Published:Updated:

கழுகார் பதில்கள்

சுப்பிரமணியன் சுவாமி
பிரீமியம் ஸ்டோரி
சுப்பிரமணியன் சுவாமி

குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர், குற்றவாளியா என்பதை உறுதிசெய்வதற்குத்தான் காலம் எடுக்கிறது.

கழுகார் பதில்கள்

குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர், குற்றவாளியா என்பதை உறுதிசெய்வதற்குத்தான் காலம் எடுக்கிறது.

Published:Updated:
சுப்பிரமணியன் சுவாமி
பிரீமியம் ஸ்டோரி
சுப்பிரமணியன் சுவாமி

சௌந்தர், அரியலூர்.

பெட்ரோல், டீசல் விலையுயர்வை வேண்டுமென்றே எதிர்க்கட்சிகள் பேசுபொருளாக்குகின்றனவோ?

“நாள்தோறும் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலையை உயர்த்துவது, நாட்டில் கிளர்ச்சிச் சூழலை உருவாக்கியுள்ளது. நிதியமைச்சகத்துக்கு அறிவு வறட்சி ஏற்பட்டிருப்பதே இதற்குக் காரணம். நிதிப்பற்றாக்குறையை இந்த விலையேற்றங்களின் மூலம் சமாளிப்பது என்பதெல்லாம் தகுதியின்மையே” - இதைச் சொன்னது எதிர்க்கட்சியினர் அல்ல. பா.ஜ.க-வைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி. எரிபொருள்களின் விலையுயர்வு, தொடர்ச்சங்கிலி விளைவாக மக்களின் அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலையிலும் எதிரொலிக்கிறது. கொரோனா பேரிடரின் விளைவான பொருளாதார பாதிப்பிலிருந்து மீண்டு, இப்போதுதான் மக்கள் மூச்சுவிடுகிறார்கள். அதற்குள்... விலையேற்றமென்றால் பேச மாட்டார்களா?

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்

அ.யாழினி பர்வதம், சென்னை.

புதிய கொரோனா வகையான XE, மும்பையில் ஒருவருக்கு உறுதியாகியிருக்கிறதே?

இனி பல பெயர்களில் கொரோனா வருவதும் போவதும்தான் நியோ நார்மல். எப்போதும் பாதுகாப்பாக இருப்பதைத் தவிர நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை!

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

இன்றைய அரசியல்வாதிகளுக்கு உண்மையைப் பொய்யாக்குவது, பொய்யை உண்மையாக்குவது எது கைவந்த கலை?

ஓ... இதையெல்லாம் கலையில் சேர்த்துட்டீங்களா கணேசன்?!

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர், தேனி.

அதிகாலை 4 மணிக்கு வேக வேகமாக நடைப்பயிற்சி சென்றுவிட்டு, 5 மணிக்கு வடை, பஜ்ஜி, போண்டா, சூடாக காபி, டீ சாப்பிடும் நண்பர்களைப் பற்றி..?

எதுவுமே செய்யாமல் பஜ்ஜி, சொஜ்ஜி, டீ, காபி சாப்பிடுவதற்கு... கொஞ்சம் நடந்துவிட்டுச் சாப்பிடுவதில் தப்பொன்றும் இல்லை!

வாசுதேவன், பெங்களூரு.

ஓர் ஆசிரியர் என்பவர் எப்படி இருக்க வேண்டும்?

ஓர் இளைஞன், தன்னைப் பயிற்றுவித்த ஆசிரியரைப் பல வருடங்களுக்குப் பிறகு தேடிக் கண்டுபிடித்து, “என்னைத் தெரிகிறதா ஐயா?” என்று கேட்டான். வயதான அந்த ஆசிரியர், “தெரியவில்லையே!” என்று கூறவே, தான் யாரென்பதைச் சொன்னார் இளைஞர். “வகுப்பில் ஒரு மாணவனின் விலையுயர்ந்த கடிகாரத்தைத் திருடிவிட்டேன் நான். அவன் புகார் அளித்ததும் எல்லா மாணவர்களையும் சுவரைப் பார்த்து கண்மூடி நிற்கவைத்து, சோதனை செய்தீர்கள். என் பாக்கெட்டிலிருந்து கடிகாரத்தை எடுத்த பிறகும், எனக்கடுத்து நின்ற மாணவர்களையும் சோதித்துவிட்டு, யாரிடமிருந்து கிடைத்தது என்று சொல்லாமலேயே அதை உரியவனுக்குத் திருப்பிக் கொடுத்தீர்கள். அதன் பிறகு ஒரு முறைகூட அதைப் பற்றி என்னிடம் நீங்கள் பேசவே இல்லை. என்னை மிக நன்றாகவே நடத்தினீர்கள். அந்தக் குற்றவுணர்வும், நீங்கள் என்னை நடத்தியவிதமும் இதுவரை என்னை ஒழுக்கமாக நடந்துகொள்ளப் பாடமாக அமைந்தன ஐயா” என்றான். ஆசிரியர் சொன்னார்: “ஓ... அப்படியா? திருடியது நீதான் என்று இப்போதுவரை எனக்குத் தெரியாது. ஏனென்றால், அன்றைக்கு உங்களை மட்டும் நான் கண்மூடச் சொல்லவில்லை. ஒரு மாணவனைத் திருடன் என்ற பார்வையில் பார்க்கக் கூடாதே என்று தேடும்போது, நானும் கண்களை மூடியபடியேதான் தேடினேன்!”

பெ.பச்சையப்பன், கம்பம்.

‘கடந்த பத்தாண்டுக் காலம், தமிழகத்தில் அ.தி.மு.க நடத்தியதுதான் ராமராஜ்ஜியம்’ என்கிறாரே செல்லூர் ராஜூ?

இப்போதாவது உண்மையை ஒப்புக்கொண்டாரே!

மதிராஜா திலகர், சின்னபுங்கனேரி.

குற்றவாளிகளுக்கு உடனடி தண்டனை கிடைப்பதென்பது எதிர்காலத்திலாவது சாத்தியமாகுமா?

நிகழ்காலத்திலேயே குற்றவாளிகளுக்கு உடனடி தண்டனை கிடைக்கத்தான் செய்கிறது மதிராஜா. குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர், குற்றவாளியா என்பதை உறுதிசெய்வதற்குத்தான் காலம் எடுக்கிறது. `ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்படக் கூடாது’ என்ற நம் சட்டத்தின் அடிப்படை நோக்கத்தில் நேரமெடுத்து, தீர விசாரிப்பது தவறொன்றுமில்லை. பல நேரங்களில் மேலிருந்து தரப்படும் நெருக்கடியில்தான், யாரோ ஒரு நிரபராதியைக் குற்றவாளியாக்கிவிடுகிறார்கள்!

கழுகார் பதில்கள்

பி.ஓம்பிரகாஷ், கொடுங்கையூர்.

சினிமாக்காரர்களுக்கு ஏன் இவ்வளவு மவுசு?

“சினிமா ஒன்றும் தேவலோகமும் அல்ல. சினிமா சார்ந்த நபர்கள் தேவ தூதர்களும் அல்ல. இதைப் புரிந்துகொண்டால், எளிய விஷயங்களைப் பார்த்து ஆச்சர்யப்படத் தேவையிருக்காது!” இயக்குநர் மகேந்திரனின் வார்த்தைகள் இவை.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism