Published:Updated:

கழுகார் பதில்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
லதா ரஜினிகாந்த், பிரேமலதா விஜயகாந்த்
லதா ரஜினிகாந்த், பிரேமலதா விஜயகாந்த்

பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படம், எல்லாம் முடிந்து ரிலீஸாகக் காத்திருக்கிறது. சரியாக அந்தச் சமயத்தில் மகாத்மா காந்தி சுடப்பட்டார்.

பிரீமியம் ஸ்டோரி

@ஆர்.ஜி

மல்லையா, நீரவ்மோடி, லலித்மோடியெல்லாம் இந்தியா வந்து சிறையில் இருப்பதுபோலவும், முக்கால்வாசிப் பணத்தை பா.ஜ.க மீட்டுவிட்டதாகவும் ஒரு கனவு கண்டேன்... இந்த ஆட்சியில் இது நடக்குமா?

அதான் கனவுனு நீங்களே சொல்லிட்டீங்களே பாஸ்!

மல்லையா, நீரவ்மோடி, லலித்மோடி
மல்லையா, நீரவ்மோடி, லலித்மோடி

@சொக்கலிங்க ஆதித்தன், திருநெல்வேலி.

அரசியல்வாதிகள் எப்போது நிம்மதியை இழப்பார்கள்?

வாக்கு எண்ணிக்கை நாளன்று!

@சௌந்தர், அரியலூர்.

ஒரு தொழில் தொடங்கவிருந்தேன். எல்லாம் ரெடி. அதற்குள் கொரோனா வந்துவிட்டதால் ஆரம்பிக்கவில்லை. ‘ஆரம்பமே தடையாகிவிட்டதே... இனி அது வேணுமானு யோசி’ என்று உறவினர்கள் அவநம்பிக்கையாகச் சொல்கிறார்கள். அவர்களுக்கு என்ன பதில் சொல்லட்டும்?

பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படம், எல்லாம் முடிந்து ரிலீஸாகக் காத்திருக்கிறது. சரியாக அந்தச் சமயத்தில் மகாத்மா காந்தி சுடப்பட்டார். படக்குழுவினர் ரிலீஸ் தேதி குறித்து தயாரிப்பாளரிடம் கேட்க, “இந்தச் சூழ்நிலையில் நான் ஒரு சினிமா பார்க்க மாட்டேன். மக்களும் அப்படித்தானே... மக்கள் இந்தச் சோகத்திலிருந்து மீண்டு வரட்டும். மூன்று மாதங்கள் கழித்து படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம்’ என்று சொல்லிவிட்டார் அவர்.

மூன்று மாதங்கள் கழித்து வெளியான அந்தப் படம், இந்திய சினிமா வரலாற்றின் மிக முக்கியமான படமான ‘சந்திரலேகா.’ தயாரிப்பாளர் எஸ்.எஸ்.வாசன். சரியான காரணத்துக்காக ஆகும் தாமதம், வெற்றிக்கே வழிவகுக்கும்!

லதா ரஜினிகாந்த், பிரேமலதா விஜயகாந்த்
லதா ரஜினிகாந்த், பிரேமலதா விஜயகாந்த்

@மன்னை சித்து, மன்னார்குடி.

லதா ரஜினிகாந்த், பிரேமலதா விஜயகாந்த் இருவருக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

ரெண்டு பேருக்குமே மண்டபத்துலதான் பிரச்னை!

டி.சி.இமானுவேல், மயிலாடுதுறை.

‘பதவி வந்த பிறகு பணிவு வர வேண்டும்’ என்பார்கள். ஆனால், தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு அந்தப் பணிவு வந்திருக்கிறதா?

அதுதான், வந்த உடனேயே வாயைவிட்டு, அதற்கு மன்னிப்பும் கேட்டாரே... இதிலிருந்தே தெரியவில்லையா ‘பணிவு’... தவிரவும் அவர் ‘பேங்க் ஒண்ணு கட்டிவிடுங்க. நடத்துறோம்...’ என்று சொல்கிற ‘வின்னர்’ வடிவேலு போஸ்லதானே எப்பவுமே இருப்பாரு!

வண்ணை கணேசன், சென்னை.

‘தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்’ என்பார்களே... அரசியல்வாதிகளில் அதற்குச் சமீபத்திய உதாரணம்?

பதினாறு அடி அல்ல... இப்போதெல்லாம் தனி விமானம் மூலம் நாடுவிட்டு நாடே பாய்ந்துகொண்டிருக்கிறார்கள் குட்டிகள்!

சம்பத்குமாரி, பொன்மலை.

ராதாரவி, குஷ்பு போன்றவர்கள் தாங்கள் போடும் வேஷத்துக்கு ஏற்ப வசனங்களைப் பேசுவதில் வல்லவர்களாக இருக்கிறார்களே..?

அதற்காகத்தானே கோடிகளில் சம்பளம் வாங்கிக்கொண்டிருக் கிறார்கள்... சினிமாவில்!

பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி.

‘குருதியில் உறுதி கலந்து உழைப்போம். புனித ஜார்ஜ் கோட்டையில் புது வரலாறு படைப்போம்’ என்ற எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை பற்றி..?

வாழ்த்துகள்... எதுகை மோனையுடன் அழகாக எழுதிக்கொடுத்தவருக்கு!

லட்சுமி செங்குட்டுவன், வேலூர்.

அரசியல்வாதிகள் பல நேரங்களில் முட்டி மோதி, பிறகு சரண்டர் ஆகிவிடுகிறார்களே..?

சில நேரங்களில் ‘பணிவு’ம், பல நேரங்களில் பணமும் சரணடையச் செய்துவிடுகிறது!

@ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.

அரசியல்வாதிகளின் தினசரி பிரார்த்தனை என்னவாக இருக்கும்?

லாபம்.

@வெங்கட்

சமுதாயத்தில் நடப்பதைத்தான் சினிமாவில் காட்டுகிறார்களா... சினிமாவில் காட்டுவதைத்தான் சமுதாயம் பிரதிபலிக்கிறதா?

இது, `கோழியிலிருந்து முட்டை வந்ததா... முட்டையிலிருந்து கோழி வந்ததா?’ என்ற கேள்வியைப் போன்றது. இரண்டும் பாதிப் பாதி உண்மைகள். இதில் சிக்கலான விஷயம் என்னவென்றால், சமூகத்திலிருந்து சினிமாவும், சினிமாவிலிருந்து சமூகமும் எதிர்மறையான விஷயங்களையே அதிகமும் எடுத்துக்கொள்கின்றன; பிரதிபலிக்கின்றன.

பகத் சிங்
பகத் சிங்

ப்ரியபாரதி, நாகப்பட்டினம்.

டைரிகளின், நோட்டுப் புத்தகங்களின் முதல் பக்கத்தில் சிறந்த வாக்கியங்களை எழுதிவைப்பதை ஒரு வழக்கமாக வைத்திருக்கிறார்களே... ஏன்?

முதல் பக்கம் என்பது முகத்தைப் போன்றது; அகத்தைப் பிரதிபலிப்பது. ஒருவரின் நோட்டுப் புத்தகத்தின் முதல் பக்கத்தில் எழுதப்பட்டிருக்கும் வரிகளைவைத்தேகூட அவரைப் பற்றி ஒரு முடிவுக்கு வர முடியும். எல்லாம் உளவியல்தானே!

பகத் சிங்கின் 404 பக்க சிறைக் குறிப்பின் முதல் பக்கத்தில் அவர் எழுதிவைத்திருந்த கவிதை வரிகள் இவை:

‘விடுதலை மீது நான் கொண்டுள்ள வேட்கைக் கனவால்தான்

பூமி சுழன்றுகொண்டிருக்கிறது.

சிறைக்கூடத்திலும்கூட விடுதலையாயிருந்த காதலன்

மஜ்னு போன்றவன் நான்.’

@ப.திருக்காமேஷ்வரன், புதுச்சேரி.

ஐபிஎல்... பிக் பாஸ்?

ஐபிஎல்லே ஒரு பிக் பாஸோட பிளான். பிக் பாஸ் ஒரு கார்ப்பரேட்டோட கேம்!

@பாண்டி

பல தேசிய மொழிகள் பேசும் இந்திய நாட்டில், பிரதமர் மீண்டும் மீண்டும் இந்தி மொழியிலேயே நாட்டு மக்களுடன் உரையாற்றுவதை, பிற மொழிகளை அவர் பொருட்படுத்தவில்லை என்றே எடுத்துக்கொள்ளலாமா?

தெரியவில்லை என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

@சரோஜா பாலசுப்ரமணியன், கோலார் தங்கவயல்.

உண்மையிலேயே இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்துவருகிறதா... அல்லது அதுவும் ஏமாற்று வேலையா?

எல்லாவற்றுக்கும் அரசைச் சந்தேகப்படக் கூடாது. குறைகள் இருந்தாலும், அரசின் சில நடவடிக்கைகளைப் பாராட்டலாம். மக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகப் பின்பற்றும் பட்சத்தில் இன்னும் கட்டுக்குள் வரும் கொரோனா.

@ஜெ.பரணி

தமிழ் உணர்வு என்கிற பெயரில் விஜய் சேதுபதியின் குழந்தைக்கு எதிரான ஒரு வக்கிரப் பதிவைப் பார்க்க நேர்ந்தது. இதுதானா நம் இனப்பற்று?

மிகக் கேவலமான பதிவு அது! அதில் தமிழுக்கும் இனப்பற்றுக்கும் ஒரு தொடர்புமில்லை. ஆண் மைய புத்தியின் வன்முறைச் சிந்தனை; மிக வக்கிரமான வெளிப்பாடு!

பி.அசோகன், கொளப்பலூர்.

ரசனை என்ற ஒன்று இல்லாமல் இருந்திருந்தால்...?

வரலாற்றில், மனிதன் இன்னும் நெருப்பைக்கூட கண்டுபிடித்திருக்க மாட்டான். இந்தக் கேள்விக்கும் பதிலுக்கும்கூட வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள்,

ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு