அரசியல்
அலசல்
Published:Updated:

கழுகார் பதில்கள்

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி
பிரீமியம் ஸ்டோரி
News
செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி

மாமல்லபுரத்தில் நடந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடர்தான், இதுவரை நடந்ததிலேயே சிறந்த தொடர்” என்று சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் அர்காடி துவார்கோவிச் சொல்லியிருக்கிறார்.

நடராஜன், கோவை.

பயத்தைப் போக்குவது எப்படி?

கடும் கோடைக்காலம். நாய் ஒன்று தண்ணீர் குடிக்க ஆற்றுக்குச் சென்றது. நீரில் தன் உருவத்தைப் பார்த்து பயந்தது. அதைப் பார்த்துக் குரைத்தபடி பின்வாங்கியது. இரண்டு மூன்று முறை இது நடந்தது. திடீரென்று அந்த நாய், ஆவேசமாக நீரில் தெரியும் தன் பிம்பத்தின்மீது குதித்தது. குதித்ததும் பிம்பம் கலைந்துபோனது. நீரைக் குடித்தபடி ஆற்றில் ஹாயாக நீந்தி விளையாடியது அந்த நாய். பயத்தைப் போக்கணும்னா.. இறங்கிப் பார்த்துடணும் பாஸ்!

ஸி.சம்பத்குமார், சென்னை-34.

குஜராத் மாநிலத்தின் மோர்பி மாவட்ட கிராமப் பள்ளி ஒன்றில், தலித் பெண் சமைக்கிறார் என்று ஒரு மாதத்துக்கும் மேலாக மதிய உணவைத் தவிர்த்துவருகிறார்களே மாணவ, மாணவியர்கள்?

சமூகநீதியிலும், சாதி ஒழிப்பிலும் ஓரளவு முன்னேறிய மாநிலமான தமிழ்நாட்டிலேயே “நான் பட்டியலினப் பெண் தலைவர், தேசியக்கொடியை நான் ஏற்றுவதற்குத் தடைகள் வரலாம். இந்த 75-வது சுதந்திர தினத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் கொடியேற்ற வாய்ப்பளித்து, தக்க பாதுகாப்பு வழங்கிட பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று டி.எஸ்.பி-க்குக் கடிதம் எழுதியிருக்கிறாரே கள்ளக்குறிச்சி, எடுத்தவாய்நத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் சுதா வரதராஜ். இன்னும் நாம் போகவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது சம்பத்.

கழுகார் பதில்கள்

தே.மாதவராஜ், இராமநாதபுரம், கோயமுத்தூர்.

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி எப்படி?

“மாமல்லபுரத்தில் நடந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடர்தான், இதுவரை நடந்ததிலேயே சிறந்த தொடர்” என்று சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் அர்காடி துவார்கோவிச் சொல்லியிருக்கிறார். மேலும், “நான்கு மாதங்களில் இதைச் செய்தது அதிசயம்” என்று குறிப்பிட்டிருக்கிறார். அவ்வளவு ஏன், அனைத்துக்கும் மல்லுக்கட்டும் எதிர்க்கட்சிகளே இந்த விஷயத்தில் ஆளுங்கட்சியைப் பாராட்டியிருக்கின்றன. நாமும் பாராட்டுவோம்.

இல.கண்ணன், நங்கவள்ளி.

‘கவர்னருடன் ரஜினிகாந்த் அரசியல் பேசியது தவறு இல்லை’ என்று அண்ணாமலை சொல்கிறாரே?

ஓ... அண்ணாமலையே சொல்லிட்டாரா... அப்ப சரி!

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

‘அ.தி.மு.க பிரச்னைக்கு முக்கியக் காரணம் தி.மு.க-தான்’ என்ற சசிகலா பேச்சு?

‘என் வீட்டு மாமியார் பிரச்னையை எதிர் வீட்ல கல்லெறிஞ்சுதான் தீர்க்கணும்’ என்ற சொலவடைதான் நினைவுக்கு வருகிறது.

மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி, மதுரை.

எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாறு என்பது அந்த எழுத்தாளர்களின் கதைகளைக் காட்டிலும் படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறதே?

உண்மை எப்போதும் புனைவைவிட சுவாரஸ்யமானது. ஆனால், வாழ்க்கை வரலாற்றில் எல்லோரும் முழுக்க முழுக்க உண்மையை மட்டுமே எழுதிவிடுவதில்லை என்பதுதான் அதிலுள்ள மற்றொரு சுவாரஸ்யம்.

மாணிக்கம், திருப்பத்தூர்.

‘சிறந்த வெற்றியாளராக வேண்டுமென்றால், யாரைப் பின்பற்றலாம்?’ என்று கேட்கும் என் நண்பனுக்கு என்ன சொல்வது?

“வெற்றிபெற்ற மனிதர்களைப் பின்பற்றுவதாக எண்ணி, அவர்களாகவே மாறிவிடாதீர்கள். உங்களுக்கென தனித்துவம் இருக்கிறது. அதை மெருகேற்றுவதுதான் உங்கள் வெற்றிக்கான வழி” என்று புரூஸ் லீ சொன்னதை அவருக்கும் சொல்லுங்கள்.

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

அரசியல்வாதிகள் பேசிப் பேசிச் சாதிக்கிறார்களா அல்லது பேசிப் பேசித் தங்கள் வேதனையைத் தீர்த்துக் கொள்கிறார்களா?

இரண்டுமே உண்டு. மூன்றாவதாகவும் ஒன்று இருக்கிறது. பேசிப் பேசி வில்லங்கத்தையும் வேதனையையும் விலை கொடுத்து வாங்குவது!

கழுகார் பதில்கள்

சண்முக சுந்தரம், கோவில்பட்டி.

“தங்களை மையப்படுத்தியே அரசியல் செய்பவர்களால் வெளியிடப்படும் இலவச அறிவிப்புகள், வரி செலுத்துபவர்கள்மீதான சுமையை அதிகரிக்கும்” என்று கூறியிருக்கிறாரே பிரதமர் நரேந்திர மோடி?

இலவசம் என்பது, அத்தியாவசியத் தேவைகளை விலை கொடுத்து வாங்க இயலாதவர்களுக்கு அதை வழங்கும் ஜனநாயக முறை. அதை முற்றிலுமாக விமர்சனத்துக்கு உள்ளாக்க முடியாது. மோடி இதைச் சொன்ன அதேசமயத்தில்தான், உத்தரப்பிரதேச பா.ஜ.க முதல்வர் யோகி ஆதித்யநாத் “வரும் காலங்களில் மாநில அரசுப் பேருந்துகளில் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்குப் பேருந்துப் பயணம் இலவசம்” என்று அறிவித்தார். ‘தங்களை மையப்படுத்தியே அரசியல் செய்பவர்கள்’ என்ற அவரது வார்த்தைக்குள் இந்தியாவிலுள்ள அத்தனை கட்சிகளும் அடங்கும், பா.ஜ.க உட்பட!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!