Published:Updated:

கழுகார் பதில்கள்

மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

ஓர் ஒற்றை அம்பு, ஒரு பெரிய கப்பலை முறியடித்ததாக ஒரு கதை உண்டு

கழுகார் பதில்கள்

ஓர் ஒற்றை அம்பு, ஒரு பெரிய கப்பலை முறியடித்ததாக ஒரு கதை உண்டு

Published:Updated:
மோடி
பிரீமியம் ஸ்டோரி
மோடி

குணசேகரன், டாடாபாத்.

வேலையின் காரணமாக எப்போதும் மன அழுத்தத்துடன் இருப்பது சரியா?

மன அழுத்தம் ஆபத்தானதுதான். ஆனால், ஓரளவு மன அழுத்தம் நல்லது என்கிறார்கள். ரிவர்சைடிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியர் ஹோவர்டு எஸ் ஃபிரைடுமேன் ``ஓரளவு மன அழுத்தத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் சவால்களை தைரியமாக எதிர்கொண்டு, ஆசுவாசமாக வசிக்கும் மக்களைவிட நீண்ட நாள்கள் வாழ்கின்றனர்” என்று ஓர் ஆய்வின் முடிவில் கூறியிருக்கிறார். அளவான மன அழுத்தம் நல்லதுதான். ஆனால், அந்த அளவு எவ்வளவு என்பதில்தான் கவனம் தேவை!

மன்னை. கு.ஜோதிமணி, மன்னார்குடி.

அ.தி.மு.க-வின் ஒற்றைத் தலைமையாக சசிகலா, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இவர்களில் யார் வந்தால் மீண்டும் அந்தக் கட்சி மக்களின் ஆதரவுடன் எழுச்சி பெறும்?

ஓனர்கிட்ட நல்ல பேர் எடுக்கறவங்களுக்கு மேனேஜர் போஸ்ட் கிடைக்கும்!

பெ.பச்சையப்பன், கம்பம்.

கொடநாடு வழக்கில் அ.தி.மு.க தலைவர்கள் ஏன் பதறுகிறார்கள்?

பேஸ்மென்ட் வீக்கா இருந்தா பில்டிங் ஆடத்தானே செய்யும்?

குரு சண்முகம், கோத்தகிரி.

உதயநிதியின் முதல் சட்டமன்ற உரைக்கு எத்தனை மார்க் கொடுப்பீர்கள் கழுகாரே?

அரசியல்வாதிகளுக்கு மார்க்கெல்லாம் நீங்கதான் கொடுக்கணும்... இப்ப சொல்லுங்க... எத்தனை மார்க் கொடுப்பீங்க?

கழுகார் பதில்கள்

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.

“ஏழரை ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பாருங்கள். பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த நிலைமை மாறியிருக்க வேண்டும்” என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறாரே?

சர்வதேச அளவில் ஒரு நாட்டின் நிதி நிலைமை, கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, தொழில் ஆகிய ஐந்தை வைத்தே ஒரு நாட்டின் வளர்ச்சி நிர்ணயிக்கப்படுகிறது. நாம் இவற்றில் எங்கிருக்கிறோம் என்பதை நீங்களே கணித்துக்கொள்ளுங்கள்!

சீனிவாசன், கண்டனூர், சிவகங்கை (மா).

``பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை ஏற்றத்துக்கு காங்கிரஸ்தான் காரணம்’’ என்று இன்றும் பா.ஜ.க அமைச்சர்கள் பேசுகிறார்களே?

வாஜ்பாய் காலத்தில் வாங்கிய கடன் பத்திரத்துக்கு வட்டி கட்டியதாக காங்கிரஸ் அரசு சொன்னது. காங்கிரஸ் காலத்தில் வாங்கிய கடன் பத்திரத்துக்கு வட்டி கட்டுவதாக பா.ஜக அரசு சொல்கிறது. மொத்தத்தில் மக்களுக்கான பெட்ரோல் விலையைக் குறைக்கும் எண்ணம் யாருக்கும் இல்லை என்பது தெரிகிறது.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

ஓர் அரசியல்வாதியின் எதிர்காலம் யார் கையில்... கட்சியின் தலைவர் கையிலா, மக்கள் கையிலா?

கட்சித் தலைவரின் எதிர்காலமே மக்கள் கையில்தான் இருக்கிறது!

கழுகார் பதில்கள்

சுகன்யா, சென்னை-110.

``டிஜிட்டல் பட்ஜெட் அல்ல, டிமிக்கி பட்ஜெட்’’ என்றிருக்கிறாரே ஜெயக்குமார்?

இந்த எதுகை மோனைக்கு ஒண்ணும் குறைவில்லை... போங்க!

ஹரிஹரன், திருவல்லிக்கேணி.

எதிரியின் பலவீனத்தை அறிந்துகொள்வது எவ்வளவு முக்கியமானது?

ஓர் ஒற்றை அம்பு, ஒரு பெரிய கப்பலை முறியடித்ததாக ஒரு கதை உண்டு. மரத்தால் செய்யப்பட்டிருந்த அந்தக் கப்பலின், எந்தப் பகுதி பலவீனமாக இருக்கிறது என்பதை அறிந்த வில்லாளன் ஒருவன், குறிபார்த்து அந்தப் பகுதியில் அம்பை எய்து துளையை ஏற்படுத்தினான். நீர் அந்தக் கப்பலுக்குள் செல்ல, கப்பல் கடலுக்குள் மூழ்கியது. தன் கிராமத்தைக் கைப்பற்றும் நோக்கத்தில் ஆக்கிரமிப்பாளர்களுடன் வந்த அந்தக் கப்பலை, அந்த வில்லாளன் முறியடித்தான். பாலோ கொயலோ, `வில்லாளன்’ நூலில் இந்தக் கதையைக் குறிப்பிடுகிறார்.

எதிராளியின் பலவீனத்தை அறிந்துவைத்துக்கொள்வது ஆபத்தின்போது நமக்கு நிச்சயம் உதவும்!

கழுகார் பதில்கள்

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism