Published:Updated:

கழுகார் பதில்கள்

மு.க.அழகிரி அரசியல் வெளிச்சத்துக்கு வருவாரா, அப்படியே ஒதுங்கிவிடுவாரா?

பிரீமியம் ஸ்டோரி

@இந்து குமரப்பன், விழுப்புரம்.

முன்னர் மன்னராட்சிக் காலத்தில் ‘ஆராய்ச்சி மணி’ இருந்ததுபோல இப்போது இருந்தால் எப்படியிருக்கும்?

`ஆராய்ச்சி மணி அமைத்த செலவு’ என்று பெரிய அமௌன்ட்டோடு ஒரு பெரிய போர்டு எல்லா ஆராய்ச்சி மணிகளுக்குக் கீழேயும் இருந்திருக்கும். இதில் அச்சமூட்டும் இன்னொரு விஷயம், தொடர்ந்து கேட்கும் மணிச் சத்தத்தில் காது சவ்வு கிழிந்துவிடும்.

ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

‘இரண்டாம் குத்து’ திரைப்படத்தின் டீஸர் காட்சிகள் மிகவும் ஆபாசமாக இருக்கின்றனவே..?

காமம் சார்ந்த கவிதைகள், கதைகள், பழமொழிகள், ஓவியங்கள், சிற்பங்கள், ஏன்... சினிமாகூட நமக்கொன்றும் புதிது அல்ல. பாலுணர்வை, வாழ்வின் அழகியல் நடவடிக்கையாக, கலை வடிவமாகக் கண்ட நாகரிகச் சமூகம் நம்முடையது. ஆனால், இது போன்ற படங்கள் ஆபத்தானவை. இவர்களுக்கு, கவர்ச்சிக்கும் வக்கிரத்துக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. சினிமா எனும் கலையால், ஒழுக்க விதிமுறைகளை மீறுவது வேறு; அரைவேக்காட்டுத்தனமாக அபத்தங்களை முன்வைப்பது வேறு. இரண்டாம் வகையைச் சேர்ந்தவை நீங்கள் குறிப்பிடும் படம் மற்றும் டீஸர் காட்சிகள்!

சரவணன், சென்னை.

அடுத்த தேர்தலில் நடக்கப்போவதை முன்கூட்டியே அறிந்துதான், முதல்வர் வேட்பாளர் தேர்வில் வழிவிட்டுவிட்டாரா ஓ.பி.எஸ்?

தர்மயுத்தம்... மௌனயுத்தம்... இப்போது சமசரயுத்தம்போல! தமிழகத் தேர்தல் களம் இதுபோலப் பல விசித்திரங்களைச் சந்தித்திருக்கிறது!

கழுகார் பதில்கள்

மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி.

சமூகத்தில் நடக்கும் தவறுகளை ஏற்றுக்கொள்ளவும் முடியாத, சமூகத்தோடு சேர்ந்திருக்கவும் முடியாத நிலை எதனால் ஏற்படுகிறது?

வாழ்க்கையில இப்பத்தான் முக்கியமான கட்டத்துக்கு வந்திருக்கீங்க யூசுப்! கொஞ்ச நாள்ல பழகிடும்!

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

யார் பலசாலி? அரசியல்வாதிகளா... ரெளடிகளா?

ரௌடியாக இருந்து அரசியல்வாதியாக புரொமோட் ஆனவர்கள்!

@சாமிநாதன், காங்கேயம்.

இந்த ஐபிஎல்-லில் யார் ஜெயிப்பார்கள்?

ஆடுபவர்களைக் கேட்கிறீர்களா... ஆட்டுவிப்பவர்களைக் கேட்கிறீர்களா?!

கழுகார் பதில்கள்

@அ.செல்வராஜ், கரூர்.

`விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை’ என்பது இன்றைய அரசியல் சூழ்நிலையில் சரியானதா?

‘யாரிடம்’, ‘எதை’விட்டு, எதைக் ‘கொடுப்பது’ என்பதைப் பொறுத்தது!

வண்ணை கணேசன், சென்னை.

இன்றைய அரசியல்வாதிகளில் யாரைக் கறிவேப்பிலை மாதிரிப் பயன்படுத்துகிறார்கள்?

அந்தந்தக் கட்சியைத் தோற்றுவித்த, அதை வளர்த்தெடுக்கப் பாடுபட்ட தலைவர்களின் பெயர்களையும் புகைப்படங்களையும்தான்!

மிக்கேல்ராஜ், சாத்தூர்.

மு.க.அழகிரி அரசியல் வெளிச்சத்துக்கு வருவாரா, அப்படியே ஒதுங்கிவிடுவாரா?

மத்திய அமைச்சராக இருந்த போதே அவர் பாராளுமன்றத் திலிருந்து ஒதுங்கியும், தன் துறைக்கு உரிய வெளிச்சத்தைக் கொடுக்காமலும்தானே இருந்தார்?

சரவணகுமார் சின்னசாமி, தாராபுரம்.

சுவிஸ் வங்கியில் இந்திய முதலீட்டாளர்களின் இரண்டாவது பட்டியலும் அரசின் கைக்கு வந்துவிட்டதால், அரசின் கையிலிருந்து அந்த 15 லட்ச ரூபாய் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?

இன்னுமா இந்த உலகம்...

@யாழினி, எழும்பூர், சென்னை.

பாரதியின் ‘புதிய ஆத்திசூடி’யில் கழுகாருக்குப் பிடித்த வரிகள்..?

எல்லாம் பிடிக்கும் என்றாலும் இவை மிகப் பிடிக்கும்: அச்சம் தவிர், உடலினை உறுதிசெய், கொடுமையை எதிர்த்து நில், சரித்திரத் தேர்ச்சிகொள், சொல்வது தெளிந்து சொல், புதியன விரும்பு, பெரிதினும் பெரிது கேள், தோல்வியில் கலங்கேல், மானம் போற்று, வையத் தலைமைகொள். ஒவ்வொன்றைப் பற்றியும் ஒரு தனிக் கட்டுரையே எழுதலாம்.

@அட்லாண்டா கணேஷ்

‘அ.தி.மு.க தலைவர்களெல்லாம் அந்தக் கட்சிக்கு ஒன்றரைக் கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள்’ எனச் சத்தியம் செய்கிறார் களே... அப்ப, போன எம்.பி தேர்தலில் இவர்கள் ஓட்டுப்போட்டிருந்தால் அதுவே ஜெயிக்கப் போதுமே! ஆனால், கிடைத்த ஓட்டுகள் 65 லட்சம்கூட இல்லையே... கணக்குல அ.தி.மு.க இவ்வளவு வீக்கா?

கட்சியின் பெயரே ‘அகில இந்திய’ அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாச்சே கணேஷ்... ஒருவேளை பாக்கி ஓட்டுகளெல்லாம் இந்தியாவுல வேற மாநிலங்கள்ல சிதறிக்கிடக்கோ என்னமோ!

அ.குணசேகரன், புவனகிரி.

கனிமொழிக்கு, தமிழக தி.மு.க அரசியலில் இனி இடம் கிடையாது அல்லவா?

அரசியலில் கொடுக்கப்படும் பதவியோ அல்லது தானாக எடுத்துக்கொள்ளும் பதவியோ... அந்தப் பதவியை நிலைநிறுத்திக்கொள்வதில்தான் இருக்கிறது சாதுர்யம்! தன்னை நிலைநிறுத்திக் கொள்வதும், விட்டு விலகி அமைதியாக இருப்பதும் கனிமொழி கையில்தான் இருக்கிறது!

கனிமொழி
கனிமொழி

மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி.

இன்றைய மாணவர்கள், இளைஞர்களின் வாசிக்கும் பழக்கத்தைச் சமூக ஊடகங்கள் தடுக்கின்றனவா?

ஒவ்வொரு காலகட்டத்திலும் வாசிப்புக்குத் தடையாக எதையாவது சொல்லிக்கொண்டே இருப்பது வழக்கம். முதலில் சினிமாவைச் சொன்னார்கள்; பிறகு தொலைக்காட்சியைச் சொன்னார்கள். இப்போது சமூக ஊடகங் களைச் சொல்கிறார்கள். இவையெல்லாம் வெறும் காரணங்கள் மட்டுமே. இவற்றை யெல்லாம் கடந்து, வாசிக்கும் விருப்பமிருப்ப வர்கள் அதற்கான நேரத்தை ஒதுக்கி வாசித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்!

பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி.

வெட்கம், மானம், சூடு, சுரணை இவை இன்று யாருக்கு இருக்குங்க சார்?

கேள்வியை நித்தியானந்தாகிட்டயிருந்து எடுத்திருக்கீங்கபோல. ஒண்ணு மட்டும் சொல்லலாம், இதெல்லாம் இருக்குறவங்க கம்மி. இல்லாதவங்க அதிகம். பெரும்பான்மை தானே ஜனநாயகம்!

@க.பூமிபாலன்

பணம் குறைவாக வைத்திருப்பவர்களைவிட, பணம் அதிகமாக வைத்திருப்பவர்கள்தான் அதிகம் நிம்மதி இல்லாமல் வாழ்கிறார்கள்... ஏன்?

இந்த உலகில் சிறியவையும், குறைவாக இருப்பவையும் தரும் நிம்மதியை, பெரிய விஷயங்களும் அதிகமாக இருப்பவையும் தருவதில்லை நண்பரே!

@ஆதவன், காங்கேயம்.

அண்ணாமலையைத் தொடர்ந்து குஷ்புவும் பா.ஜ.க-வில் இணைந்துவிட்டாரே?

அண்ணாமலை... குஷ்பு... அந்தப் படத்தின் ஹீரோ மட்டும்தான் பாக்கி என்கிறீரா ஆதவன்?

சாந்தி மணாளன், கருவூர்.

வெற்றிடங்களை நிரப்பவே முடியாதா?

‘வெற்றிடத்தைக் காற்று நிரப்பும்’ இது மாவோவின் பொன்மொழி மட்டுமல்ல... அறிவியலும்கூட!

ம.ரம்யா ராகவ், வெள்ளக்கோவில்.

நாடு சுபிட்சம் பெற மக்கள் என்ன செய்ய வேண்டும்?

தேர்ந்தெடுப்பவர்களும் தேர்ந்தெடுக்கப் படுகிறவர்களும் ‘அறம்’ சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள்,

ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு