வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
ஜெயலலிதா உயிரோடு வந்து ஒரு தலைமையைத் தேர்ந்தெடுப்பார் என்றால், இருவரில் யாரைத் தேர்ந்தெடுப்பார்?
ஏதே... தேர்ந்தெடுப்பதா... முதலில் இருவரையும் வறுத்தெடுப்பார்!

யாழினி முரளி, காந்திநகர்.
நல்லவர் வெல்வாரா... வல்லவர் வெல்வாரா?
நீங்கள் யாரை நல்லவர், யாரை வல்லவர் என்று சொல்கிறீர்கள் என்று தெரியவில்லையே. சரி... வல்லவர்களுக்கான காலமிது. அவர்கள் நல்லவராகவும் இருக்க வேண்டும் என்பது நம் ஆசை!
ஸி.சம்பத்குமார், சென்னை-34.
“அக்னிபத் திட்டம் மூலம் ராணுவத்தில் சேரும் வீரர்கள், நான்கு ஆண்டுகள் கழித்து வெளியே வரும்போது, வேலை பற்றிக் கவலைப்பட வேண்டாம். பா.ஜ.க அலுவலகங்களில் ‘செக்யூரிட்டி’-யாக வேலை கிடைக்கும்” என்ற பா.ஜ.க பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய் வர்கியாவின் பேச்சு?
ஏற்கெனவே எரிந்துகொண்டிருக்கும் தீயில் எண்ணெயை ஊற்றும் பேச்சு. இதற்கு விண்ணப்பிக்கும் இளைஞர்களை எவ்வளவு கீழானவர்களாக நினைத்திருந்தால் இப்படி ஒரு பேச்சு வரும்... மத்திய அரசின் இது போன்ற திட்டங்களின் குறைகளை அறிய இவர்களின் பேச்சுகளே போதும்!
டி.கே.மோகன், பாளையங்கோட்டை.
நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில், பா.ஜ.க சார்பில் ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து வேட்பாளரை நிறுத்தியிருப்பது சமூகநீதிக்குக் கிடைத்த வெற்றிதானே?
ஆனால் நாம் யோசிக்கவேண்டியது யார் இவர்களை ஒடுக்கியது, எதற்காக ஒடுக்கப்பட்டார்கள் என்பதைத்தான்!
எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.
‘`தமிழ்நாட்டில் உண்மையான எதிர்க்கட்சி தே.மு.தி.க-தான்’’ என்று பிரேமலதா கூறியிருக்கிறாரே?
2011 காலகட்ட நினைவுகளிலிருந்து அவர் இன்னும் வெளிவரவில்லைபோல!
ப.திருக்காமேஷ்வரன், புதுச்சேரி.
என் நண்பன் தினமும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 5,000 ரூபாய் சம்பாதிக்கிறானாம். நானும் விளையாடிப் பார்க்கலாமா... கழுகார் என்ன சொல்கிறார்?
ஆன்லைன் ரம்மி விளையாடி, கடந்த 10 மாதங்களில் 300-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த விளையாட்டால் நிகழ்ந்த குற்றங்களின் எண்ணிக்கை தனி. ஆசைகளிடம் கவனமாக இருங்கள் திருக்காமேஷ்வரன்.
கார்த்தி, பெருங்குடி, சென்னை.
ஒருவர் நல்லவரா, கெட்டவரா என்பதை எப்படி அடையாளம் காண்பது?
`ஒரு மனிதனை முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டுமா... அவனிடம் அதிகாரத்தைக் கொடுங்கள்’ என்கிறது பல்கேரியப் பழமொழி ஒன்று.
ச.இராமதாசு சடையாண்டி, ரங்கநாதபுரம், வானூர்.
“ஓ.பி.எஸ்-ஸின் பின்னால் தி.மு.க இருக்கிறது” என்று சி.வி.சண்முகம் கூறியிருப்பது பற்றி..?
அடடே... பெரிய விஷயம்தான். எப்படித்தான் கண்டுபிடித்தாரோ..!
இல.கண்ணன், நங்கவள்ளி.
``சனாதனம் மூலமே உயிர்களையும் நதிகளையும் காப்பாற்ற முடியும்’’ என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியிருப்பது பற்றி?
ஆளுநர் மட்டுமல்ல... நமது தேசத்தில் மிக முக்கியப் பொறுப்பிலிருக்கும் பலரும், ஆக்கபூர்வமான செயலைவிடச் சர்ச்சைக்குரிய சொற்களை நம்புகிறார்கள். இது எதிர்கால இந்தியாவுக்கு நல்லதல்ல!
ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.
தொடர்ந்து ஜூ.வி படித்தாலும்கூட, சில கட்சிகள் இருப்பது மறந்தேவிடுகிறதே கழுகாரே?
ஜூ.வி பக்கங்களின் எண்ணிக்கையைவிட அதிகமான கட்சிகள் இருப்பதுதான் காரணமோ என்னமோ..!

அருண் கார்த்திக், மதுரை.
பழிவாங்குவது நல்ல பழக்கமா?
இல்லைதான். ஆனால், இந்தக் கவிதையில் நிகழ்வது போல வரலாற்றைப் பழிவாங்கலாம். தவறில்லை!
புழுக்கமாய் இருந்தாலும்
பரவாயில்லை
பூட்ஸை அணிந்துகொள்..!
எவ்வளவு நேரமானாலும்
பரவாயில்லை
மேலத்தெரு வழியாகவே
பள்ளிக்குப் போ..!
அங்குதான்
காலணி அணிந்ததற்காய்
கட்டிவைத்து அடித்தார்கள்
உன் அப்பனை.
- கண்மணி ராசா
கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!