Published:Updated:

கழுகார் பதில்கள்

மேட்ச்சோ இல்லையோ மாஸ்க் அணியுறாங்களே... அது சந்தோஷம்.

பிரீமியம் ஸ்டோரி

பெ.பச்சையப்பன், கம்பம்.

கொரோனா பரவலை, தடுப்பூசி கட்டுப்படுத்துமா சார்?

தடுப்பூசி நிச்சயம் உயிரிழப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்தும் என்று மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இருந்தும் தடுப்பூசி குறித்த ஐயங்கள் மக்களிடையே இருந்துவருகின்றன. தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், முகக் கவசம், சானிடைஸர், சமூக இடைவெளி என்று கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அத்தனை வழிமுறை களையும் பின்பற்ற வேண்டும் என்பதையும் மக்கள் மறக்கக் கூடாது. சரி... நீங்க தடுப்பூசி போட்டுட்டீங்களா, இல்லையா?

கழுகார் பதில்கள்

@V.பாலசுப்ரமணியன், மன்னார்குடி.

புடவையின் கலருக்கு மேட்ச்சான நிறங்களில், மகளிர் மாஸ்க் அணிவதைப் பார்க்கும்போது என்ன தோன்றுகிறது?

மேட்ச்சோ இல்லையோ மாஸ்க் அணியுறாங்களே... அது சந்தோஷம். அப்புறம், உங்க கேள்வியைப் பார்த்தா ‘தேர்தல் முடிஞ்சுருச்சு... ஒரு மாசம் என்ன கேள்வி கேட்கறது?’னு நீங்க தவிக்கிறீங்களோனு தோணுது!

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்.

`லேடீஸ் & ஜென்டில்மேன்’, ‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே...’, ‘என் ரத்தத்தின் ரத்தங்களே’, ‘என் இனிய தமிழ் மக்களே’ இவற்றில் உங்களுக்குப் பிடித்தது எதுங்க?

திராவிட இயக்கப் பேச்சாளர்கள்தான், மேடைப்பேச்சின் போது அந்தக் கூட்டத்தின் தலைமை வகிக்கும் நபர் முதல் அடிமட்டத் தொண்டனாக அந்த மேடையை அமைத்த கூலித் தொழிலாளி வரை பெயரைச் சொல்லி ‘அவர்களே... அவர்களே’ என்று அழைக்கும் பழக்கத்தைக் கொண்டுவந்தனர். பேராசிரியர் முதல் தொழிலாளி வரை அனைவரையும் ஜனநாயகமாக விளிக்கும் அந்த ‘அவர்களே’தான் நமக்குப் பிடித்தது!

கழுகார் பதில்கள்

மனோகரன், திருப்பத்தூர்.

விவசாயிகளின் போராட்டத்தைப் பற்றிய பேச்சையே காணோமே... அது என்ன நிலையில் இருக்கிறது?

விவசாயிகள் கூடியிருந்த டெல்லி - ஜெய்ப்பூர் சாலையில், போராட்டத்துக்காக அமைக்கப்பட்டிருந்த பல குடில்கள் இப்போது காலியாகக் காணப்படுகின்றன. போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புகளில் ஒன்றான ‘தி சம்யுக்தா கிசான் மோர்ச்சா’, விவசாயிகளில் பலரை அவர்களின் சொந்த ஊருக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியிருக்கிறது. கோதுமை மற்றும் கடுகு அறுவடைக்கான நேரம் இது என்பதால் விவசாயிகள் அங்கிருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். அதேசமயம், சுழற்சி அடிப்படையில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் இருக்கவும் கூறப்பட்டிருக்கிறது. பிற எல்லைகளிலும் ஆயிரக்கணக்கில் இருந்த போராட்டக்காரர்கள் எண்ணிக்கை, இப்போது நூற்றுக்கணக்காகக் குறைந்திருக்கிறது. “மழையைச் சமாளித்தோம். ஏப்ரல் முதல் வாரத்தில் வந்த புழுதிப் புயலையும் சமாளித்தோம். இவ்வளவு நாள்களுக்குப் பிறகு, போராட்டத்தைக் கைவிடுவதில் அர்த்தமே இல்லை. திட்டமிட்டபடி மே மாதம் நாடாளுமன்றம் நோக்கி நம் பேரணி நடைபெறும்” என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

140-வது நாளைக் கடந்து நடக்கும் இந்தப் போராட்டத்துக்கு மத்திய அரசு செவி சாய்த்து, சுமுகமானதொரு முடிவைக் கொடுக்க வேண்டும் என்ற வைராக்கியம் மட்டும் குலையாமல் காத்திருக்கின்றனர் விவசாயிகள்.

@ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

வேட்பாளர்கள் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை, வெற்றிபெற்ற பின்பு நிறைவேற்றாமல் இருப்பதற்குக் காரணம் என்னவாக இருக்க முடியும்?

மக்களின் ஞாபக மறதி.

@ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

`தமிழ்ப் புத்தாண்டு, தைப்பூசம், ஆடிப்பெருக்கு ஆகிய பண்டிகை தினங்களில், கூடுதல் கட்டணம் பெற்றுக்கொண்டு பத்திரப்பதிவுகள் செய்யப்படும்’ என்ற தமிழக அரசின் புதிய உத்தரவு பற்றி..?

தேவையில்லாத ஆணி!

கழுகார் பதில்கள்

@டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

டாஸ்மாக் கடைகளில் குவியும் கும்பலுக்கு மட்டும் எந்த கொரோனா கட்டுப்பாடும் ஏன் விதிக்கப்படவில்லை?

எல்லோருக்கும் தடுப்பூசி கொடுக்கறதுக்கு வருமானம் வேணும் இல்ல! வருவாய் வர்ற விஷயத்துல அவ்வளவு சீக்கிரம் கைவைக்க வேணாம்னு இதைக் கொஞ்சம் அசால்ட்டா டீல் பண்றாங்கபோல. சரி, ஒரு நாட்டுக்கு அதோட ‘குடி’மக்கள்தானே முக்கியம்!

கழுகார் பதில்கள்

@அ.யாழினி பர்வதம், சென்னை-78.

தேர்தலுக்குப் பிறகு, நாலு கால் பாய்ச்சலில் அரசியல் செய்யப்போவது சசிகலாவா, மு.க.அழகிரியா, ரஜினிகாந்தா?

முதலில் சொன்ன பெயர்கூட ஓகே. பாக்கி ரெண்டு பேர் இந்த லிஸ்ட்ல ஒட்டவே இல்லைங்களே!

@பி.மணி, குப்பம்.

சென்னையில் தொடர்ச்சியாக சாலைகளின் பெயர்ப்பலகை மாற்றம் ஏன்?

ஏதாவது செய்து லைம்லைட்டில் இருக்கலாம் என்ற ‘பேராசை’யோ என்னமோ!

கழுகார் பதில்கள்

சுப்பிரமணியன், கோவை.

கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் வந்ததால், மக்களிடம் வசூல் வேட்டை நடக்கிறதே?

ஒவ்வொரு மண்டலத்துக்கும் இவ்வளவு வசூல் செய்ய வேண்டும் என்று அனுப்பப்பட்ட சுற்றறிக்கை நம் பார்வைக்கும் வந்தது. மக்களிடம் விழிப்புணர்வை அதிகப்படுத்தி, விதிமுறைகளைப் பின்பற்றச் செய்ய வேண்டியதுதான் அரசின் கடமையே தவிர, அன்றாடம் பிழைப்புக்கே அல்லாடுபவர்களிடம் வசூல் நிர்ணயம் செய்வது அல்ல. அதேசமயம், மக்களும் இந்த நோயின் தீவிரத்தன்மையை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

@P.அசோகன், கொளப்பலூர்.

நன்றியைச் சொல்ல சரியான வார்த்தை எது?

“ஒருத்தன் நல்லது செய்யறதுக்கு நன்றியை எதிர்பார்க்க மாட்டான். நன்றி எதிர்பார்த்து செய்யறது நல்லது கிடையாது” அப்படினு ஒரு சொலவடை உண்டு. அது சரி... நன்றி என்ற வார்த்தையே நல்லாத்தானே இருக்கு... அதுக்கு என்ன பிரச்னை?

*****

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள்,

ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு