Published:Updated:

கழுகார் பதில்கள்

தர்மயுத்தம், மௌனயுத்தம் எனப் பல யுத்தங்களுக்குப் பிறகும் ஆட்சி தொடர்வதே சாதனைதான்!

பிரீமியம் ஸ்டோரி

@விஷ்ணு, கல்பாக்கம்.

‘பொன்னியில் செல்வன்’ நாவலை எம்.ஜி.ஆர் படமாக எடுக்க நினைத்தார் என்று சமூக வலைதளங்களில் படித்தேன். உண்மையா?

உண்மைதான். கறுப்பு வெள்ளைப் படங்கள் வந்துகொண்டிருந்த காலத்தில், இதை வண்ணப்படமாக எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தார் எம்.ஜி.ஆர். இயக்குநர் மகேந்திரனைவைத்து திரைக்கதையாகவும் எழுதி வாங்கிவைத்திருந்தார். ஏனோ, தொடங்கிய புள்ளியிலேயே அந்த முயற்சி நின்றுவிட்டது. இந்தப் படத்தை ஆங்கிலத்திலும் எடுக்க வேண்டும், ஆங்கில வசனங்களை அறிஞர் அண்ணாவை எழுதவைக்க வேண்டும் என்றும் எம்.ஜி.ஆர் நினைத்திருந்தார். அவரது நிறைவேறாத ஆசைகளில் ஒன்று `பொன்னியின் செல்வன்!’

பச்சையப்பன், கம்பம்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஆட்சியிலிருக்கும் அ.தி.மு.க-வின் சாதனையாக எதைக் கருதுகிறீர்கள்..?

தர்மயுத்தம், மௌனயுத்தம் எனப் பல யுத்தங்களுக்குப் பிறகும் ஆட்சி தொடர்வதே சாதனைதான்!

இரா.ரெங்கசாமி, வடுகபட்டி.

கலைஞர் அரசியலுக்கும், ஸ்டாலின் அரசியலுக்கும் என்ன வித்தியாசம்?

தமிழ்... ஆக, பழமொழிகள்தான்!

மன்னை சித்து, மன்னார்குடி - 1.

கட்சியினரால் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமி அறிவிக்கப்பட்டதை, தேர்தலில் போட்டியிட்டு முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைப்போல் ஆடிப்பாடி, கொண்டாடித் தீர்த்துவிட்டார்களே அ.தி.மு.க-வினர்?

ஆமாம். அதுக்கு ஏன் இவ்ளோ ஃபர்னிச்சர்லாம் ஒடைச்சாங்கன்னுதான் புரியலை.

கழுகார் பதில்கள்

அ.குணசேகரன், புவனகிரி.

ஊழல்வாதிகள் வெட்கப்படாமல் நம்மிடம் ஓட்டுக் கேட்டு வருவதற்குத் தயங்குவதில்லையே... ஏன்?

ஊழல்வாதிகளிடம் எப்படி வெட்கத்தை எதிர்பார்க்க முடியும் குணசேகரன்?!

ராஜ், விருதுநகர்.

அ.தி.மு.க உடைந்தால் லாபம் பி.ஜே.பி-க்கா, தி.மு.க-வுக்கா?

தி.மு.க., பா.ஜ.க என்றில்லை... கலங்கிய குட்டையில் மீன்பிடிக்கப் பலரும் காத்திருக்கிறார்கள்.

எஸ்.ராமதாஸ், சேலம்.

ஐபிஎல் கிரிக்கெட்டுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் இடையிலுள்ள ஒற்றுமைகள் சில..?

யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் அவுட் ஆவார்கள். களத்தில் திறன்பட செயல்படாதவர்களுக்கு அடுத்தமுறை வாய்ப்பு கிடைக்காது. ஒருவரை ‘அவுட்’ ஆக்க ‘பதினோரு பேர்’ வியூகம் அமைப்பார்கள்... விளையாடுவார்கள். மிக முக்கியமாக ‘அணி’களை யார் வேண்டுமானாலும் விலைக்கு வாங்கிக்கொள்ளலாம்... விற்றுக்கொள்ளலாம்!

@சரவணன் OAKR, சென்னை.

யாருமே எதிர்பார்க்காத ஓர் அறிவிப்பை வெளியிட்டு விட்டார்களே இ.பி.எஸ்., ஒ.பி.எஸ் அண்ட் கோ?

அறிவிப்பு என்பது வெறும் காகிதத்தில் எழுதப்பட்ட எழுத்துகளும், காற்றில் கரைந்துபோகும் வார்த்தைகளும்தான் என மாறிவிட்ட இந்தக் காலத்தில், இவை செயல் வடிவத்துக்கு வரும்போதுதான் உண்மைகள் புலப்படும்.

@ம.ரம்யாமணி, வெள்ளக்கோவில்.

முதல்வர் வேட்பாளர் போட்டியில் கட்சிக்குள் வேண்டுமானால் எடப்பாடியார் வெற்றிபெற்றிருக்கலாம். தேர்தலிலும் அவரால் முதல்வராக சாதிக்க முடியுமா?

அதை முடிவுசெய்ய வேண்டியது நீங்கள்தானே ரம்யா?

@கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு.

தி.மு.க கூட்டணியில்கூட பா.ஜ.க சேரும் வாய்ப்பு உருவாகலாம் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது குறித்து..?

இதில் ஆச்சர்யப்படுவதற்குப் புதிதாக என்ன இருக்கிறது... ஏற்கெனவே ஒரே கூட்டணியில் இருந்தவங்கதானே பாஸ்!

கா.கு.இலக்கியன், செங்குன்றம்.

பாபர் மசூதி இடிக்கப்படவே இல்லை, உ.பி-யில் தலித் பெண் கற்பழிக்கப்படவே இல்லை, சேகர் ரெட்டி 2,000 ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கவே இல்லை... வேறு எதுவெல்லாம் இல்லை பா.ஜ.க ஆட்சியில்?

பாபரா அவர் யார்... கற்பழிப்பா, அப்படின்னா என்ன... 2,000 ரூபா நோட்டா, அதெப்ப வந்தது..? இப்படியெல்லாம் கேட்காம இருந்தாங்களேனு சந்தோஷப்படுங்க!

முரளிகுமார் பத்மநாபன், திருப்பூர்.

போதைப்பொருள்கள் சங்ககாலத்தில் இருந்தனவா?

ஊன் சோறும் கள்ளும் சங்ககாலத்தின் பிரதான உணவுப் பண்பாட்டில் இடம்பெற்றவை. தேறல், நறவு, நனை, நறா, மட்டு, பிழி, மகிழ், மது, வேரி, நறவம், பதம் எனப் பல பெயர்களில் கள் வழங்கிவந்திருக்கிறது. சங்கப் பாடல்களெங்கும், கள் பரவி மணக்கிறது. தானியங்கள், மூலிகைகள், தேன் உள்ளிட்ட பல பொருள்களிலிருந்து கள் தயாரிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டுமல்ல, உலகம் முழுக்க தோன்றிய பெரும்பாலான நாகரிகங்களில் போதை தரும் இயற்கையான பானங்கள் வாழ்வின், கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அனுமதிக்கப்பட்டே வந்திருக்கின்றன. ஆனால், வரலாற்றில் கொஞ்சம் கொஞ்சமாக இந்த மதுபானம் வணிகமாக, அரசியலாக, குற்றத்துக்குத் தூண்டும் பொருளாக, மனித மனத்தின் வக்கிர உணர்வைத் தூண்டும் பொருளாக மாறி மாறி உணவுப் பண்பாட்டிலிருந்து வெளியேறியது; மது அருந்துவது கீழ்மையாகப் பார்க்கப்பட்டது. கள் தவிர்த்து, வேறு போதைப்பொருள்கள் குறித்த தகவல்கள் சங்க இலக்கியத்தில் பெரிதும் இல்லை.

கழுகார் பதில்கள்

ச.ந.தர்மலிங்கம், ஈரோடு.

உ.பி-யில் தலித்துகளுக்கு ஏற்படும் அவமானம், பாலியல் கொடுமைகள், உயிர்ப்பலி ஆகியவற்றை முதல்வர் யோகி ஆதித்யநாத் கண்டுகொள்வதாகத் தெரியவில்லையே..?

‘யோகி ஆதித்யநாத்தைப் பார்த்து எல்லோரும் கற்றுக்கொள்ளுங்கள். உ.பி., ஒரு முன்மாதிரி மாநிலம். பிற மாநிலங்கள் உ.பியைப் பின்பற்ற வேண்டும்’ என்றெல்லாம் பல பொதுமேடைகளில் பேசினார் பிரதமர் மோடி. அவர் எதை ‘முன்மாதிரி’ என்று சொல்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம். பற்றியெரியும் பிரச்னைகளை விட்டுவிட்டு, வேறு பிரச்னைகளைப் பேசிக் கொண்டிருப்பதில் மோடிக்குச் சற்றும் சளைத்தவரல்ல யோகி ஆதித்யநாத்.

@கார்த்திக் திவ்யா அரியலூர்.

`இவர்கள் ஆட்சியில் இது அநியாயம்... அது அநியாயம்...’ என்பவர்கள், தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த அநியாயத்தை நீக்க ஒரு செங்கல்லைக்கூட எடுத்துவைக்க மாட்டேன் என்கிறார்களே..?

அரசியல் நாடகத்தில் காட்சிகளுக்குத் தகுந்தபடி வசனங்கள் மாறும்தானே!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள்,

ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு