Published:Updated:

கழுகார் பதில்கள்

நக்கீரன்
பிரீமியம் ஸ்டோரி
நக்கீரன்

இது மாதிரியான பல தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. அப்படியான தீர்ப்புகளின் பின்னால், நடந்த மாற்றங்கள் பதிவுசெய்யப்பட வேண்டும்

கழுகார் பதில்கள்

இது மாதிரியான பல தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. அப்படியான தீர்ப்புகளின் பின்னால், நடந்த மாற்றங்கள் பதிவுசெய்யப்பட வேண்டும்

Published:Updated:
நக்கீரன்
பிரீமியம் ஸ்டோரி
நக்கீரன்

குணசேகரன், கிருஷ்ணகிரி.

தமிழக அரசு மட்டும், மாநில உரிமைக்காக மோடியிடம் சண்டையிட்டுக்கொண்டே இருக்கிறதே... ஏன்?

“குஜராத் என்ன பிச்சைக்கார மாநிலமா... பிச்சைத் தட்டுடன் டெல்லி முன்னால் நின்றுகொண்டிருக்கிறோமா நாங்கள்... எங்கள் கடும் உழைப்பினால் முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம்... டெல்லி இரும்புக்கரம் கொண்டு செய்யும் தந்திரங்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்!” - இது நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, டிசம்பர் 12, 2012-ல் சொன்னது. இப்போ உங்களுக்கு ‘ரத்தம் - தக்காளிச் சட்னி’ காமெடி ஞாபகம் வருதா?!

கழுகார் பதில்கள்

@சரோஜா பாலசுப்ரமணியம்.

“வன்னியர்களுக்கான 10.5 இட ஒதுக்கீடு வழக்கில் ஏற்பட்ட தோல்விக்கு, தி.மு.க அரசே காரணம். மதுரை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞரை வைத்து அவர்கள் வாதாடவில்லை. சரியான தரவுகள் கொடுக்கப்படவில்லை என நீதியரசரே தெரிவித்திருக்கிறார்” என்ற எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு..?

‘சட்ட நிறைவேற்றத்தின்போதே வழக்கு போட முகாந்திரம் கொடுக்காமல், சட்ட நிபுணர்களை வைத்துத் தரவுகளை நன்கு ஆராய்ந்து, வலுவான வகையில் சட்டத்தை நிறைவேற்றியிருக்கலாமே... தேர்தல் ஆதாயத்துக்காக அவசர அவசரமாகச் சட்டத்தைக் கொண்டுவந்தது இவர் தவறுதானே?’ என்று அவர்கள் தரப்பில் கேட்கிறார்களே!

@சி.சம்பத்.

‘ஒரு பூனை என்னதான் கனவு கண்டாலும், புலிக்கு நிகராக வர முடியாது என்பதை முதல்வரும் நிதியமைச்சரும் புரிந்துகொள்ள வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறாரே அண்ணாமலை?

பூனை என்று அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்பதைத் தெளிவாகச் சொல்லவில்லையென்றால், அவர் சொற்கள் அவருக்கே பாதகமாகிவிடுமே!

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர், தேனி.

`கேரளாவில், பாரதிய ஜனதா கட்சி வளர முடியாததற்குக் காரணம் 90% கல்வியறிவு இருப்பதே’ என்ற கருத்து சரியா?

கேரளாவை விடுங்க. படிச்சவங்களெல்லாம் சரியான ஆட்களாத்தான் இருப்பாங்க, அவங்க சரியான ஆட்களைத்தான் எப்பவும் தேர்ந்தெடுப்பாங்கனு நீங்க நம்புறீங்களா?

கழுகார் பதில்கள்

ஏ.கணேசன், தூத்துக்குடி.

சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட பிரவீண் என்ற இளைஞருக்கு, ஒரு மாதத்துக்கு அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை வார்டு பாயாக வேலை செய்து அந்த அனுபவத்தை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பற்றி..?

நல்ல தீர்ப்பு. இது மாதிரியான பல தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. அப்படியான தீர்ப்புகளின் பின்னால், நடந்த மாற்றங்கள் பதிவுசெய்யப்பட வேண்டும். ‘பைக் ரேஸ் இளைஞரின்’ அரசு மருத்துவமனை அனுபவ அறிக்கையைப் பொதுவெளியில் பகிர்ந்தால் பல இளைஞர்களுக்கும் அதுவொரு பாடமாக இருக்கும்!

நக்கீரன்
நக்கீரன்

அருணாசலம், திருப்பூர்.

ஒரு விஷயத்தை முற்றிலும் வேறு கோணத்தில் பார்ப்பது என்பதற்கு ஓர் உதாரணம் ப்ளீஸ்?

பியானோ இசைக்காத இசை

ஒரு மாபெரும் இசைக்கலைஞன்

பியானோவை இசைத்துக்கொண்டிருக்கிறான்.

பல்வேறு பறவைகளின் கூட்டிசையால்

அரங்கையே ஒரு கானகமாக்குகிறான்

எனக்கு இசையைக் குறித்தோ

அதன் நுட்பங்களைக் குறித்தோ ஏதும் தெரியாதுதான்

ஆனாலும்

பியானோவின் தாளக்கட்டைகள் குறித்து நன்கறிவேன்

அதனைச் செய்வதற்காக வெட்டப்பட்ட

ஒரு ஜெலுத்தோங் மரத்தையும் அறிவேன்

அது வெட்டப்படுவதற்குச் சற்று முன்னர் வரை

அதன் உச்சியில் கூடுகட்டியிருந்த

இருவாட்சிப் பறவைகளையும் அறிவேன்

அறியாதது

அம்மரம் வெட்டி வீழ்த்தப்பட்டவுடன்

காற்றையே கனக்கச் செய்த

இருவாட்சிகளின் அந்த அடர் சோகக் கூவலை

இந்த பியானோவில்

இந்த மாபெரும் இசைக்கலைஞன்

இறுதிவரை ஏன் இசைக்கவில்லை?

- நக்கீரன்

இந்தக் கவிதையே உங்களுக்கான பதில். நாம் எல்லோரும் பியானோ இசையில் லயித்திருக்க... கவிஞரோ, பியானோ கட்டைகளுக்காக வெட்டப்பட ஜெலுத்தோங் மரத்தில் வசித்த இருவாட்சிப் பறவையைக் குறித்துச் சிந்திக்கிறார்!

*****

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!