அரசியல்
Published:Updated:

கழுகார் பதில்கள்

கும்பமேளா திருவிழா
பிரீமியம் ஸ்டோரி
News
கும்பமேளா திருவிழா

உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் நடந்த கும்பமேளா திருவிழாவில், எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் லட்சக்கணக்கில் மக்கள் கங்கை நதிக்கரையில் கூடியதைப் பார்த்தால்...

வண்ணை கணேசன், சென்னை-10.

ஜெயலலிதா நினைவிடத்தில் மீண்டும் தியானம் செய்ய ஓ.பி.எஸ்-ஸுக்கு வாய்ப்புள்ளதா?

பழைய படங்களை, புது ஹீரோவை வைத்து ரீமேக் செய்வதுதான் இப்போது டிரெண்ட் ஆகிவிட்டதே... பன்னீர்செல்வமாக இல்லாமல் வேறொருவர் போய் தியானம் செய்யக்கூட வாய்ப்புகள் உள்ளன. ரெண்டாம் தேதிக்கு மேல் இந்த மாதிரி என்னென்ன கூத்தைப் பாக்கணுமோ?!

சரோஜா பாலசுப்ரமணியன்.

நார்வே பிரதமருக்கு கொரோனா விதிமுறையை மீறியதற்காக ரூ.1,75,000 அபராதம் விதித்திருக்கிறது அந்நாட்டு காவல்துறை. நம் நாட்டில் இது நடக்குமா?

நடக்கும் நடக்கும்... அபராதம் விதித்த ஆபீஸருக்குச் சிறப்பா நடக்கும்!

சீனிவாசன், கண்டனூர், சிவகங்கை (மா).

நடந்து முடிந்த தேர்தல் திருவிழாவில் கதாநாயகன், காமெடியன், வில்லன் வரிசையில் யார் யார்?

தனித்தனியா அப்படி ரோல் பண்றதெல்லாம் அந்தக் காலம் பாஸ்... இப்பதான் எல்லாரும் எல்லா ரோலும் பண்றாங்களே!

@டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

தமிழக தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, பா.ஜ.க-வின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும்?

தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும், இதுவரைக்கும் என்ன பண்ணினாங்களோ அதையேதான் தொடரப்போறாங்க!

கிடையூர் மாணிக்கம், சங்ககிரி.

`மத்திய அரசால் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை’ என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டுகிறதே?

இது, பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொள்ளவோ... அரசியல் செய்யும் நேரமோ இல்லை. எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என்று வித்தியாசம் பாராமல் கொரோனாவை எதிர்கொள்ள மக்களோடு உடன் நிற்க வேண்டிய நேரம்.

@சுகன்யா, சென்னை.

`வாழ்த்த வயதில்லை’ என்று கூறுகிறார்களே இது சரியா?

கவுன்ட்டர் கொடுப்பதில் பெயர்போன நகைச்சுவை நடிகருக்கு, பிறந்தநாள் அன்றைக்கு ஒருவர் போன் செய்திருக்கிறார். “அண்ணே வாழ்த்த வயசில்லை...” என்று அவர் ஆரம்பித்ததுமே நகைச்சுவை நடிகர், “அப்ப வயசுக்கு வந்தப்பறம் போன் பண்ணுப்பா” என்று டொக்கென்று போனை வைத்துவிட்டாராம். வாழ்த்த வயது தேவையில்லை... மனதிருந்தால் போதுமே.

கழுகார் பதில்கள்

@பெ.பச்சையப்பன், கம்பம்.

``கொரோனா தடுப்பூசித் திருவிழா நடத்தப்படும்’’ என்கிறாரே பிரதமர்?

ஒரு திருவிழா போதுமா... உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் நடந்த கும்பமேளா திருவிழாவில், எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் லட்சக்கணக்கில் மக்கள் கங்கை நதிக்கரையில் கூடியதைப் பார்த்தால், வருடம் முழுவதும் தடுப்பூசித் திருவிழா நடத்தினால்கூட போதாதுபோலிருக்கிறது!

கழுகார் பதில்கள்

V.பாலசுப்ரமணியன், மன்னார்குடி.

மத்தியப் பிரதேச அமைச்சர் ஒருவர் கொரோனாவை விரட்ட, சாமி சிலை முன்பு கைதட்டி பூஜை செய்ததை என்னவென்று சொல்வது?

மத்தியப்பிரதேசச் சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் உஷா தாக்கூர் பத்தித்தானே கேட்கறீங்க... பூஜையைவிட, அதை விமான நிலையத்துல நடத்தினதுக்கு அவரின் ஆதரவாளர்கள் சொன்ன காரணம்தான் ஜெர்க் ஆக்குது. “வெளிநாட்டிலிருந்து விமானம் மூலம்தானே கொரோனா வருகிறது... அதை இங்கேயே தடுத்துருவோம்னு நடத்தினோம்” என்கிறார்களாம்!

கழுகார் பதில்கள்

சி.கார்த்திகேயன், சாத்தூர்.

கர்ணனா... மண்டேலாவா?

இரண்டு படங்களுமே இன்றைய தேவைகளைப் பற்றியே பேசியிருக் கின்றன. கொடுக்கும் கர்ணனாக அறியப்பட்டவன், இந்தப் படத்தில் “என் உரிமைகளைக் கொடு” என்று கேட்கும் கர்ணனாக அவதாரம் எடுத்திருக்கிறான். நகைச்சுவை முகம் கொண்ட யோகிபாபு, குணச்சித்திர நடிகராக மிளிர்ந்த மண்டேலாவில் ‘ஒரு ஓட்டு என்னென்ன செய்யும்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

மண்டேலாவிலும் சாதிக்கொடுமை பேசப்பட்டிருக்கிறது. கர்ணனில் அது இன்னும் அழுத்தமாகக் கையாளப் பட்டிருக்கிறது. இரண்டில், கர்ணன் பல வரலாறுகளைத் தன்னகத்தே கொண்டு ஒருபடி முன்னே நிற்கிறது!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை,

சென்னை-600 002. kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!