அரசியல்
Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்

கூடவே பட்டாவுக்கான ‘கமிஷனை’யும் டிஜிட்டல்மயமாக்கியிருக்க வேண்டாமோ!

@எஸ்.எஸ்.எம்.கமால், கடையநல்லூர், தென்காசி மாவட்டம்.

கொரோனாகால ஊழல்கள் பிற்காலத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமா?

பின்னே... ‘விசாரணை கமிஷன்’ என்கிற பெயரில் தங்களுக்கு மிக மிக வேண்டப்பட்ட, ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு ‘நன்றிக்கடன்’ செலுத்த வேண்டாமோ!?

@டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

‘அஸ்ஸாம் மாநிலத் தேர்தலில், பா.ஜ.க-வின் முதல்வர் வேட்பாளராக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அறிவிக்கப்படலாம்’ என்கிறார்களே..?

ம்... காங்கிரஸ் காலங்களில் ஆணையப் பதவி தொடங்கி, ஆளுநர் பதவி வரை கொடுத்து ‘உபசரித்தார்கள்.’ பி.ஜே.பி காலத்தில் முதல்வர் வரை ‘பரிணாம வளர்ச்சி’ அடைந்துகொண்டிருக்கிறார்கள். போகிறபோக்கில் பிரதமர் பதவிகூடக் கிடைக்கலாம். கட்சி ஆரம்பிக்காமல், கொள்கை பேசாமல், வீதியில் இறங்காமல், மக்களுக்காகப் போராடாமல் அமைச்சர், ஆளுநர், முதல்வர் பதவியெல்லாம் கிடைக்கிறது என்பதை நினைக்கும்போது, ‘நீ... வக்கீலுக்குப் படிச்சு, நீதிபதியாகணும்’ என்று சின்ன வயதிலிருந்தே அப்பா சொல்லிக்கொண்டிருந்ததுதான் நினைவில் வந்துபோகிறது.

வடபோச்சே!

@‘நன்னிலம்’ மணிமாறான், சிங்கப்பூர்.

‘தர்மசாலா லாஜிக்’ போன்றதா கைலாசா?

இது ‘கருமசாலா லாஜிக்’!

@இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

‘இலங்கை நாடானது தமிழர்களின் பூமி. தமிழர்கள் இந்த மண்ணின் பூர்வகுடிகள்’ என இலங்கை தமிழ்த்தேசியக் கட்சி எம்.பி-யான விக்னேஸ்வரன், அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்கிறாரே..?

பூகோள உண்மை... வரலாற்று உண்மை... வாழும் உண்மை.

விஜயகாந்த் - பிரேமலதா
விஜயகாந்த் - பிரேமலதா

@இல.கண்ணன், நங்கவள்ளி, சேலம் மாவட்டம்.

‘‘விஜயகாந்த் இனி ‘கிங்’ ஆகத்தான் இருப்பார்’’ என்று பிரேமலதா கூறுகிறாரே?

ஷூட்டிங் நடத்துவதற்கு இன்னமும் அனுமதி கொடுத்தது போலத் தெரியவில்லையே. ஆமாம், யார் டைரக்டர் என்று ஏதாவது கேள்விப்பட்டீர்களா கண்ணன்!

@கார்த்திக் பத்மா, அரியலூர்.

எப்போதாவதுதான் ஒரு நல்லதைச் செய்கிறது அரசு. அதையும் அந்த அரசாங்க ஊழியர்களே தடுப்பது நியாயமா (டிஜிட்டல் பட்டா மாறுதல் செய்வதை வருவாய்த்துறையினர் எதிர்ப்பதைத்தான் கூறுகிறேன்)?

அவர்களுடைய எதிர்ப்பிலும் ‘நியாயம்’ இருக்கத்தானே செய்கிறது. கூடவே பட்டாவுக்கான ‘கமிஷனை’யும் டிஜிட்டல்மயமாக்கியிருக்க வேண்டாமோ!

@இரா.கோதண்டராமன், அசோக் நகர், சென்னை-83.

மக்கள், ஞாயிறன்று முழு ஊரடங்கைப் பொருட்படுத்தாமல் விளையாட்டு, கடலில் குளித்தல் போன்ற பல செயல்களில் ஈடுபடுகின்றனரே..?

இதைவிடக் கொடுமை, விதிகளை வகுப்பவர்களே அவற்றை மீறுவதுதான். அமைச்சர்கள் குடும்பத்துடன் ஊர் ஊராகப் போகிறார்கள். கொரோனாவைக்கூட குடும்பம் குடும்பமாக வாங்கிவருகிறார்கள். ஓர் அமைச்சர், தன்னுடைய ஊர் கோயில் கும்பாபிஷேகத்துக்காக ‘புனித நீர் எடுக்கிறேன்’ என்று ஊர் ஊராகப் போய் கோயில், குளம், ஆறு என்று மூழ்கிக்கொண்டிருக்கிறார், அரசாங்கப் பாதுகாப்புகளுடன். `ஆய்வுப் பணி’ என்கிற பெயரில் முதல்வரே ஊர் ஊராகக் கூட்டத்தைக் கூட்டிப் பேசிக்கொண்டிருக்கிறார். உண்மையில், இந்த ஞாயிற்றுக்கிழமை லாக்டௌன் என்பதே பெரும் பித்தலாட்டமாகத்தான் இருக்கிறது. இதற்கு எதிராக நாமெல்லாம் ஓர் ஒத்துழையாமை இயக்கத்தைக்கூட உடனடியாகத் தொடங்கினாலும் தவறில்லை.

@ஸ்ரீ.பூவராகவன், படியூர், திருப்பூர் மாவட்டம்.

ஊழல் இல்லாத ஆட்சியைத் தமிழகத்தில் எந்தக் கட்சியால் தர முடியும்?

ஊழல் மற்றும் லஞ்சப் பணத்தில் வளர்க்கப்படாத கட்சியால்!

@நேக்கு, சென்னை-116.

‘கட்சிக்கு மட்டும் விசுவாசமாக இருங்கள்’ என்கிறாரே ஓ.பி.எஸ்?

ரத்தத்தின் ரத்தங்களே, இதையெல்லாம் நம்பி யாரும் மோசம் போய்விடாதீர்கள். அப்படி இருந்திருந்தால், இவருக்கு மட்டுமல்ல, எடப்பாடிக்கும்கூட முதல்வர் பதவி கிடைத்திருக்கவே கிடைத்திருக்காது என்பதுதான் உண்மை. ஆளே இல்லாத நாற்காலி காலில்கூட விழுந்து விசுவாசத்தைக் காட்டத் தவறாதீர்கள்.

@பெ.பச்சையப்பன், கம்பம்.

மு.க.ஸ்டாலின் முதல்வரானால் வேலை இல்லா திண்டாட்டம் குறையுமா?

கண்டிப்பாக, ஒருவருக்கு வேலை கிடைத்துவிடுமே!

பழ.இராமன், கிருஷ்ணாபுரம், கரூர் மாவட்டம்.

‘இந்த இயக்கத்தை (தி.மு.க) வேறு யாராலும் அழிக்க முடியாது. நம்மை நாமே அழித்துக்கொண்டால்தான் உண்டு’ என்றார் அண்ணா. அந்தநிலை நெருங்கிவிட்டதாக என்னைப் போன்ற மூத்த உறுப்பினர்கள் அஞ்சுகிறோம். மு.க.ஸ்டாலின் எவ்வளவு நாளில் முடித்துவைப்பார் கழுகாரே?

2021 சட்டமன்றத் தேர்தல் வரை பொறுத்திருங்கள். முடிக்கிறாரா... முளைக்கிறாரா என்று பார்த்துவிடலாம்.

‘மேட்டுப்பாளையம்’ மனோகர், கோவை-14.

பல கோடி ரூபாய் முதலீடுகளில் கட்டப்பட்டு, செயல்பட்டுவந்த தனியார் பள்ளிகள், கலை-அறிவியல், தொழில்நுட்பக் கல்லூரிகளின் எதிர்காலம்?

ஒரு நானோ அளவுக்குக்கூடச் சேதாரம் வந்துவிடாத அளவுக்குத் தெம்பாகத்தான் இருக்கிறார்கள். ஹாஸ்டல் இல்லை, பேருந்து இல்லை, ஆன்லைன் வகுப்பு மட்டும்தான். ஆனாலும், அனைத்துக் கட்டணங்களையும் வசூலிக்கிறார்கள். ‘வீட்டிலிருந்துதானே பாடம் நடத்துகிறாய்’ என்று சொல்லி ஆசிரியர்களின் சம்பளத்தைப் பாதிக்கும்கீழ் குறைத்துவிட்டார்கள். நம்மையெல்லாம் கெடுக்கிற கொரோனா, அவர்களுக்கு மட்டும் கான்கிரீட்டைப் பொத்துக்கொண்டு கொட்டிக்கொண்டிருக்கிறது. அவர்களின் எதிர்காலம் முன்பைவிட பல மடங்கு பலம்தான். அவர்களை நம்பிப் படிக்கும் நம்முடைய குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது.

கழுகார் பதில்கள்

@சரோஜா பாலசுப்ரமணியன், கோலார் தங்கவயல்.

ஐ.பி.எஸ் அண்ணாமலை பா.ஜ.க-வில் இணைந்துள்ளார். நேர்மையானவர் என்று சொல்லிக்கொள்பவர், அரசியலில் எப்படிப் பணியாற்ற முடியும்?

‘ஹைபதாடிக்கல் கொஸ்டின்’ (Hypothetical question).

(நன்றி, வசன உதவி: ‘எந்திரன்’)

எஸ்.சிவசங்கர், மதுரை.

மெக்ஸிகோ நகரில் கோமாளி களுக்குச் சங்கம் இருக்கிறதாமே..?

அதிலென்ன பெருமை. நம் நாட்டில் கட்சிகளே இருக்கின்றன. நாம் ஆட்சிக்கட்டிலிலேயேகூட அமரவைத்து ரசித்துக் கொண்டிருக்கிறோம்.

நா.மோகன்ராஜ், நல்லூர்பாளையம்.

‘இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைய வேண்டும்’ என்ற தோழர் நல்லகண்ணுவின் ஆசை நிறைவேறுமா?

காலம் எப்போதோ கடந்து விட்டது. இனி இணைந்தாலும் அவர்களால் எதையும் சாதிக்க முடியாது என்கிற நிலைக்கு வந்துவிட்டனர். கழகங்கள் மற்றும் காங்கிரஸின் தோள்களில் சவாரி செய்து செய்தே சிவப்புச் சாயம் வெளுக்க ஆரம்பித்து வெகுநாள்களாகின்றனவே!

@ம.ராகவ்மணி, வெள்ளக்கோவில், திருப்பூர் மாவட்டம்.

கழுகாருக்கு எப்போதும் மனதில் அலைபாய்ந்து கொண்டிருக்கும் சினிமா பாடல் எது?

‘மனிதா மனிதா

இனி உன் விழிகள் சிவந்தால்

உலகம் விடியும்!’

@ரவீந்திரன், கோவை-7.

ராதாபுரம் சட்டமன்றத் தொகுதித் தேர்தல் வழக்கில் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிடாமல் நீண்டகாலமாக நிறுத்திவைத்துள்ளனர். அதில் அப்படி என்ன சட்டச் சிக்கல்?

சட்ட விக்கல்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள்,

ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!