Published:Updated:

கழுகார் பதில்கள்

டிமிட்ரி முரடோ
பிரீமியம் ஸ்டோரி
டிமிட்ரி முரடோ

சில ஆண்டுகளாகவே நம் மக்கள், அரசியலுக்கு வரும் நடிகர்கள் விஷயத்தில் ரொம்பவே உஷாராக இருக்கிறார்கள்

கழுகார் பதில்கள்

சில ஆண்டுகளாகவே நம் மக்கள், அரசியலுக்கு வரும் நடிகர்கள் விஷயத்தில் ரொம்பவே உஷாராக இருக்கிறார்கள்

Published:Updated:
டிமிட்ரி முரடோ
பிரீமியம் ஸ்டோரி
டிமிட்ரி முரடோ

பெ.வேலுமணி, நாராயணபாளையம்.

பொதுமக்கள் பின்பற்றவேண்டிய கட்டுப்பாடுகள், விதிமுறைகள் அனைத்தும் காவல்துறைக்கும் பொருந்தும்தானே... அப்படியிருந்தும், ஏன் சில காவலர்கள் சக மனிதர்களை மனிதர்களாக நடத்தாமல், சட்டத்தைக் கையிலெடுத்துக்கொண்டு அராஜகமாக நடந்துகொள்கிறார்கள்?

பிரிட்டிஷ் காலத்து அணுகுமுறை..! ஆங்கிலேயர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல பணிகள், கருத்துகள், பதவிகள், நடைமுறைகள் இன்னும் மாறாமல் நம் சமூகத்தில் அப்படியே இறுக்கமாகவும் காரணமற்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் காவல்துறையில் படிந்திருக்கும் அதிகார மனோபாவம். சமீபத்தில் வெளிவந்த ‘டாணாக்காரன்’ திரைப்படம் இதன் உளவியல் பின்னணியை நன்கு அலசியிருக்கிறது.

மல்லிகா அன்பழகன், சென்னை-78.

ஆழ்ந்த அமைதி என்றால் என்ன?

ஏதாவது வாயைத் திறந்தால் ரெய்டு வருமோ என்கிற பயத்தில், மைக்கோடு நிற்கும் செய்தியாளர்களைக் கடந்து செல்லும் அரசியல்வாதிகளின் நிலைதான்.

வேலுமணி, நாமக்கல்.

விமர்சனங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டுமா... அல்லது விலகிச் செல்ல வேண்டுமா?

அந்த விமர்சனம், நம் மீதான அக்கறையில் வருகிறதா அல்லது காழ்ப்புணர்ச்சியில் வருகிறதா என்பதைப் பொறுத்து முடிவு செய்யுங்கள்.

கிடையூர் மாணிக்கம், சங்ககிரி, சேலம் மாவட்டம்.

அரசியல் தலைவர்களெல்லாம் ‘பிரச்னைகளுக்கு ஜனநாயகரீதியில் தீர்வு காணப்படும்’ என்று கூறுகிறார்களே... ஜனநாயகரீதியில் என்றால் என்ன?

`ஒண்ணுமே செய்ய மாட்டோம்’ என்பதைத்தான் சுற்றிவளைத்துச் சொல்கிறார்களோ?!

பாஸ்கர், மயிலாடுதுறை.

அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில் கழுகாருக்கு என்ன புரிந்தது?

அரசியல் என்றால் என்னவென்று புரிந்தது!

கே.விஸ்வநாதன், கோயமுத்தூர்.

கமல் வெற்றிப்பட ஃபார்முலா, அவரது அரசியலுக்கும் பொருந்தி வருமா?

சில ஆண்டுகளாகவே நம் மக்கள், அரசியலுக்கு வரும் நடிகர்கள் விஷயத்தில் ரொம்பவே உஷாராக இருக்கிறார்கள்... பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

ஓர் அரசியல்வாதி, அரசியலில் உயர்வதற்குக் காரணமாக இருப்பது அவரின் குனியும் தலையா, கும்பிடும் கையா, பின்தொடரும் காலா, வளையும் முதுகா?

ஏன்... சிந்திக்கும் மூளை இருக்கும் தலை அரசியல் உயர்வுக்குக் காரணமாக இருக்கக் கூடாதா மாடக்கண்ணு?

சூர்யகுமார், ராமநாதபுரம்.

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தர்மம் மறுபடியும் வெல்லும்” ஸ்டேட்மென்ட்டை மீண்டும் படித்தபோது என்ன நினைத்தீர்கள்?

இதை எத்தனையாவது முறை சொல்கிறார் என்று எண்ணிச் சரிபார்க்க வேண்டும் என்று தோன்றியது. பாவம்தான் இந்தத் தர்மமும் சூதும்!

கழுகார் பதில்கள்

இல.கண்ணன், நங்கவள்ளி.

சமீபத்திய நெகிழ்ச்சி செய்தி?

ஆந்திரா, ஸ்ரீகாகுளம், பழையபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த கோதாரேஸ்வர் ராவ் என்பவர், 1998-ல் அரசு ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெறுகிறார். சிலர் வழக்கு தொடர்ந்த காரணத்தால், அந்த வருடத்தில் தேர்வெழுதிய பலரும் பணியில் சேர முடியவில்லை. ஒருபுறம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடந்துகொண்டிருக்க, கோதாரேஸ்வர் வறுமையின் காரணமாகப் பிச்சையெடுக்கும் நிலைக்கு ஆளானார். ‘என்றாவது ஒருநாள் ஆசிரியர் ஆகிவிடுவேன்’ என்று இவர் சொல்லிவந்ததால், இவரை அப்பகுதி மக்கள் ‘மாஸ்டர்’ என்று கிண்டலாக அழைத்துவந்தனர். “1998-ல் ஆசிரியர் தேர்வில் தேர்ச்சிபெற்ற அனைவருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும்” என்று நீதிமன்றம் உத்தரவிட்டதால், இவருக்கும் கடந்த புதன்கிழமை நியமன உத்தரவு வந்திருக்கிறது. வறுமை காரணமாக நண்பர்கள், உறவினர்கள் எல்லோரையும் இழந்துவிட்ட இவரை, இந்த உத்தரவுக்குப் பின்னர் அவர் வசிக்கும் கிராம மக்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். இதில் நெகிழ்ச்சி இருந்தாலும், இளமை முழுவதும் கஷ்டப்பட்டு ரிட்டயர்டு ஆகும் காலத்தில் பணி நியமனம் கிடைத்திருக்கிறதே என்கிற வருத்தமும் இல்லாமல் இல்லை!

கழுகார் பதில்கள்

கௌரி செல்வம், பாண்டிச்சேரி.

கழுகாரே... பாராட்டு வழங்கி ரொம்ப நாளாச்சே?

ரஷ்யாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் டிமிட்ரி முரடோவைப் பாராட்டியே ஆக வேண்டும். கடந்த 2021-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார் இவர். ஏற்கெனவே பரிசுத்தொகையான 3.8 கோடியை மாஸ்கோவில் முதுகெலும்புப் பிரச்னையில் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளின் மருத்துவச் செலவுக்காக வழங்கியிருந்தார். இந்நிலையில், ரஷ்ய - உக்ரைன் போரில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு உதவும் வகையில், தனது நோபல் தங்கப் பதக்கத்தை ஏலம் விட்டிருந்தார். கடந்த வாரம் இந்திய மதிப்பில் 808 கோடி ரூபாய்க்கு அந்தப் பதக்கம் ஏலம் போனது. முழுத்தொகையையும் போரில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்குவதாக அறிவித்திருக்கிறார் அறுபது வயதான டிமிட்ரி முரடோவ்!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!