Published:Updated:

கழுகார் பதில்கள்

சசிகலா, மோடி
பிரீமியம் ஸ்டோரி
சசிகலா, மோடி

பஞ்சாப்பிலுள்ள காளி பென் நதி, புனிதநதியாக அம்மாநில மக்களால் கொண்டாடப்பட்டுவருகிறது.

கழுகார் பதில்கள்

பஞ்சாப்பிலுள்ள காளி பென் நதி, புனிதநதியாக அம்மாநில மக்களால் கொண்டாடப்பட்டுவருகிறது.

Published:Updated:
சசிகலா, மோடி
பிரீமியம் ஸ்டோரி
சசிகலா, மோடி

சோ.பூவேந்த அரசு, சின்னதாராபுரம்.

அ.தி.மு.க சதுரங்கத்தில் காய் நகர்த்துவது சசிகலாவா, மோடியா?

அங்கே நடக்கிற அடிதடியில் காய்களெல்லாம் தன்பாட்டுக்கு நகர்கின்றன. அதை நகர்த்த ஆள்கள் வேறு வேண்டுமா?!

கழுகார் பதில்கள்

கே.விஸ்வநாதன், கோயமுத்தூர்.

இலைகள் துளிர்க்க என்ன உரம் போட வேண்டும்?

உரம்கூட அப்புறம் போட்டுக்கலாம். முதலில் ஆடு மேய்ந்துவிடாமல் இருக்க வேலி போட வேண்டும்.

மு.நடராஜன், திருப்பூர்.

சர்க்கஸில் விறுவிறுப்பாகக் காட்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது இடையே பபூன்கள் காமெடி செய்வார்களில்லையா... இன்றைய அரசியலில் யாருடைய நடவடிக்கை அப்படி இருக்கிறது?

ஒருத்தர் ரெண்டு பேருன்னா சொல்லலாம். பெருங்கூட்டமே இருந்தா?!

ந.பேச்சியம்மாள், புதுச்சத்திரம்.

அரசியலில் சாதியும் பணமும்தான் முன்னிலை வகிக்கின்றன என்பது வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறதே?

உண்மைதான். எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்று தேர்ந்தெடுக்கிற சாய்ஸ் மட்டும்தான் மக்களுக்கு இருக்கிறது.

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

இன்றைய அரசியல் சூழலில் ராகுல் காந்திக்கு என்ன கூறலாம்?

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று!

இல.கண்ணன். நங்கவள்ளி.

புனிதநதி நீரைக் குடித்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வயிற்றுவலியால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பது பற்றி?

பஞ்சாப்பிலுள்ள காளி பென் நதி, புனிதநதியாக அம்மாநில மக்களால் கொண்டாடப்பட்டுவருகிறது. அவ்வப்போது அந்த நதியைச் சுத்தப்படுத்த லட்சக்கணக்கில் நிதி மாநில அரசால் ஒதுக்கப்பட்டுவந்தது. சாமியார்களுடன் அந்த நதியைப் பார்வையிடச் சென்ற பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், அதிலிருந்து ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்துக் குடித்திருக்கிறார். சிறிது நேரத்திலேயே வயிற்றுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில் நாம் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், அவருடன் சென்ற சாமியார்கள் யாருமே அந்தச் செயலைச் செய்யவில்லை என்பதைத்தான்.

த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்.

அ.தி.மு.க-வின் தொடர் பலவீனம், யாருக்குத் தொடர் லாபம்?

மூன்றெழுத்துக் கட்சிக்குத்தான்!

கழுகார் பதில்கள்

பாலசுப்ரமணியன், திருச்செந்தூர்.

இணையத்தில் நல்ல விஷயங்களும் நடக்கின்றனவா?

ஏன் இல்லை... இந்த வாரம் நடந்த ஒன்று. அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண்மணி தன்னுடைய தாத்தாவின் இறுதிச்சடங்குகளுக்குப் பணம் இல்லாத காரணத்தால் தன்னிடமுள்ள ஷூ, கால்பந்து உடைகளை ஆன்லைனில் விற்கவிருக்கிறேன் எனப் பதிவிட்டார். அவை, பிரபல விளையாட்டுப் பொருள்கள் விற்கும் நிறுவனம், அமெரிக்கக் கால்பந்து விளையாட்டு வீரரான JJ Watt பெயரில் வெளியிட்ட உடை, ஷு என்பதால் நல்ல விலைக்குப் போகும் என்று அவற்றை விற்க முனைந்திருக்கிறார். பலரும் அவருக்கு உதவ முன்வந்த நிலையில், அந்தப் பிரபல கால்பந்து வீரரே அந்தப் பெண்ணிடம் “அவற்றை விற்காதீர்கள். என்ன செலவாகுமோ நான் பார்த்துக்கொள்கிறேன். உங்கள் இழப்புக்கு வருத்தங்கள்” என்று அந்தப் பெண்ணுக்கு பதிலிட்டிருக்கிறார்.

திலகர் ஈஸ்வரன், சேலம்.

‘நான் பழைய பழனிசாமி இல்லை’ என்கிறாரே

இ.பி.எஸ். பழைய பழனி

சாமிக்கும், புதிய பழனி

சாமிக்கும் என்ன வேறுபாடு?

பழையவர் டபுள்ஸ் ஓட்டினார். புதியவர் சிங்கிளாகவே டிரைவ் செய்கிறார். விபத்துகள் ஏதும் நடக்காமலிருந்தால் சரி.

கழுகார் பதில்கள்

பிரதீபா ஈஸ்வரன், சேலம்

“மனக்கசப்புகள் வரும்போது காட்டிக் கொடுப்பவரைவிட, ரகசியங்களைக் காப்பவரே உண்மையான அரசியல்வாதி.

ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து பணியாற்றிய போது நடந்த சம்பவம் ஒன்றைக்கூட வெளியில் சொல்ல மாட்டேன்” என்கிறாரே கே.பி.முனுசாமி?

“நானும் சொல்ல மாட்டேன்; நீங்களும் எதுவும் சொல்லி ராதீங்க”னு சொல்றார்போல.

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

அரசியல் என்பது வெளுத்துக்கட்டுவதா? வாங்கிக் கட்டுவதா?

முதலாவது ஆளும்போது; இரண்டாவது ஆட்சியை இழந்த பிறகு.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!