Published:Updated:

கழுகார் பதில்கள்

கருணாநிதி, ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
கருணாநிதி, ஸ்டாலின்

என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள்... அமைச்சர்கள், அதிகாரிகள், குடும்ப உறவுகள் என யார் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் முதல்வர்தான் கட்டுப்படுத்த வேண்டும்.

கழுகார் பதில்கள்

என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள்... அமைச்சர்கள், அதிகாரிகள், குடும்ப உறவுகள் என யார் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் முதல்வர்தான் கட்டுப்படுத்த வேண்டும்.

Published:Updated:
கருணாநிதி, ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
கருணாநிதி, ஸ்டாலின்

பி.மணி, குப்பம், ஆந்திரா.

கலைஞரைப்போல ஸ்டாலினுக்கும் தேசிய அரசியலில் உரிய மரியாதை கிடைக்குமா?

‘வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் / உள்ளத் தனையது உயர்வு.’ உள்ளம் என்கிற இடத்தில், ‘தொடர்ச்சியான செயல்பாடு’ என்று மாற்றி நிரப்பி, பொருள் கொள்ளுங்கள்!

கழுகார் பதில்கள்

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

இப்போதைய அரசியலில், நகைச்சுவையாகப் பேசும் பேச்சாளர்கள் அதிகம் இல்லையே?

இன்று அரசியல்வாதிகளில் சிலர் சீரியஸாகப் பேசுவதே காமெடிபோல இருப்பதால், தனியே எதுக்கு அப்படியானவர்கள் என்று நினைத்திருக்கலாம்!

இல.கண்ணன், நங்கவள்ளி.

``அ.தி.மு.க-வுக்கும் எங்களுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை’’ என்றும், ``தமிழ்நாட்டில் அ.தி.மு.க-வை அழித்து பா.ஜ.க-வை வளர்க்கவேண்டிய அவசியம் இல்லை” என்றும் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது பற்றி..?

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

சுகன்யா, சென்னை-110.

எதற்கெடுத்தாலும் காலத்தின்மீது பழிபோடுபவர்களைப் பற்றி?

அவர்களுக்கும் காலம் பதில் சொல்லும்!

ம.ரம்யாமணி, வெள்ளக்கோவில்

மனசாட்சியை அதிகம் நம்ப வேண்டும் என்கிறார்கள். எதனால்?

பிற சாட்சிகள்கூட, பிறழ் சாட்சி ஆகலாம். உங்கள் மனசாட்சி உங்களுக்கு நல்லவற்றை மட்டுமே சொல்லும். அதனால்தான்!

கே.விஸ்வநாதன், கோயம்புத்தூர்.

ஒரு கட்சியின் வளர்ச்சிக்கு உதவுவது மதமா, மொழியா, உருப்படியான கொள்கைகளா?

மதத்தையும் மொழியையும் முன்வைத்தே இரு வேறு கொள்கைகள் இருக்கின்றன. எதை மக்கள் ஆதரிக்கிறார்களோ அந்தக் கட்சி வளரும்!

சாமிநாதன், பழைய ராமகிருஷ்ணாபுரம்.

“ரொம்ப செல்லம் கொடுத்து வளர்க்காதே” என்று சொல்லிக்கொண்டேயிருக்கிறார் என் தந்தை. என் குழந்தைக்கு நான் செல்லம் கொடுப்பதில் என்ன தவறு?

செடிக்கு ஏன் ரொம்ப தண்ணி ஊத்தக் கூடாதோ அதே காரணம்தான். செடிகளுக்கு அளவாகத் தண்ணீர்விட்டு வளர்த்தால், அவ்வப்போது தண்ணீர்த் தேவைக்காகச் செடியின் வேர்கள் பூமியில் நீரைத் தேடி ஊடுருவும். அதனால் வேர், மண்ணில் அழுத்தமாகப் பிடித்து வேரூன்றி நிற்கும். நிறைய தண்ணீர் விடுவதால், செடிகள் அழுகிவிடவோ அல்லது வேர்ப்பிடிப்பு இல்லாமல் பலத்த காற்றுக்கு நிற்க முடியாமல் விழுந்துவிடவோ வாய்ப்பு உண்டு. பிள்ளைகள் தாங்களாகக் கொஞ்சம் வேரூன்றி நிற்பது அவர்களின் எதிர்காலத்துக்கு நல்லது!

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் - தேனி.

“பிரதமர் மோடியிடம் ‘தேவாரம்’ பாடிக் காட்டினேன். அதைக் கேட்ட பிரதமர் கண்ணீர் விட்டார். நாட்டிற்கு நல்ல பிரதமர் கிடைத்துவிட்டார்” என்று மதுரை ஆதீனம் பெருமைப்பட்டுள்ளது பற்றி?

இசைக்கு வசமாவது நிச்சயம் பாராட்டுக்குரியதுதான். ஆனால், அதுமட்டுமா ‘நல்ல’ பிரதமர் என்பதற்கான அளவுகோல்?

சோ.பூவேந்த அரசு, சின்னதாராபுரம்.

சினிமா இயக்குநர் சீமான் முழுநேர அரசியல்வாதி ஆகிவிட்டாரல்லவா... வருமானம்?

போங்க பாஸ்... உங்களுக்கு ரொம்பத்தான் குசும்பு!

அ.கார்த்திகேயன், சேலம்.

நபிகள் நாயகத்துக்கு எதிராகக் கருத்து தெரிவித்த, பா.ஜ.க பெண் செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மா இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறாரே..?

கத்தார் உள்ளிட்ட நாடுகளில் அவரது கருத்துக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ‘அனைத்து மதத்தினரையும் மதித்து நடக்கும் கட்சி எங்கள் கட்சி’ என்று பா.ஜ.க அதிகாரபூர்வமாக அறிக்கையும் வெளியிட்டிருக்கிறது. அறிக்கையைப் பின்பற்றினால் மகிழ்ச்சி.

கழுகார் பதில்கள்

சி.கார்த்திகேயன், சாத்தூர்.

அன்றைய ‘விக்ரம்’ இளையராஜா இசை, இன்றைய ‘விக்ரம்’ அனிருத் இசை... ஒப்பிடுங்கள்?

சில விஷயங்களை ஒப்பிட முடியாது, கூடாது. 36 வருட கால இடைவெளி, நம் அளவுகோல்களை அபத்தமாக்கிவிடும்!

மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி, மதுரை.

அமைச்சர்கள், அதிகாரிகள் இவர்களில் யாருடைய ஊழல் நடவடிக்கைகளை முதல்வரால் கட்டுப்படுத்த இயலும்?

என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள்... அமைச்சர்கள், அதிகாரிகள், குடும்ப உறவுகள் என யார் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் முதல்வர்தான் கட்டுப்படுத்த வேண்டும். ஆனால், பட்டுக்கோட்டை பாடலும் இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது: ‘திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!’

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism