Published:Updated:

கழுகார் பதில்கள்

த்ரிஷா
பிரீமியம் ஸ்டோரி
த்ரிஷா

அவர்களும் யாருக்கோ ‘அமாவாசை’யாகக் கைகட்டிக்கொண்டிருந்துதானே இந்த இடத்துக்கு வந்திருப்பார்கள்

கழுகார் பதில்கள்

அவர்களும் யாருக்கோ ‘அமாவாசை’யாகக் கைகட்டிக்கொண்டிருந்துதானே இந்த இடத்துக்கு வந்திருப்பார்கள்

Published:Updated:
த்ரிஷா
பிரீமியம் ஸ்டோரி
த்ரிஷா

சோ.பூவேந்த அரசு, சின்ன தாராபுரம்.

ராகுல் காந்திக்கு இந்திய அரசியல் பிடிபடவில்லையோ?

நாடாளுமன்றத்திலெல்லாம் நன்றாகத்தானே எதிர்வினை ஆற்றுகிறார். கட்சித் தரப்பிடம் விசாரித்தால், “கட்சியின் சீனியர்கள் அவரோடு ஒத்துழைத்தால், களத்திலும் அவரால் பிரகாசிக்க முடியும்” என்று புலம்புகிறார்கள்!

வ.நடராஜன், கூடுவாஞ்சேரி.

அரசியலுக்கு வருவதென்பது சேவை செய்வதற்கா... தங்கள் சேமிப்பை அதிகரிக்கவா?

அரசியல்வாதிகள் சேவை செய்ய வரலேன்னு சொல்லலை. வந்தா நல்லாருக்குமேன்னுதான் சொல்லுறோம்!

ம.ராகவ்மணி, வெள்ளக்கோவில், திருப்பூர்.

“முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்தால், ஜெயலலிதாவின் மர்ம மரணத்தில் பல உண்மைகள் வெளிப்படும்” என்கிறாரே அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி?

‘சில உண்மைகளைத் தெரிஞ்சுக்கலைன்னா தலையே வெடிச்சுடுற மாதிரி இருக்கும். தெரிஞ்சுதுன்னா தலையே வெடிச்சுரும்!’ ஜெயலலிதாவின் மரண விவகாரம் பத்திப் பேச்சு வரும்போதெல்லாம் இந்த வசனம்தான் நினைவுக்கு வருது!

கணேஷ், திருப்பத்தூர்.

எவ்வளவு கற்றுக்கொண்டு முன்னேறினாலும், புதிது புதிதாகச் சோதனைகள் வந்துகொண்டேயிருக்கின்றனவே?

`வாழ்க்கையில் சில முக்கியமான கேள்விகளுக்கான விடையை நீங்கள் கண்டுபிடித்துத் திரும்பும்போது, வாழ்க்கை தன் கேள்வியை முற்றிலுமாக மாற்றிக்கொண்டிருக்கும்’ என்கிறது ஒரு பழமொழி!

கழுகார் பதில்கள்

@சரோஜா பாலசுப்ரமணியன்

ஸ்டாலினின் இப்போதைய துபாய் பயணம், எடப்பாடி பழனிசாமியின் முந்தைய அமெரிக்கப் பயணம்... ஒப்பிடுக?

இரண்டிலும் காஸ்ட்யூம் டிசைனர்கள் கவனம் பெற்றார்கள்!

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர், தேனி.

தமிழகத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் அதிரடி அரசியல் செல்லுபடியாகுமா சார்?

அதிரடியா... அப்படி என்ன அதிரடி அரசியல் பண்றார்?

மாணிக்கம், திருப்பூர்.

ஏதாவது அரசியல் ஜோக் சொல்லுங்களேன்...?

அரசியல்ல எல்லாமே ஜோக்தானே பாஸ்!

வாசுதேவன், பெங்களூரு.

தோனி, ஐபிஎல் டீம் தலைவர் பதவியிலிருந்து விலகிவிட்டாரே?

ஒரு நல்ல தலைவனுக்கு எப்போது தன் பொறுப்பிலிருந்து விலக வேண்டுமென்று தெரியும்!

@பாண்டி.

கடவுள் மறுப்பு பேசும் திரைப்படப் பாடலாசிரியர்கள்கூட, அழகிய பெண்களை பிரம்மன்தான் படைத்ததாக எழுதுகிறார்களே ஏன்?

கேட்டால், ‘கவிதைக்குப் பொய் அழகு’ என்று முடித்துவிடுகிறார்களே!

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

ஒருசில அரசியல்வாதிகள் தங்களுடைய நிழலைக்கூட நம்ப மறுக்கிறார்களே?

அவர்களும் யாருக்கோ ‘அமாவாசை’யாகக் கைகட்டிக்கொண்டிருந்துதானே இந்த இடத்துக்கு வந்திருப்பார்கள். பழசெல்லாம் கண்ல வந்துபோகுமால்லியா!

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

‘ஏர் இந்தியா நஷ்டத்துக்கு காங்கிரஸ் அரசே காரணம்’ என்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவும், ‘ஜம்மு காஷ்மீரில் காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேற்றத்துக்கு காங்கிரஸே பொறுப்பு’ என்று நிர்மலா சீதாராமனும் கூறியுள்ளனரே..?

அவர்கள் சொல்வதின் உண்மைத்தன்மை தனி விவாதம். ஆனால், எட்டு வருடங்களாக இந்தியாவை ஆண்டுகொண்டிருக்கும் ஒரு கட்சி, இன்னமும் முந்தைய ஆட்சியாளர்களையே குறை சொல்லிக்கொண்டிருப்பதை மக்கள் விரும்ப மாட்டார்கள்!

மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி.

இருபதாம் நூற்றாண்டு அச்சுப் பத்திரிகை வாசகர்கள் பார்வைக்கும், இருபத்தியோராம் நூற்றாண்டுக் கணினி மின்னிதழ் வாசகர்கள் பார்வைக்குமிடையே ஏதேனும் மாற்றம் தெரிகின்றதா?

முன்னவர்களிடம் ஒரு புத்தகத்தைக் குறித்துச் சொன்னால், “அந்தப் புத்தகம் எங்கு கிடைக்கும்?” என்றோ, “இரவல் கிடைக்குமா?” என்றோ கேட்பார்கள். பின்னவர்கள், “பிடிஎஃப் கிடைக்குமா... ஷாட் வெர்ஷன் கிடைக்குமா?” என்று கேட்கிறார்கள்!

கழுகார் பதில்கள்

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.

பட வாய்ப்புகள் குறைந்ததால், கோபப்பட்டுக்கொண்டு த்ரிஷா வெளிநாடு சென்றுவிட்டாராமே?

ஸ்டாலின் வெளிநாடு சென்றிருப்பதைப் பற்றிக் கேட்கவேண்டிய நேரத்துல, த்ரிஷா வெளிநாடு சென்றுவிட்டாரா என்று கேட்டிருக்கும் உங்களின் கலை ஆர்வம் புரிகிறது கதிரேசன். கவலைப்படாதீங்க... திரும்பி வந்துடுவாங்க!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002. kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!