ப.த.தங்கவேலு, பண்ருட்டி.
போலீஸாருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை மற்றும் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து..?
உங்களைப்போலத்தான் நானும் அரசு அறிவிப்பு வெளியானவுடனே, எனக்குத் தெரிந்த காவலர் ஒருவருக்கு வாழ்த்து சொன்னேன். ‘‘அட போங்க பாஸ்... இதுவரைக்கும் பணி நேரம் சம்பந்தமா எங்க டிபார்ட்மென்டுக்கு அறிவிச்ச எது நடைமுறைக்கு வந்திருக்கு? இதை நம்பி நாங்க போய் லீவு கேட்டா, ஒரு டூட்டிக்கு நாலு டூட்டி பார்க்க வேண்டியிருக்கும். இது எங்க சாபக்கேடு’’ என்று அவர் சொன்ன பதிலில் தெரிந்த விரக்தி, நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த அரசாவது, வெறும் அறிவிப்போடு நின்றுவிடாமல், இதைச் செயல்படுத்தி காவலர்களிடமிருக்கும் அவநம்பிக்கையைப் போக்க வேண்டும்!
செ.அ.ஷாதலி, கோனுழாம்பள்ளம்.
முந்தைய அமைச்சர்களை ‘வெச்சு செஞ்ச’ மீம் கிரியேட்டர்கள், தற்போதைய அமைச்சர்களைச் சீண்டுவதில்லையே?
கொஞ்சம் பொறுங்க... இப்பதானே பூத்திருக்கு... கத்திரிக்கா காய்ச்சா கடைத்தெருவுக்கு வந்துரும்!
இல.கண்ணன், நங்கவள்ளி.
“மேக்கேதாட்டு விஷயத்தில் பா.ஜ.க இரட்டை வேடம் போடுகிறது. இந்தியாவிலேயே அதிகம் இரட்டை வேடம் போட்டு நடித்தவன் நான். எனவே இரட்டை வேடம் போடுபவர்களைச் சட்டென்று கண்டுபிடித்துவிடுவேன்” என்று கமல்ஹாசன் கூறியிருப்பது பற்றி..?
கண்டுபிடிக்கறதோட நிறுத்தாம ஆக்ஷன்லயும் இறங்கினா நல்லாருக்கும்!
டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.
``2026 தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ.க 150 சீட் பிடிக்கும்’’ என்கிறாரே பா.ஜ.க புதிய தலைவர் அண்ணாமலை?
அண்ணாமலைதானே... பொறுங்க! ஏற்கெனவே “என்னுடைய கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது”னு சிலதுக்கு விளக்கம் கொடுத்திருக்காரு. இதுக்கும் அப்படி எதுவும் வருமானு பார்ப்போம்!

டி.ஜே.தனபாலன், நஞ்சுண்டாபுரம்.
இப்போது ஜெயலலிதா உயிர்பெற்று வந்தால் அ.தி.மு.க-வில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்த்துவார்?
மாற்றங்கள் இருக்கட்டும்... இப்ப ஆடறவங்களைப் பார்த்து, இவங்களை நாம அடக்கிவெச்சுருந்தது சரிதான்னு நெனைப்பாங்கங்கறது மட்டும் நெசம்!

பாண்டிமுத்து, நெல்லை.
‘இந்த வயசுல இதை ஆரம்பிக்கணுமா?’ என்று நினைப்பவர்களுக்கு உங்கள் அறிவுரை?
105 வயதில், ஜூலை 31 அன்று இயற்கை எய்தியிருக்கிறார் இந்தியாவின் மான் கவுர் (Mann Kaur) என்ற பெண்மணி. 105 வயது வரை வாழ்ந்ததற்காக மட்டும் இவர் கொண்டாடப்படவில்லை. தனது 93 வயதில் தடகள ஆட்டத்தின்பால் ஈர்ப்புகொண்டு, தன்னுடைய 79 வயது மகனிடம் பயிற்சி பெற்று தடகள வீரராக உருமாறினார். அதன் பிறகு, பல நாடுகளில் நடந்த போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு பெற்றிருக்கிறார்.
2019-ல் ஆக்லாந்தில் நடந்த போட்டியில் 100 மீட்டர்களை 74 நொடிகளில் கடந்து தங்கம் வென்றபோது அவர் வயது 103!
வயசுல என்ன இருக்கு... வாழ நினைத்தால் வாழலாம்!
செந்தில் பழனியப்பன், திருவாரூர்.
சமீபத்தில் ரசித்த வாசகம்?
‘‘திருமணம் என்றாலும் சரி... ஒலிம்பிக் என்றாலும் சரி... பெண்கள்தான் தங்கத்தைக் கொண்டுவர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்!”

அ.யாழினி பர்வதம், சென்னை-78.
மிக பிரமாண்டமாகப் படமெடுக்கும் எஸ்.எஸ்.ராஜமௌலி, இசைக்கு மட்டும் ஏ.ஆர்.ரஹ்மானையோ இளையராஜாவையோ நாடாமல் மரகதமணியைப் பயன்படுத்துவது ஏன்?
அந்தக் கூட்டணியின் வெற்றிதான் காரணம்! இன்றைக்கு அல்ல... தனது முதல் படமான `ஸ்டூடன்ட் நம்பர் 1’-லிருந்து அவர் படங்கள் எல்லாவற்றுக்கும் எம்.எம்.கீரவாணி என்கிற மரகதமணிதான் இசை. பிரமாண்டமாகத் தயாராகிக்கொண்டிருக்கும் `RRR’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மானைப் போடச் சொல்லி அழுத்தங்கள் வந்தபோதும் இசையமைப்பாளரை அவர் மாற்றவில்லை.
அரசியலில் மட்டுமல்ல... சினிமாவிலும் ஜெயிக்கிற கூட்டணியைக் கலைக்க யாரும் விரும்ப மாட்டார்கள்!
கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!