Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கழுகார் பதில்கள்

ஜோக்கையும் சொல்லிவிட்டு சிரிக்கவும் கூடாதென்றால் எப்படி?

ஆர்.துரைசாமி, கணபதிபுதூர், கோவை.

சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இத்தனை ஆண்டுகள் கடுமையாக உழைத்து, தொழில் வளர்ச்சியை உயர்த்திய உழைப்பாளிகளின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்கிறதா?

ஊரடங்கின்போது, பாதங்களில் ரத்தம் கசிய தேசமெங்கும் அவர்கள் நடந்ததைத்தான் எல்லோரும் பார்த்தோமே!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கணேசன், திருப்பத்தூர்.

மேடைப் பேச்சாளர் என்பவர் எப்படி இருக்க வேண்டும்?

பேச்சாளர் பேசுவதற்கு முன்பாக, `எப்போது இவர் பேச ஆரம்பிப்பார்...’ என்று கடிகாரத்தைப் பார்க்க வேண்டும். பேச ஆரம்பித்தவுடன், `எப்போது இவர் பேசி முடிப்பார்...’ என்று கடிகாரத்தைப் பார்க்கக் கூடாது.

வண்ணை கணேசன், சென்னை.

தலைவர்களுக்குச் சிலை வைக்கிறார்களே... இதனால் ஏதேனும் நன்மை?

தமிழகத்தில் கடைசியாக ஒரு பெண் தலைவருக்கு சிலைவைத்தார்கள். ‘இது அவர் இல்லை’ என்று தமிழகமே அலறியது. அப்படியான சிலைகள் வைக்கப்படாதவரை எல்லோருக்கும் நன்மைதான்!

@ சி.கார்த்திகேயன், சாத்தூர்.

மக்களுக்குச் சேவை செய்யும் ஆட்சியாளர்கள் அதைச் சொல்லிக் காட்டலாமா?

ஓ... சொல்லிக்கொள்கிற அளவுக் கெல்லாம் அவர்கள் சேவை செய்கிறார்களா?!

குத்தாலம் ஜெ.நடராஜன், மயிலாடுதுறை.

கழுகாரே, சிரிக்காமல் பதில் சொல்லுங்கள். `தே.மு.தி.க தனித்துப் போட்டி’ என்று பிரேமலதா சொல்கிறார்... நடக்குமா?

ஜோக்கையும் சொல்லிவிட்டு சிரிக்கவும் கூடாதென்றால் எப்படி?

கழுகார் பதில்கள்

மாணிக்கம், சங்ககிரி.

கழுகாரிடம் பத்துக் கோடி பணம் இருக்குமா?

‘பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை,

மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை.’

கண்ணதாசனோடு நமக்கு முரண்பாடு இல்லை!

@ மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி, மதுரை.

எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்பைத் தட்டிப் பறித்துவிடுமோ?

மனிதன் அளவுக்கு எந்த இயந்திரத்தாலும் கற்பனை செய்ய முடியாது. டோண்ட் வொர்ரி... பி ஹேப்பி மூர்த்தி!

அ.ஜெயப்பிரகாஷ், கழுகுமலை.

ஊரடங்கால் வேலை இழந்து, பாலியல் தொழில் செய்து பிள்ளைகளைக் காப்பாற்றும் நிலை வந்ததற்கு யார் காரணம்... அரசா, ஆண்டவனா?

ஆண்டவர்களும், ஆண்டுகொண்டிருப்பவர்களும்!

@குமரேஷ் ஜெயக்குமார், கிணத்துக்கடவு.

மரணம் பற்றிய பயம் வரும்போது என்ன செய்யலாம்?

‘வாழ்க்கை என்பதே ஒரு நீண்ட தூக்கத்தில் நாம் காண்கிற தொடர் கனவு. மரணம்தான் அதன் விழிப்பு’ என்கிறது ஜென் தத்துவம். அதனால், பயமெல்லாம் தேவையில்லை குமரேஷ்.

@திருப்பூர். அர்ஜுனன்.ஜி, அவிநாசி.

‘மாற்ற முடியாததை மாற்றுவோம்’ என பொய்யுரைப் பதே அரசியல்வாதிகளுக்கு வாடிக்கையாகிவிட்டதே?

அதான் பேச்சை மாத்திட்டே இருக்காங்களே பாஸ்!

@ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

கழுகார் ஜாலி டைப்பா... சீரியஸான டைப்பா?

சீரியஸா இருக்கணும்னு நினைக்கிற ஜாலி டைப்!

@ கணேஷ்.

நித்தி கைலாசாவில் கலக்குகிறார் போல... அங்கே எப்படிப் போவது?

அதான் அவரே வழி சொல்லிவிட்டாரே... ‘நோ சூடு... நோ சொரணை’ என்று!

கழுகார் பதில்கள்

@சரவணகுமார் சின்னசாமி, தாராபுரம்.

கொரோனா நாடகம் எந்தக் கட்டத்திலிருக்கிறது... இடைவேளையா, க்ளைமாக்ஸா?

நாடகமா? பாஸ், அது வெப்சீரிஸ் ஆச்சே... சீஸன் ஒன் முடிஞ்சு சீஸன் டூ ஆரம்பிச்சிருக்கு!

@மதிராஜா திலகர், சின்னபுங்கனேரி.

