
ஜெயலலிதாவோ, கருணாநிதியோ, எடப்பாடியோ, ஸ்டாலினோ இந்த விஷயத்திலெல்லாம் வேறும் பேச்சுதான். டாஸ்மாக் பேச்சு... விடிஞ்சா போச்சு.
டி.ஜெயசிங்,கோயம்புத்தூர்.
கொரோனா தடுப்பூசி மருந்துகளை மீண்டும் தயாரிக்க ஆரம்பித்திருப்பது, கொரோனா பரவல் அதிகரித்திருப்பதைத்தானே காட்டுகிறது?
உண்மைதான். ஆனால், அச்சப்படத் தேவையில்லை. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியுங்கள். சத்தான உணவுகளை உட்கொள்ளுங்கள். கொஞ்சமேனும் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். பாத்துக்கலாம்!

சரவணகுமார் சின்னசாமி, தாராபுரம்.
`மானமிகு’ என்ற அடைமொழியை யாரெல்லாம் பயன்படுத்தலாம்?
சமூகத்திலுள்ள எந்தக் கருத்தையும், நடைமுறையையும் சுய அறிவால் சிந்தித்து ஏற்கிற, நிராகரிக்கிற... யாரையும் தனக்குக் கீழானவர் என்றோ, யாருக்கும் தான் கீழானவர் என்றோ ஏற்காத... அதாவது, ‘அடிமை’ மனநிலையை ஏற்காத எல்லோருமே ‘மானமிகு’ என்ற அடைமொழியைப் பயன்படுத்தலாம்.
இல.கண்ணன், நங்கவள்ளி.
`நாட்டிலுள்ள 30 முதலமைச்சர்களில், 29 பேர் கோடீஸ்வரர்கள்’ என்று ஆய்வில் தெரிய வந்திருக்கிறதே?
இதையெல்லாம் கண்டுபிடிக்க ஆய்வு வேறயா... அட, போங்க பாஸ். நம்மூர் ஊராட்சி மன்றத் தலைவர்களிலேயே பல பேர் கோடீஸ்வரர்கள்!
திருப்பூர் அர்ஜுனன்.ஜி, அவிநாசி.
`படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும்’ என்ற ஜெயலலிதாவின் அறிவிப்புக்குப் பிறகு இதுவரை மூடப்பட்ட கடைகள் எத்தனை?
ஜெயலலிதாவோ, கருணாநிதியோ, எடப்பாடியோ, ஸ்டாலினோ இந்த விஷயத்திலெல்லாம் வேறும் பேச்சுதான். டாஸ்மாக் பேச்சு... விடிஞ்சா போச்சு.
எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.
பொய் சொல்லாமல் வாழ முடியுமா?
உண்மையைப்போலவே பொய்யும் இந்த உலக வாழ்க்கைக்கு அவசியமான ஒன்றுதான். பொய்களிலும் நல்ல பொய்கள், கவித்துவமான பொய்கள், அன்பு நிறைந்த பொய்கள், சந்தோஷமான பொய்கள் இருக்கின்றன. இந்த இடத்தில் வள்ளுவரின் அட்வைஸை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்:
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
பாரதிமுருகன், மணலூர்பேட்டை.
உங்களுக்கு எவ்வளவு கடன் இருக்கு?
உங்களைப் போன்ற ‘ஜூ.வி வாசகர்கள்’ காட்டும் அன்புக்கும் ஆதரவுக்கும் மட்டும்தான் ‘கடன்’பட்டிருக்கிறேன் முருகன்.
தே.மாதவன், கோயம்புத்தூர்.
விருத்தாசலம் நகராட்சி 30-வது வார்டு கவுன்சிலர் பக்கிரிசாமி, 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், ‘தி.மு.க-வினர் என்பதால் 11 மணி நேரம் தாமதமாகக் கைதுசெய்ததாக’ எடப்பாடி கூறியிருக்கிறாரே?
அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசனை எப்போது கைதுசெய்தார்கள் என்று மறந்துவிட்டார்போல எடப்பாடி. எந்த ஆட்சியாக இருந்தாலும் பெண்களுக்கு, குழந்தைகளுக்கு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான குற்றங்களில் மிக விரைவான, அதிரடியான கைதுகளும் தண்டனைகளும் அவசியம்.

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.
நடிகர் எஸ்.வி.சேகர் என்ன செய்துகொண்டிருக்கிறார்?
ஆட்சி மாறியவுடன் உதயநிதியைப் பார்த்து சிரித்த முகத்தோடு வாழ்த்து சொல்லி, வீடு திரும்பினார். பிறகு ‘கப்சிப்’ ஆகிவிட்டார்!
கா.கு.இலக்கியன், சென்னை-52.
தமிழ்நாட்டு ஆளுநரின் அனைத்துச் செயல்களையும் அ.தி.மு.க எதிர்க்காதது, பா.ஜ.க அனைத்தையும் ஆதரிப்பது எதைக் காட்டுகிறது?
நிலைமை ரொம்பவே மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது!

டி.சிவக்குமார், திண்டுக்கல்.
‘விடுதலை’ படம் பார்த்துவிட்டீர்களா... கழுகாரின் கருத்தென்ன?
நல்ல முயற்சி. பேசவேண்டிய களம்தான். ஆனால், பாதிப் படம் பார்த்ததுபோலத்தான் இருந்தது. சில இடங்களில் கருத்தியல் தடுமாற்றமும், சில காட்சிகளில் இசையும் கேமரா கோணமும் பார்வையாளர்களுக்குத் தவறான உணர்வைக் கடத்தும் விபரீதமும்கூட நடந்திருக்கிறது. இரண்டாம் பாகமும் வரட்டும், விரிவாகப் பேசுவோம்.
கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!