Published:Updated:

கழுகார் பதில்கள்

அரசாங்கம் கொரோனா இரண்டாவது அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததன் விளைவுதான்

பிரீமியம் ஸ்டோரி

@குரு சண்முகசுந்தரம்

சர்வதேசப் பத்திரிகைகள் இந்தியாவை எப்படிப் பார்க்கின்றன?

கழுகார் பதில்கள்

@P.அசோகன், கொளப்பலூர் (அஞ்சல்).

அரசியல் கட்சியைத் திறம்பட நடத்துவதிலுள்ள பிரதான பிரச்னைகள் என்னென்ன?

சொந்தக் கட்சி எம்.எல்.ஏ-க்கள் விலைபோகாம பார்த்துக்கணும்... அடுத்த கட்சிலயிருந்து எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கணும்... கட்சிக்குள்ள இருக்குற கோஷ்டிகளைச் சமாளிக்கணும்... எவ்ளோ இருக்கு!

வினோத்குமார், கோவை.

நோய்த்தொற்றால் நாடே அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறதே... ஆட்சியாளர்கள் யாரும் இதை எண்ணி வருந்துவதில்லையா?

மருத்துவமனை ஒன்றில் ஆக்ஸிஜன் சப்ளை குறைவால் ஆறு பேர் இறந்துவிட, சுகாதாரத்துறை அமைச்சரைப் பதவி விலகச் சொல்லிவிட்டார் பிரதமர். பிரதமரின் அறிவிப்பு வந்த விநாடியே சுகாதாரத்துறை அமைச்சரும் பதவி விலகிவிட்டார். ஆங்... சொல்ல மறந்துட்டேன். இது நடந்தது ஜோர்டானில்!

கர்ணன், கோவை.

அரசியல்வாதிகள் தவறிழைக்கும்போது படபடப்பாவார்களா?

அரசியல்ல அப்ரன்டீஸா இருக்கற காலத்துலேயே படபடப்பெல்லாம் காணாமப் போயிடும்.

@வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

கொரோனா பரவல் இரண்டாவது அலை வந்ததுபோல தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ரஜினியின் அரசியல் பிரவேசம் இரண்டாவது அலை வருமா?

இருபத்து அஞ்சு வருஷமா முதல் அலையே வரலையே... இதுல ரெண்டாவது அலை வேறயா!

ஆர்.துரைசாமி, கணபதிபுதூர்.

பிரதமர் மோடி ஆட்சியில் அமர்ந்த பிறகு எத்தனை முறை பத்திரிகையாளர் கூட்டத்தை நடத்தியுள்ளார்?

பிரதமராகி முதன்முறையாக நாடாளுமன்றத்துக்குள் நுழையும்போது, வாயிலில் நின்றுகொண்டிருந்த பத்திரிகையாளர்களிடம் பேசியதோடு சரி. அதற்குப் பிறகு நடந்த ஒரேயொரு பிரஸ் மீட்டில் அமித் ஷாவைப் பேசவிட்டு, இவர் பேசாமலேயே அமர்ந்திருந்தார். அதோடு முடிந்தது!

@டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

சாதி, மதம், இனம் கடந்து வேட்பாளரை எப்போது மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்?

சாதி, மதம், இனம் கடந்து தன்னலமற்ற தலைவர்கள் களத்தில் வேட்பாளராக இருக்கும்போது மக்களும் அவ்வாறே தேர்வுசெய்வார்கள்!

@சுகன்யா

பணம், பதவி, புகழ் இந்த மூன்றையும் ஒன்றாகவைத்து எது வேண்டுமென்று ஓர் அரசியல்வாதியிடம் கேட்டால் அவர் கேட்பது எதை?

ஒண்ணா... மூணையும் ஒரே பேக்கேஜாதான் கேட்பாங்க!

சரவண வேல், காரைக்குடி.

ஆக்ஸிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி தட்டுப்பாடு என்று தவிக்கிறதே நாடு... இரண்டாம் அலைக்காக முன்னேற்பாடுகள் செய்யாமல் மோடி என்னதான் செய்துகொண்டிருந்தார்?

பொதுக்கூட்டம், பேரணி என்று மேற்கு வங்கம், அஸ்ஸாம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் 23 கூட்டங்களைக் கூட்டினார். இரண்டு முறை மருத்துவமனைக்கும் சென்றாரே... அவருக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்ள!

கழுகார் பதில்கள்

திருநாவுக்கரசு, கருவம்பாளையம்.

`சமூக ஊடகங்களில் கொரோனா குறித்துப் பீதியைப் பரப்பும் பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உ.பி அரசு சொல்வது சரிதானே?

அது சரிதான். ஆனால் ஒரு சம்பவம். உ.பி அமேதி தொகுதியைச் சேர்ந்த சஷாங்க் என்ற இளைஞன் தன் தாத்தாவுக்கு ஆக்ஸிஜன் தேவை என்று ‘தி ஒயர்’ பத்திரிகையின் சீனியர் எடிட்டருக்கு ட்விட்டர் டைரக்ட் மெசேஜில் உதவி கோருகிறார். அந்த எடிட்டரும் அதை ட்வீட் செய்து, தொகுதியின் எம்.பி-யான ஸ்மிருதி இரானிக்கு அதை டேக் செய்கிறார். பிறகு ஸ்மிருதி இரானி அந்த இளைஞனின் எண்ணைக் குறிப்பிட்டு, `யாரேனும் உதவுங்கள்’ என்று ட்வீட் செய்கிறார். கொஞ்ச நேரம் கழித்து ‘சஷாங்க் போனை எடுக்கவில்லை’ என்று மீண்டும் ட்வீட் செய்துவிட்டு, ‘பலமுறை அழைத்தும் எடுக்கவில்லை’ என்றும் பதிவு செய்து அமேதி காவல்துறையை டேக் செய்கிறார் ஸ்மிருதி இரானி. சிறிது நேரத்தில் சஷாங்க்கின் தாத்தா இறந்துவிட்டார் என்று செய்தி வருகிறது. விசாரித்த காவல்துறையோ, ‘‘ஆக்ஸிஜன் தேவைப்பட்டிருக்கிறது. ஆனால், கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஆக்ஸிஜன் தேவைப்படவில்லை. தவறான தகவல் அளித்து பீதியை ஏற்படுத்தியிருக்கிறார்’’ என்று குற்றம்சாட்டி சஷாங்க்கின் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. இத்தனைக்கும் சஷாங்க் `கொரோனா’ என்று குறிப்பிடவே இல்லை.

உ.பி அரசின் இந்த நடவடிக்கை சரியா?

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு