Published:Updated:

கழுகார் பதில்கள்

சந்திரசேகரராவ், மோடி
பிரீமியம் ஸ்டோரி
சந்திரசேகரராவ், மோடி

சாதி அடிப்படையில் வழிபாடு இருக்கிறது. ஆனால் எந்தக் கடவுளும் வழிபாட்டு முறையும் மேலானதோ கீழானதோ அல்ல.

கழுகார் பதில்கள்

சாதி அடிப்படையில் வழிபாடு இருக்கிறது. ஆனால் எந்தக் கடவுளும் வழிபாட்டு முறையும் மேலானதோ கீழானதோ அல்ல.

Published:Updated:
சந்திரசேகரராவ், மோடி
பிரீமியம் ஸ்டோரி
சந்திரசேகரராவ், மோடி

ஸி.சம்பத்குமார், நுங்கம்பாக்கம்.

மோடி, தெலங்கானா செல்லும்போதெல்லாம் அவரை வரவேற்க விரும்பாமல் வெளி மாநிலங்களுக்குச் சென்றுவிடுகிறாரே அந்த மாநில முதல்வர் சந்திரசேகரராவ்?

அரசியல்ல இதெல்லாம்...

கழுகார் பதில்கள்

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

பிரதமர் மோடியைக் கவர்ந்தது தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைதான் என்று `மனதின் குரல்’ நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியாகத் தெரிவித்திருக்கிறாரே?

அரசியல்வாதிகளுக்குத் தலையாட்டி பொம்மைகளைப் பிடிப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லையே!

ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

இறப்புக்குப் பிறகு வாழ்வு இருக்கிறதா?

“இறப்புக்குப் பிறகு வாழ்வு இருக்கிறதா என்பது மிக முக்கியமான கேள்வி அல்ல. இறப்பதற்கு முன்பு உங்கள் வாழ்க்கையை நீங்கள் முழுமையாக வாழ்ந்தீர்களா என்று கேட்டுக்கொள்ளுங்கள். அதுதான் மிக முக்கியம்” என்றார் ஓஷோ!

பி.ஓம்பிரகாஷ், கொடுங்கையூர், சென்னை.

‘அம்மா... தாயே...’ என்று கெஞ்சி ஓட்டுக் கேட்டு ஜெயித்தவர்கள், தைரியமாக வலம்வருகிறார்கள். ஆனால், ஓட்டுப் போட்டு ஜெயிக்கவைத்த மக்கள், விலைவாசி உயர்வுப் பிரச்னை போன்ற அடிப்படைத் தேவைகள் குறித்துக்கூட அதே அரசியல்வாதிகளைப் பார்த்துக் கேள்வி கேட்க பயப்படுவது எதனால்?

கேள்வி கேட்டால் பிரச்னை வருமோ என்கிற அச்சமும்... சட்டங்கள் குறித்த, தங்கள் அடிப்படை உரிமைகள் குறித்த அறியாமையும்தான். அதையும் தாண்டி, பிரச்னை என்று வரும்போது மக்கள் வீதியில் தைரியமாக இறங்கிப் போராடத்தான் செய்கிறார்கள். ஊருக்குள் விடாமல் அரசியல்வாதிகளை விரட்டியடிக்கத்தான் செய்கிறார்கள். தவிரவும் சாமானியர்களின் ஆயுதம் ஓட்டு. கேள்வி கேட்டாலும், கேட்காவிட்டாலும் தங்கள் வாக்கின் மூலம், தக்க பதிலைத் தந்துகொண்டுதான் இருக்கிறார்கள்!

பெ.வேலுமணி, நாராயணபாளையம்.

அ.தி.மு.க-வுக்கு என்னதான் ஆச்சு?

‘அ.தி.மு.க-தான் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியா...’ என்று கேட்கும் நிலைக்குப் போயாச்சு!

முரளிகுமார் பத்மநாபன், காந்திநகர், திருப்பூர்.

“சாதி அடிப்படையில் வழிபாடு, உடை, பழக்க வழக்கம், திருமண முறை, உணவு முறை போன்றவையெல்லாம் இருக்கின்றன. சாதி என்றால் கெட்ட வார்த்தை என்று அடுத்த தலைமுறைக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அது தவறு” என்று கூறியுள்ளாரே அன்புமணி ராமதாஸ்?

சாதி அடிப்படையில் வழிபாடு இருக்கிறது. ஆனால் எந்தக் கடவுளும் வழிபாட்டு முறையும் மேலானதோ கீழானதோ அல்ல. போலவே உடை, பழக்க வழக்கம், உணவு முறையும் அப்படித்தான். எந்த உணவும், உடையும், பழக்க வழக்கமும் மேன்மையானதோ இழிவானதோ அல்ல. எந்தவோர் ஆணும் பெண்ணும் தங்களது விருப்பத்தின்படி திருமணம் செய்துகொள்ளலாம். அதற்கு சாதி, மதம், இனம் உட்பட எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்பதுதான் நவீன சமூகத்தின் அடிப்படைப் புரிதலாக இருக்க முடியும். மேலும், ஒரு மனிதன் சிறப்பானவனாகவும் இழிவானவனாகவும் இருக்க, பிறப்பின் அடிப்படையில் அமைகிற சாதி காரணமல்ல. அறிவும் நடத்தையும்தான் காரணம். இதை மறுத்து, பிறப்பின் அடிப்படையில் அனைத்தையும் முன்வைக்கும் ‘சாதி’ என்கிற கருத்து பிற்போக்குத்தனமானதுதான்; கெட்ட வார்த்தைதான்!

மாற்றம் முன்னேற்றமும் பேசுகிறவர்கள், முன்னோக்கிப் போகவேண்டிய தூரம் ரொம்பவே இருக்கிறது!

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

‘ஆதார் அட்டையின் போட்டோ நகலை எந்த நிறுவனத்துடனும் பகிர வேண்டாம். அதை தவறாகப் பயன்படுத்தும் அபாயம் இருக்கிறது’ என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் எச்சரிக்கை செய்திருக்கிறதே?

டாஸ்மாக்கில் மட்டும்தான் ஆதார் அட்டை கொடுக்கவில்லை. மற்ற எல்லா இடங்களிலும் கட்டாயம் எனச் சொல்லி ஆதார் அட்டையைக் கொடுக்கச் சொன்னார்கள்; இணைக்கச் சொன்னார்கள். இப்போது தனிமனித அந்தரங்கப் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கிறார்கள். முந்தைய, இன்றைய மத்திய அரசுகளின் பொறுப்பற்ற தன்மை இது!

அ.கார்த்திகேயன், சேலம்.

கழுகார் அண்மையில் பார்த்து ரசித்த காட்சி எது?

அண்ணாமலை நடத்திய பேரணி. நிறைய திருப்பங்கள் நிறைந்த சஸ்பென்ஸ் படமாக இருந்தது. அந்த ஆட்டோ க்ளைமாக்ஸ் சூப்பர்!

கழுகார் பதில்கள்

அருணாசலம், பெரியார் நகர்.

கவிதைகள் பெரியவர்களுக்கு மட்டுமானவையா... குழந்தைகளின் உலகைக் கவிதை கொண்டாடாதா?

முகுந்த் நாகராஜனின்

இந்தக் கவிதை ஒரு சோறு பதம்!

நீர் தெளித்து விளையாடுதல்

முன்பின் பழக்கம் இல்லாத

பயண வழி உணவுவிடுதியில்

சாப்பிட்டுவிட்டு

கைகழுவப்போனேன்.

சாதாரண உயரத்தில்

இரண்டு வாஷ் பேசின்களும்

மிகக்குறைந்த உயரத்தில்

ஒரு வாஷ்பேசினும் இருந்தன.

கை கழுவும்போது

காரணம் தெரிந்துவிட்டது.

குள்ள வாஷ்பேசின் முன்

இல்லாத குழந்தையின் மேல்

செல்லமாகத் தண்ணீர் தெளித்து

விளையாடிவிட்டு

விரைவாக வெளியே வந்துவிட்டேன்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism