
ஏதோ போகிற போக்கில், சும்மா அந்தத் தொப்பியையும் கண்ணாடியையும் எம்.ஜி.ஆர் அன்று போட்டுக்கொண்டார் என்று நினைக்கிறீர்களா...
மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி.
அன்றே பாரதி செல்லம்மாவை நாற்காலியில் அமரவைத்தும், அவர் நின்றுகொண்டும் புகைப்படம் எடுக்கக் காரணம் என்ன?
அன்று உலக அளவில் எழுந்த ‘பெண் விடுதலை’ உள்ளிட்ட முக்கியமான புரட்சிக் கருத்துகள் அனைத்தையும் தன் மொழியறிவால் அறிந்ததாலும், அது சரியானது என்று தீர்க்கமாக நம்பியதாலும், அதை உடனடியாகக் கடைப்பிடிக்க எண்ணியதாலும்தான்.
‘வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா
மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்
கலிய ழிப்பது பெண்கள் அறமடா
கைகள் கோத்துக் களித்துநின் றாடுவோம்’
- என்று முண்டாசுக் கவி சும்மாவா பாடினான்?!

என்.இளங்கோவன், மயிலாடுதுறை.
``ஏப்ரல் 14 அன்று ரஃபேல் கடிகாரம் வாங்கியதற்கான ரசீதை நிச்சயம் தருவேன்’’ என்று அண்ணாமலை கூறுகிறாரே..?
தரட்டும். அதெல்லாம் பிரச்னை இல்லை. கையில இருந்தா உடனே காட்ட வேண்டியதுதானே... அதுக்கு ஏன் ஏப்ரல் 14-னுதான் யோசனையாவே இருக்கு.
மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி.
முட்டாள்தனத்தை முதலீடாகப் பயன்படுத்த முடியுமா?
நிச்சயமாக. மற்றவர்களின் முட்டாள்தனத்தைப் பயன்படுத்தி, அவர்களை ஏமாற்றித்தான் பெரும்பாலான பொருள்கள் விற்கப்படுகின்றன.
அன்னூரார் பொன்விழி, அன்னூர்.
சினிமா உலகில் எப்போதும் கதைத் திருட்டு என்ற சர்ச்சை வந்துகொண்டே இருக்கிறதே... எதனால்?
அங்கே கதைப் பஞ்சம் தலைவிரித்து ஆடுவதால்!
தே.மாதவன், கோயம்புத்தூர்.
``நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வரலாம்’’ என்கிறாரே எடப்பாடி?
‘ஆசை ஆசை இப்பொழுது... பேராசை இப்பொழுது... ஆசை தீரும் காலம் எப்பொழுது?’ பாட்டை எடப்பாடிக்கு டெடிகேட் பண்ணுவோம்.
பாரதிமுருகன், மணலூர்பேட்டை.
சசிகலா என்னதான் செய்யப்போகிறார்?
இன்னும் கொஞ்ச நாளைக்குக் கோயில் கோயிலாகச் சென்று பூஜைதான் செய்யப்போகிறாராம்!
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
“தி.மு.க ஆட்சியில் கும்பாபிஷேகப் பணிகள் வேகமாக நடக்கின்றன. நிகழ்கால ராஜராஜ சோழனாக முதல்வர் திகழ்கிறார்” என்ற சேகர் பாபுவின் பேச்சு?
விஷயத்தை மட்டும் சொல்லுங்க பாஸ். இந்த ‘லகலகலக’ல்லாம் எதுக்கு?
தே.மாதவன், கோயம்புத்தூர்.
‘அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் வலுவாக இருப்பதாக’ எல்.முருகனும், ‘இன்னும் ஒன்பது மாதங்கள் இருக்கின்றன’ என்று அண்ணாமலையும் கூட்டணி பற்றிக் குழப்புகிறார்களே?
‘அந்நாள்’ ஒன்று சொல்ல, ‘இந்நாள்’ ஒன்று சொல்ல... இந்த நிலை பா.ஜ.க-வில் ‘எந்நாளும்’ தொடரும் என்று நினைக்கிறேன்!
கி.சீனிவாசன், சிவகங்கை.
இன்னமும் எம்.ஜி.ஆருடைய தொப்பி, கண்ணாடிக்கு ‘மவுசு’ இருக்கிறதே?
ஏதோ போகிற போக்கில், சும்மா அந்தத் தொப்பியையும் கண்ணாடியையும் எம்.ஜி.ஆர் அன்று போட்டுக்கொண்டார் என்று நினைக்கிறீர்களா... அரசியல் பாஸ். துண்டு, திலகம், தாடி என இப்படி நீண்ட ஒரு பட்டியலே இருக்கு.

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.
பெண் வேடத்தில் எந்த நடிகர் டாப்: கமல், ரஜினி, எஸ்.கே?
சண்முகி பாட்டியின் பேத்திதானே ரெமோ. பாட்டி கலையானவர். பேத்தி களையானவர். ரஜினி இதில் குரூப்பில் டூப்!
எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.
வாய்ச்சொல்லில் வீரர் ஜெயக்குமாரா... அண்ணாமலையா..?
என்னங்க இப்பிடிக் கேட்டுட்டீங்க... இவங்களுக்கெல்லாம் பெரிய டான் ஒருத்தர் இருக்கார். அவரை மறந்துட்டீங்களே?!
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
“ரிஷிகளால், வேதங்களால் உருவானது இந்தியா. எந்த ராஜாவாலும் உருவாக்கப்படவில்லை” என்ற ஆளுநரின் பேச்சு?
‘சர்ச்சையாக மட்டுமே பேசுவேன்’ என்று எந்தக் கோயிலிலாவது சத்தியம் செய்துவிட்டாரோ என்னவோ?
கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!