Published:Updated:

கழுகார் பதில்கள்

நாகசாகி
பிரீமியம் ஸ்டோரி
நாகசாகி

பல இடங்களில் பணம் தண்ணீராகச் செலவழிக்கப் பட்டிருப்பதைப் பார்க்கும்போது, கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது

கழுகார் பதில்கள்

பல இடங்களில் பணம் தண்ணீராகச் செலவழிக்கப் பட்டிருப்பதைப் பார்க்கும்போது, கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது

Published:Updated:
நாகசாகி
பிரீமியம் ஸ்டோரி
நாகசாகி

கௌசிக் சௌந்தர், அரியலூர்.

போர் என்றதும் கழுகாரின் நினைவுக்கு வரும் புகைப்படம்?

மனதை உலுக்கும் அப்படியான புகைப்படங்கள் நிறைய உண்டு. அந்தக் குழந்தைக்கு 10 வயதிருக்கும். தோளில் சுமக்கும் பையில் தலைதொங்கக் கிடப்பது அவனின் இறந்துவிட்ட தம்பி. 1945, ஆகஸ்ட் 9-ல், நாகசாகியில் குண்டுமழை பொழிந்து நகரமே அழித்தொழிக்கப்பட்ட சில தினங்களில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. பிணங்களை தகனம் செய்யும் இடத்தில், அந்தச் சிறுவன் காத்திருந்தபோது பிரபல புகைப்படக் கலைஞர் Joe O’Donnell எடுத்த புகைப்படம். “தகனம் செய்பவர் ‘உன் மூட்டையைக் கொடு’ என்றபோது, அழுகையை அடக்கிக்கொண்டு அவன் சொன்னான்: இது மூட்டை அல்ல. என் தம்பி!’ அழுகையைக் கட்டுப்படுத்த உதட்டைக் கடித்துக்கொண்டிருந்ததில் அவன் உதட்டில் ரத்தம் வடிந்துகொண்டிருந்தது” என்று பதிவுசெய்திருக்கிறார் Joe O’Donnell.

இன்றும் ஜப்பானில் நம்பிக்கையின் சின்னமாக பலரது வீடுகளில், `The standing boy of Nagasaki’ என்றழைக்கப்படும் இந்தப் புகைப்படத்தைப் பார்க்கலாம். போர் என்பது யார் யாருக்கோ அரசியல். மக்களுக்கோ, வாழ்க்கையையே புரட்டிப்போடும் அர்த்தமற்ற ஒரு செயல்!

கழுகார் பதில்கள்

த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்.

அரசியலில் ரகசியம் காக்கப்படவேண்டியது எது?

உங்கள் வெற்றிக்கான வியூகம் என்ன என்பதும், எதிரிகளின் பலவீனத்தை உங்களுக்கு யார் சொன்னார்கள் என்பதும்!

@பாண்டி.

தேர்தலில் ஒரு கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற பின்னர், சிலர் உடனடியாக ஆளுங்கட்சிக்குத் தாவிவிடுகிறார்கள். வாக்களித்த மக்களை ஏமாற்றுகிறோம் என்று குற்ற உணர்வு இருக்காதா?

குற்ற உணர்வா... அரசியலிலா? ஹா ஹா ஹா...

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

உ.பி தேர்தல் முடிந்த பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடும் என்று கூறுவது உண்மையா?

இதற்கு முந்தைய ‘வரலாறுகளை’ கூட்டிக் கழித்துப் பார்த்தால், உங்கள் கேள்விக்கு `ஆமாம்’ என்றுதான் பதில் வருகிறது!

சுகன்யா, சென்னை.

இன்றைய அரசியலில், எதையும் தாங்கும் இதயம் யாருக்கு இருக்கிறது?

அனைத்தையும் தாங்கிக்கொண்டு, வலிக்காத மாதிரியே நடித்துக்கொண்டிருக்கும் மக்களாகிய நமக்குத்தான்!

ஸ்டீபன், திருவான்மியூர்.

தமிழக அரசியலில் அ.தி.மு.க-வின் இன்றைய அத்தியாவசியமான தேவை, ஆளுமைமிக்க, ‘Face Value’ கொண்ட ஒற்றைத் தலைமை. கட்சியில் அப்படி பலமிக்க தலைவராக உங்களால் யாரையாவது அடையாளப்படுத்த முடியுமா?

‘கடல்லயே இல்லியாம்’ என்று ஒரு காமெடி உண்டே, அதைத்தான் அ.தி.மு.க முகாமிலேயே சொல்கிறார்கள்!

சண்முகம், கிருஷ்ணகிரி.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த உங்களது மனநிலை?

பல இடங்களில் பணம் தண்ணீராகச் செலவழிக்கப் பட்டிருப்பதைப் பார்க்கும்போது, கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. வென்றவர்கள் அதை இரட்டிப்பாக அள்ளுவதில் ஆர்வம் காட்டாமல், மக்கள்நலனில் அக்கறைகொள்ள வேண்டும்!

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்

மலர்விழி, ஈரோடு.

உக்ரைன் சென்று மருத்துவம் படிக்கவேண்டிய அவசியம் என்ன?

இதற்கு நாம் பதில் சொல்வதைவிட, உக்ரைன் போரில் கொல்லப்பட்ட கர்நாடக மாணவரின் தந்தையின் பதில் பொருத்தமாக இருக்கும். “இந்தியாவில் மருத்துவம் படிப்பதற்காகத் தனியார் கல்லூரிகளில், ஆண்டுக்கு இரண்டு கோடி ரூபாய் வரை கேட்கிறார்கள். நடுத்தர வர்க்கத்தினருக்கு அந்தத் தொகை கனவிலும் கட்ட முடியாத ஒன்று. உக்ரைனில் ஆண்டுக்கு 5 முதல் 6 லட்சம் ரூபாய் வரைதான் செலவாகிறது” என்றிருக்கிறார் அவர். நீட் போன்ற தேர்வுக் குழப்பங்கள் ஒரு புறமென்றால், முழுக்க முழுக்கக் கல்வி, வியாபாரமாகிவிட்ட அவலச் சூழல்தான் மாணவர்கள் உக்ரைன் போன்ற வெளிநாடுகளுக்குச் செல்ல முக்கியக் காரணம்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!