Published:Updated:

கழுகார் பதில்கள்!

மனசாட்சி என்பது வெளியில் இருப்பதல்ல... அவரவர்களுக்குள்ளேயே இருக்கவேண்டியது பாஸ்!

பிரீமியம் ஸ்டோரி

சோமசுந்தரம், விழுப்புரம்.

``கருத்துக்கணிப்புகளைத் தவிடுபொடியாக்குவோம்’’ என்று ரிசல்ட்டுக்கு முன்பு பேட்டி கொடுத்த ஜெயக்குமார், இப்போது என்ன நினைத்துக்கொண்டிருப்பார்?


`பேட்டி பேட்டியா கொடுத்துட்டிருந்த நேரத்துல ஒழுங்கா மக்கள் பணியைப் பார்த்திருந்தா நாம தவிடுபொடி ஆகியிருக்க மாட்டோம்’ங்கிறதை இப்ப உணர்ந்திருப்பாரு.

கழுகார் பதில்கள்!

ராமசுப்ரமணியன், கணியூர்.

குஷ்பு காங்கிரஸிலேயே இருந்திருந்தால் இப்போது எம்.எல்.ஏ ஆகியிருக்கலாம்தானே?


காங்கிரஸ் என்ன... அதுக்கு முன்ன அவங்க இருந்த தி.மு.க-வுல இருந்திருந்தாக்கூட ஆகியிருக்கலாம்தான். அரசியல்ல பொறுமைதானே முக்கியம்!

கழுகார் பதில்கள்!

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

தி.மு.க-வினர் மாற்றுக் கட்சித் தொண்டர்களோடு நட்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளாரே?

ஒரு புதிய கட்சி, ஆட்சிப் பொறுப் பேற்றதும் ‘ஹனிமூன் பீரியட்’ என்று சொல்லப்படும் முதல் சில மாதங்களில் இப்படி நடப்பது வழக்கம். இதுவே தொடர்ந்து நடந்தால் அதை, `அரசியல் கலாசார மாற்றம்’ என்று சொல்லலாம்.

ம.ரம்யாராகவ், குப்பம்.

கலைஞரின் மனசாட்சியாகத் திகழ்ந்த முரசொலி மாறனைப்போல. மு.க.ஸ்டாலினுக்கும் மனசாட்சியாகத் திகழ்வாரா சபரீசன்?

மனசாட்சி என்பது வெளியில் இருப்பதல்ல... அவரவர்களுக்குள்ளேயே இருக்கவேண்டியது பாஸ்!

அ.யாழினி பர்வதம், சென்னை-78.

மம்தா பானர்ஜி வெற்றி... மு.க.ஸ்டாலின் வெற்றி... இவர்களில் யாரைப் பாராட்டுவீர்கள்?

இருவருமே கடுமையான எதிர்ப்பு பிரசாரத்தை மீறி ஜெயித்தவர்கள். ஆனால் 10 வருடங்கள் ஆட்சிப் பொறுப்பில் இல்லாத கட்சியின் தலைவர், இதுவரை முதல்வர் நாற்காலியில் அமராதவர் என்பதில் ஸ்டாலினின் வெற்றி ஒருபடி முன்னே நிற்கிறது.

கழுகார் பதில்கள்!

பி.மணி, வெள்ளக்கோவில்.

தற்போது உயிரோடு கலைஞர் இருந்திருந்தால் தன்மகன் மு.க.ஸ்டாலின் முதல்வராக ஆனதற்கு எப்படி வாழ்த்தியிருப்பார்?

அவர் இருந்திருந்தால், முதல்வரானதற்காக ஸ்டாலின்தான் அவரை வாழ்த்தியிருப்பார்.

ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்.

டார்ச் லைட்டில் வெளிச்சம் வராமல், குக்கரில் விசில் சத்தம் வராமல், முரசு ஒலிக்காமல் போனதன் காரணம் என்ன?


டார்ச்ல வீக்கான பேட்டரியும், குக்கர்வெச்ச அடுப்புல காஸ் தீர்ந்ததும், முரசு அடிச்ச கைக்கு பலமில்லாததும் காரணமா இருக்குமோன்னு அவங்கவங்க கட்சிக்குள்ளயே விவாதம் பண்ணிக்கிட்டிருக்காங்க!

செ.அ.ஷாதலி, கோனுழாம்பள்ளம்.

டெல்டா மாவட்டத்தைச் சார்ந்த ஒருவருக்குக்கூட அமைச்சர் பதவி இல்லாமல் போனது ஏனோ..?


இதை உணர்ந்துதான், முதல்வர் பதவியேற்றுக்கொண்டதும், “காவிரிக்கரையாம் தஞ்சை மண்ணின் - திருவாரூரைச் சார்ந்த எனக்கு தாய்த் தமிழ்நாட்டுக்குச் சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி!” என்று ட்வீட் போட்டிருப்பாரோ!

மணிபாரதி, மானாமதுரை.

உத்தரப்பிரதேசத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பசுக்களுக்கான உதவி மையங்கள் அமைக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளாரே முதல்வர்?

யோகி ஆதித்யநாத்தின் உத்தரவை அடுத்து, கிட்டத்தட்ட 700 உதவி மையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுவிட்டன. ஏற்கெனவே அங்கே பசு பாதுகாப்பு மையங்கள், பசுக்களுக்கான உணவு நிலையங்கள் என்று நிறைய செய்திருக்கிறது அரசு. அதில் தவறொன்றுமில்லை.

ஆனால், கொரோனாவில் பாதிக்கப்பட்டு அதிக எண்ணிக்கையில் அங்கே மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்று ஏற்பட்டவர்களுக்கான ஆம்புலன்ஸ் வசதிகள்கூட அங்கே கவலைக்கிடமாக உள்ளது. அதையெல்லாமும் கொஞ்சம் கவனித்தால் நன்றாக இருக்கும்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு