்பு பெருகவே, அந்த இதழின் ஆசிரியர் அப்துல் ரகுமானை அழைத்து ‘பத்து வாரங்கள் என்ற கட்டுப்பாடு உங்களுக்கில்லை. தொடர்ந்து எழுதுங்கள்’ என்கிறார். தொடர்ந்து எத்தனை வாரங்கள் எழுதினார் தெரியுமா? நூறு வாரங்கள்!

உங்கள் பணியின் தரமும் நேர்மையும் அவர்கள் காலக்கெடுவைத் தள்ளிப்போட வைக்கும்படி உழையுங்கள்.

அப்புறம் அருண்... அந்த இதழ் எது என்றுதானே யோசிக்கிறீர்கள்? இதே ஜூனியர் விகடன்தான்!

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம், திருநெல்வேலி.

`தமிழக, கேரள மக்கள் வில்லுப்பாட்டு மூலம் கதை கூறி விளக்குவதில் கெட்டிக்காரர்கள். நாட்டின் சுதந்திரப் போராட்டத்தையும் அவர்கள் கூற வேண்டும்’ என்கிறாரே பிரதமர் மோடி?

வில்லுப்பாட்டு எனும் கலை கொஞ்சம் கொஞ்சமாக நசிந்துகொண்டிருக்கும் சூழலில் இது நல்ல யோசனைதான். ஆனால், சுதந்திரப் போராட்ட வரலாறு என்பது ஒருமுகமானது அல்ல. அதற்குப் பல வேர்களும், கிளைகளும். பூக்களும், விதைகளும், விழுதுகளும் உண்டு. பாடலைப் பன்மைத்துவமாக எழுத வேண்டுமே... ‘வில்’ வில்லங்கமாகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ப்ரிய பாரதி, நாகப்பட்டினம்.

சங்ககாலத்தில் வறுமை இருந்ததா?

என்ன, இப்படிக் கேட்டுவிட்டீர்கள் ப்ரியா? மனிதன் வேளாண்மையைக் கண்டுபிடித்து, கொஞ்சமாய் விளைவித்து, நிறைவாய் அறுத்தெடுத்து, தனக்கென குடிசைக்குள் பதுக்கத் தொடங்கிய அடுத்த நாளே வறுமை பிறந்துவிட்டது. ‘...பாலில் வறுமுலை சுவைத்தனன்’ என்று நீளும் ஒரு பாடல் புறநானூற்றில் உண்டு. வீட்டில் உண்ண ஏதுமில்லாததால், பால் சுரக்காத தாயின் மார்பைச் சுவைத்து ஏமாந்து சோறு கேட்டு அழும் மகன், அவனைப் பசியிலிருந்து திசைதிருப்ப புலி வருவதாகச் சொல்லி பயமுறுத்தும் தாய், அந்தக் குடிசையின் வறுமையைப் போக்க ஏதாவது கொடுத்து அனுப்பு என்று வேந்தனிடம் வேண்டி நிற்கும் அந்தக் குடும்பத் தலைவனின் சித்திரம் என விவரிக்கும் அந்தப் பாடல். சங்ககால வறுமைக்கு ஓர் அழுத்தமான சாட்சி.

கழுகார் பதில்கள்

@சரவணன் OAKR, சென்னை.

ஹிந்தி நடிகர் சோனு சூட்-டுக்கு ‘மனித நேயச் செயலுக்கான சிறப்பு விருது’ வழங்கி கௌரவித்திருக்கிறதே ஐ.நா சபை..?

புலம்பெயர் தொழிலாளர்கள் இந்த தேசத்தில் சாலையெங்கும் நடந்துகொண்டிருந்தபோது, களத்தில் இறங்கி பலரையும் பத்திரமாகச் சொந்த ஊருக்கு அனுப்பிவைத்த சோனு, அந்த விருதுக்குப் பொருத்தமானவர்தான்!

@கலைமுருகன், திருநெல்வேலி.

அதிகாரத்தின் எல்லை எது?

‘இறந்தவர்களை உயிர்ப்பிக்க முடியாது என்பதுதான்!’ என்கிறார் ஆஸ்திரிய எழுத்தாளர், எலியா கனெட்டி.

@ப.த.தங்கவேலு, பண்ருட்டி 607106.

தாங்கள் சமீபத்தில் மிகவும் ரசித்த மீம்ஸ்?

தங்கவேலு... இம்பெர்ஃபெக்ட் ஷோ பார்ப்பதில்லையா? நாம் ரசித்தவற்றைத்தானே அங்கே பகிர்கிறோம்!

செ.அ.ஷாதலி, கோனுழாம்பள்ளம்.

பிரதமர் வெளிநாடு பயணம் செல்லவில்லையா?

கொரோனா புண்ணியத்துல கொஞ்சநாள் அவர் சொந்த நாட்டுல இருக்கிறது உங்களுக்குப் பிடிக்கலையா?

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள்,

ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!