சி.கார்த்திகேயன், சாத்தூர்.
எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமையாக மாறியிருக்கிறார். இனி பிரச்னைகள் அனைத்தும் சரியாகிவிடுமா?
அ.தி.மு.க-வில் பிரச்னைகள் அதிகரிப்பதால் பலருக்கும் லாபமிருக்கிறது. 2024 தேர்தல் வரை முடிந்த அளவுக்குப் பிரச்னைகள் குறையாமல் பார்த்துக்கொள்வார்கள். அ.தி.மு.க கூடாரம் இனி அமைதி காண்பது பெரிய விஷயம்தான்!
@சரோஜா பாலசுப்ரமணியன்.
பன்னீர்செல்வத்தின் எதிர்காலம் இனி என்னவாகும்?
அது அவர் கையில்தான் இருக்கிறது. சிங்கப்பாதையா... பூப்பாதையா என்பதை அவர்தான் முடிவுசெய்ய வேண்டும்.
சுகன்யா, சென்னை-110.
‘விக்ரம்’ பட வெற்றியால், கமலின் அரசியல் செல்வாக்கு உயருமா?
சினிமாவால் ஒருவருக்கு அரசியல் செல்வாக்கு உயர்வதும் குறைவதும் அரசியலுக்கும் சரி, சினிமாவுக்கும் சரி... நல்லதல்ல!
முருகன், மதுரை.
எடப்பாடி பழனிசாமியை பன்னீர்செல்வமும், பன்னீர் செல்வத்தை எடப்பாடி பழனிசாமியும் கட்சியிலிருந்து விலக்கியுள்ளனரே.. எதுதான் செல்லும்?
பொறுங்கள்.. சசிகலா இரண்டு பேரையும் நீக்குவதாக அறிவித்தாலும் அறிவிப்பார்!
மாடக்கண்ணு, பாப்பான்குளம்.
நாளிதழ்களில் தலைப்புச் செய்தியாகத் தொடர்ந்து ‘மாஜி அமைச்சர் வீட்டில் ரெய்டு’ என்பதைப் படிப்பவர்களுக்கு, மக்களுக்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணிக்கும் அரசியல்வாதிகள்மீது தவறான அபிப்பிராயம் ஏற்படுமே?
‘மக்களுக்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணிக்கும் அரசியல்வாதிகளா...’ யார் அவர்கள்?
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர், தேனி.
“டிசம்பர் 31-க்குள் 505 வாக்குறுதிகளை ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் பாதயாத்திரைதான்” என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறாரே?
ஏன்... பொடிநடையா டெல்லி வரை போய், அங்கிருந்து நம் மாநிலத்துக்குக் கிடைக்கவேண்டியவற்றைக் கேட்டு வாங்கி வரப்போகிறாரா?
அருணாசலம், திருப்பூர்.
மக்கள் பணி நடக்காவிட்டால் ஆளும் அரசியல்வாதிகளைக் குறை கூறாமல், அதிகாரிகளைக் குறை கூறுவது எதனால்?
ஐந்தாண்டு அரசியல்வாதிகளைவிட, அதிகாரிகளுக்குப் பொறுப்பும் கடமையும் அதிகம் என்பதால்தான். ஆந்திராவின் ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் நெல்லூர் எம்.எல்.ஏ ஸ்ரீதர் ரெட்டி. அவர் தொகுதிக்குட்பட்ட ஒரு பகுதியில், ‘சாக்கடையைத் தாண்டி மக்கள் நடக்க வசதியாகப் பாலம் கட்டும் பணியை அதிகாரிகள் தாமதப்படுத்துகிறார்கள்’ என்று, அந்தச் சாக்கடைக்குள்ளேயே இறங்கிப் போராட்டம் செய்திருக்கிறார். இதற்கு முன்பு எதிர்க்கட்சியாக இருந்தபோதிலிருந்தே இந்தக் கோரிக்கையை முன்வைத்துப் போராட்டம் செய்துவருகிறார். 2019-ல் எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும், அதிகாரிகளின் அலட்சியம் இதுவரை தொடர்ந்ததால், சாக்கடைக்குள்ளேயே இறங்கி அமர்ந்திருக்கிறார். அதிகாரிகள் வாக்குறுதி அளித்தும் அதை நம்பாமல், எழுத்துபூர்வ உறுதிமொழி கேட்டிருக்கிறார். ‘ஜூலை 15-ம் தேதி, பணிகளை ஆரம்பித்து ஒரு மாதத்தில் முடித்துக் கொடுக்கப்படும்’ என அவர்கள் எழுதிக்கொடுத்த பிறகே போராட்டத்தை வாபஸ் பெற்றிருக்கிறார்.
அரசியல்வாதிகள் மாறிக்கொண்டே இருப்பார்கள்.ஆனால், மக்கள் பணி தொடர்ந்து நடப்பதைக் கண்காணித்து உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்குத்தான் கூடுதலாக இருக்கிறது. அந்தப் பொறுப்பிலிருந்து அவர்கள் தவறும்போது, மக்கள் குறை கூறுகிறார்கள் அல்லது விமர்சிக்கிறார்கள்!
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
`மக்களின் மனதைப் புரிந்துகொள்கிறோம்’ என்று சொல்கிற அரசியல்வாதிகள், தங்கள் கட்சியிலுள்ள சக அரசியல்வாதிகளின் மனதையே புரிந்துகொள்வதில்லையே?
நீங்கள் குறிப்பிடுவது மகாராஷ்டிராவின் சிவசேனா குறித்தா... தமிழ்நாட்டின் அ.தி.மு.க குறித்தா என்று தெரியவில்லை. இரண்டு கட்சிகளிலும் ‘எல்லாம் புரிந்து... தெரிந்துதான் நடக்கிறது’ என்பதை நாம்தான் புரிந்துகொள்ள வேண்டும்.
எம்.நிர்மலா, புதுச்சேரி.
“அமைச்சரவை மாற்றம் வந்ததும், தமிழ்நாட்டிலும் விரைவில் ஒரு ஏக்நாத் ஷிண்டே புறப்படுவார்” என்று அண்ணாமலை கூறியிருக்கிறாரே...
இதே வேலையாத்தான் இருக்கோம்னு ஒப்புக்கொள்கிறார்போல!
நறுமுகை, அய்யப்பன்தாங்கல்.

இந்தக் காலத்திலும் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்கள் இருக்கிறார்களா கழுகாரே?
ஏன் இல்லை... பீகாரின் முசாஃபர்பூர் மாவட்டத்திலுள்ள நிதிஷ்வர் கல்லூரியின் இந்திப் பேராசிரியர் லலன் குமார். “கொரோனா காலம் தொட்டு 33 மாதங்கள் மாணவர்கள் கல்லூரிக்கு வரவில்லை. பிறகு ஆன்லைன் வகுப்புகளுக்கும் குறைவான மாணவர்களே வந்தனர். அந்தக் காலகட்டத்துக்கான என் சம்பளத்தைப் பெற்றுக்கொள்வது என் மனசாட்சியை உறுத்துகிறது” என்று கூறி 23,82,000 ரூபாயைப் பல்கலைக்கழகத்துக்கே திரும்ப அளித்திருக்கிறார்!
கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!