துன்பத்தில் சிரிப்பவர்கள் பற்றி..?

நீங்கள் துன்பத்தில் இருக்கும்போது நீங்களே சிரித்தால்... ஞானி.

பிறரது துன்பத்தின்போது நீங்கள் சிரித்தால்...

@காட்டாவூர் தேனரசு, செங்குன்றம்.

`நான் அடிப்பதுபோல் அடிக்கிறேன், நீ அழுவதுபோல் அழு’ என்கிற பழமொழி இன்றைய அரசியலில் யாருக்குப் பொருந்தும்?

வேறு யாருக்கு? அ.தி.மு.க - தி.மு.க-வே அப்படித்தான்!

@அ.பாரதிராஜா, இளந்துறை, கும்பகோணம்.

வரும் சட்டமன்றத் தேர்தல் தி.மு.க வாக்குறுதிகளில் மதுவிலக்கு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வூதியம் பற்றி ஏதேனும் எதிர்பார்க்கலாமா?

வாக்குறுதிதானே... அதற்கா பஞ்சம்? எதை வேண்டுமானாலும் எதிர்பார்க்கலாம்!

@ வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல்.

‘யாசகர்’ மதுரை பூல்பாண்டியன் 12-வது முறையாக மதுரை கலெக்டரிடம் பத்தாயிரம் ரூபாய் நிதி வழங்கியிருப்பது பற்றி..?

அவர் ‘யாசகர்’ அல்ல... கர்ணன்!

முருகேசன், மணச்சநல்லூர்.

சினிமா சம்பந்தமாக கழுகார் கேள்விப்பட்ட சுவாரஸ்யமான செய்தி ஒன்று சொல்லுங்களேன்..?

‘அண்ணாமலை’ படத்தில் குஷ்புவின் பெயர் குஷ்பு என்றே முடிவானது. பாதிப் படம் ஷூட்டிங் முடிந்த பிறகுதான், ‘குஷ்பு’ என்ற பெயர் நேட்டிவிட்டியாக இல்லை என்று மாற்ற முடிவு செய்தார்கள். ஆனால், பாதிப் படத்தில் ரஜினி உட்பட எல்லோருமே அவரை ‘குஷ்பு’ என்று கூப்பிட்டிருக்கிறார்களே... டப்பிங்கில் ‘லிப் சிங்க்’ மிஸ் ஆகக் கூடாதே என்று யோசித்து, வைக்கப்பட்ட புதிய பெயர்தான் ‘சுப்பு.’ உன்னிப்பாகக் கவனித்தால், பல காட்சிகளில் ‘குஷ்பு’ என்றே உதட்டசைவுகள் இருக்கும். இது சுப்புவே... ஸாரி, குஷ்புவே சொன்னது!

கழுகார் பதில்கள்

@ப்ரிய பாரதி, நாகப்பட்டினம்.

கழுகாருக்குத் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் உண்டா?

‘பழுத்து வெடித்து மணம் வீசும் பலாச்சுளையின் தேன் வழிந்து, பாறையிலுள்ள சுனையில் விழுகிறது. வாழைமரத்திலிருந்து இனிக்கும் பழங்களும் அதில் வீழ்கின்றன. நாட்பட நாட்பட அந்தச் சுனைநீர் கள்ளாக மாறிவிடுகிறது. இதை அறியாத குரங்கு ஒன்று, அந்தச் சுனைநீரைக் குடித்து மயக்கம்கொள்கிறது. மிளகுக்கொடி படர்ந்துள்ள சந்தன மரத்தின் மீது ஏற முயன்று முயன்று கீழே விழுகிறது. மரத்தடியில் பலவகை மலர்கள் உதிர்ந்துகிடப்பதால், அதுவே சுகமான படுக்கையென குரங்கு அழகாகத் தூங்குகிறது’ என்று எழுதுகிறார் புலவர் கபிலர். அகநானூற்றில் இடம்பெற்றுள்ள கவித்துவமான இந்தப் பாடலில் வரும் குரங்குபோல மயக்கம் வரும் அளவுக்குத் தமிழ் இலக்கியத்தில் திளைப்பதுண்டு.

மாரிமுத்து பாலா, நீலகிரி.

புகழ்பெற்ற ஒருவரிடம் இருக்கும் வித்தியாசமான பழக்கத்தைச் சொல்லுங்களேன்?

நாம் நண்பர்களிடம் ஏதேனும் விஷயத்தைப் பற்றி ரிலாக்ஸாகப் பேச வேண்டுமென்றால் ‘ஒரு டிரைவ் போகலாம்’ என்றோ, ‘ஒரு காபி சாப்பிடலாம்’ என்றோ அழைத்துப் போய்ப் பேசுவோம் அல்லவா... சீன கம்யூனிஸ்ட் தலைவர் மா சே துங், தன் கட்சி சகாக்களை ‘வாங்க நீச்சல்குளம் போகலாம்’ என்று அழைத்துப் போய் நீந்திக்கொண்டே அவர்களிடம் பேசுவாராம்.

நன்னிலம் இளங்கோவன், மயிலாடுதுறை.

சசிகலா, தமிழக முதல்வராக வாய்ப்பிருக்கிறதா?

சட்டப்படி அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு வாய்ப்பில்லை!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள்,

ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!