Published:Updated:

கழுகார் பதில்கள்

என்.சங்கரய்யா
பிரீமியம் ஸ்டோரி
என்.சங்கரய்யா

ஒருநாள் தனக்கு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைச் சரிசெய்ய நினைத்துச் சிந்திக்க ஆரம்பித்தவர், உலகுக்கே விதிமுறைகளை வகுத்துத் தந்துவிட்டார்!

கழுகார் பதில்கள்

ஒருநாள் தனக்கு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைச் சரிசெய்ய நினைத்துச் சிந்திக்க ஆரம்பித்தவர், உலகுக்கே விதிமுறைகளை வகுத்துத் தந்துவிட்டார்!

Published:Updated:
என்.சங்கரய்யா
பிரீமியம் ஸ்டோரி
என்.சங்கரய்யா

தமிழ், திருவல்லிக்கேணி.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய அளவில் பா.ஜ.க-வுக்கு எதிராக அமையும் கூட்டணிக்கு காங்கிரஸ்தான் தலைமை தாங்குமா?

கூட்டணிக்குத் தலைமை தாங்கறதெல்லாம் இருக்கட்டும்... மொதல்ல காங்கிரஸ் கட்சிக்கு ஒரு நிரந்தரத் தலைவரை முடிவு பண்ணட்டும்!

திருப்பூர். அர்ஜுனன்.ஜி, அவிநாசி.

இரண்டு பேர், இரண்டு பேரைச் சந்திச்சா என்னங்க நடக்கும்?

என்ன நடக்கும்... அவங்க மிரட்ட, இவங்க கெஞ்ச... அப்படின்னு நேரம் போயிருக்கும்!

கழுகார் பதில்கள்

பெ.பச்சையப்பன், கம்பம்.

‘தகைசால் தமிழர்’ விருதுபெற்ற என்.சங்கரய்யா அவர்கள், விருதுக்கு வழங்கப்படும் 10 லட்சம் ரூபாயை கொரோனா நிதியாக வழங்கியதைப் பற்றி..?

அந்த விருதுக்கு மிகத் தகுதியானவர் என நிரூபித்ததோடு,

‘பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்

நயனுடை யான்கண் படின்’

என்ற குறளையும் நினைவுபடுத்துகிறார் சங்கரய்யா!

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

எடியூரப்பா, பசவராஜ் பொம்மை என்ன வித்தியாசம் காண்கிறீர்?

அதான் பேர்லயே இருக்கே!

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

‘சட்டசபைத் தேர்தலில் என்னைத் தோற்கடிக்க தி.மு.க நிர்வாகிகள் உள்ளடி வேலை செய்தனர். ஆனால், கடவுள் அருளால், கடைசி நேரத்தில் தபால் ஓட்டுகளில்தான் நான் வெற்றிபெற்றேன்’ என்று துரைமுருகன் நெகிழ்ந்திருக்கிறாரே?

எப்போதும் தொழிலதிபர்களிடம் காட்டும் பரிவை, அவ்வப்போது தொண்டர்களிடமும் காட்டியிருந்தால் இன்று இப்படிப் புலம்பவேண்டிய அவசியம் இருந்திருக்காது!

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்

ந.அய்யப்பசாமி, தேவாரம், தேனி மாவட்டம்.

டெல்லியில் அமித் ஷாவுடன் அரசியல் பேசவில்லை என்கிறாரே ஓ.பி.எஸ்... வேறு என்ன பேசியிருப்பார்?

கரெக்டாதான் சொல்லியிருக்கார்... இவங்க எங்க பேசியிருக்கப் போறாங்க... அவங்க பேசறதைக் கேட்டுட்டு வந்திருப்பாங்க!

பி.சிவகுமார், கோவை.

எடப்பாடியும் பன்னீரும் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஒற்றுமையாக இருப்பதுபோல் நடிப்பார்கள்?

தொண்டர்கள் விழித்துக்கொள்ளும் வரை!

கிடையூர் மாணிக்கம், சங்ககிரி (சேலம் மாவட்டம்).

மூன்று மாதங்களுக்குள்ளாகவே, `தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை’ எனக் கூறி அ.தி.மு.க போராட்டம் நடத்துகிறதே?

அவங்க ரெய்டு ஆரம்பிச்சா, இவங்க ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கறாங்க. நாமதான் நடுவுல பாவம்!

மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி, மதுரை.

சசிகலாவும் வர வர சீமான்போலப் பேச ஆரம்பித்துவிட்டாரே?

இவங்க உருட்டுற உருட்டுக்கெல்லாம் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் உயிர்பெற்றுவந்து மறுப்பு சொல்ல மாட்டாங்க என்கிற தைரியம்தான்!

கழுகார் பதில்கள்

விஷ்ணுவரதன், ராயப்பேட்டை.

சுயநலம், பொதுநலமாவது எப்போது?

`Father of Traffic Regulation’ என்று அழைக்கப்படுபவர், அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் பெல்ப்ஸ் ஈனோ. 1867-ல் குதிரையில் அவர் போய்க்கொண்டிருக்கும்போது, சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. `கொஞ்சம் விதிமுறைகளைக் கடைப்பிடித்தால் இந்த நெரிசலைத் தவிர்க்கலாமே...’ என்று யோசித்தார். 1899-ல் தான் செய்துகொண்டிருந்த ரியல் எஸ்டேட் பணிகளை விட்டுவிட்டு, முழுமையாகச் சாலை விதிகளை உருவாக்க ஆரம்பித்தார். சாலைகளில் பாதசாரிகள் கடக்க, வாகனங்கள் திரும்ப என்று சாலைகளில் இருக்கும் குறியீடுகள், சிக்னல்கள், வாகனங்கள் ஒருபுறமாக மட்டும் செல்லுதல், வாகனங்களின் வேகம் என்று பலவும் ஈனோ எழுதிய ‘Rules of the Road’ என்பதில்தான் ஆரம்பித்தது. இத்தனையும் செய்த ஈனோவுக்குக் கடைசிவரை எந்த வாகனத்தையும் ஓட்டத் தெரியாது; ஓட்டியதும் இல்லை!

ஒருநாள் தனக்கு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைச் சரிசெய்ய நினைத்துச் சிந்திக்க ஆரம்பித்தவர், உலகுக்கே விதிமுறைகளை வகுத்துத் தந்துவிட்டார்! இப்படித்தான் பல சமயங்களில் சுயநலம் பொதுநலமாகிறது!

பெ.பச்சையப்பன், கம்பம்.

‘‘தமிழகத்தில் நூற்றுக்கு 95 சதவிகிதம் பேர் செல்போன் வைத்திருந்த காரணத்தால்தான் நாங்கள் கடந்த ஆட்சியில் இலவச செல்போன் திட்டத்தைச் செயல்படுத்தவில்லை’’ என்கிறாரே திண்டுக்கல் சீனிவாசன்?

மகாபிரபு வாங்க வாங்க... மறுபடியும் வந்துட்டீங்களா... வாங்க வாங்க!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!