அரசியல்
அலசல்
Published:Updated:

கழுகார் பதில்கள்

அன்புமணி, ராமதாஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
அன்புமணி, ராமதாஸ்

இயலாத நிலையில் எளியவர்கள், வலியவர்களை நோக்கிக் கேட்கும் கேள்விகள் மிக கனமானவை.

கே.விஸ்வநாதன், கோவை.

“வன்னியர் இட ஒதுக்கீடு சம்பந்தமாகப் போராட்டம் எதுவுமில்லை. அன்புமணி தலைமையில் குழு அமைத்து முதல்வரிடம் வலியுறுத்துவோம்” என்று அறிவித்துவிட்டாரே ராமதாஸ்?

“நாடாளுமன்றத் தேர்தலை நோக்கிக் கனிந்துகொண்டிருக்கிறது மாம்பழம்” என்கிறார்கள் தோட்டத்தில்.

கழுகார் பதில்கள்

மாணிக்கம், திருப்பூர்.

நம் அரசாங்கத்தால் கொசுக்களை ஏன் ஒழிக்க முடியவில்லை?

Culicidae என்ற குடும்பத்தைச் சேர்ந்த கொசுக்களில் 3,500 வகைகள் உள்ளன. எல்லாக் கொசுக்களும் மனித ரத்தத்தை உறிஞ்சுவதில்லை. இவற்றில் 200 வகைகள் மட்டுமே மனித ரத்தத்தை உறிஞ்சி வாழ்கின்றன. அவற்றை முற்றிலும் ஒழிப்பதென்பது உயிர்ச்சூழலில் சாத்தியமே இல்லாத ஒன்று. ஆனால், அதன் கொட்டத்தை அடக்குவதில் மக்களும் அரசும் ஓரணியில் நின்று உண்மையாகவே செயல்பட்டால் முடியும். இதன் பின்னுள்ள வணிகம் குறித்தும் நாம் சந்தேகப்படத்தான் வேண்டும். அதெல்லாம் சரி... நீங்க நிஜமாவே கொசுக்களைப் பற்றித்தானே கேட்டீங்க?!

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர், தேனி.

தாங்கள் படிக்கும் பள்ளிக்கூடத்தை மாணவர்கள் சுத்தம் செய்வதில் என்ன தவறு இருக்கு சார்?!

மாணவர்களாக விரும்பிச் செய்வதில் தவறில்லை. ஆசிரியர்கள், கல்வியின் ஓர் அங்கமாகத் தூய்மை குறித்துச் சொல்லித் தர அப்படிச் செய்யச் சொல்வதிலும் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் குறிப்பிட்ட வகையில், சாதி, மத, பாலின அடிப்படையில், பொருளாதார அடிப்படையில் மாணவர்களைத் தேர்வுசெய்து தூய்மைப் பணியில் ஈடுபடுத்துவது தவறு மட்டுமல்ல, கொடூரப் பாவச்செயல். பள்ளியிலேயே விஷத்தை விதைக்கும் அவலச் செயல். அது, பள்ளியைத் தூய்மைப்படுத்துகிறேன் என்கிற பெயரில் மாணவர்கள் மனதை அழுக்காக்கும் செயல்!

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

தேசியக் கட்சிகளின் மாநிலத் தலைவர்களில் பா.ஜ.க-வின் அண்ணாமலை, காங்கிரஸின் கே.எஸ்.அழகிரி இவர்களின் அணுகுமுறை எப்படி உள்ளது?

ஒருத்தர் பேசக் கூடாத நேரத்திலும் பேசிக்கிட்டே இருக்கார். இன்னொருத்தர் பேசவேண்டிய நேரத்துலயும் பேசவே மாட்டேங்கிறார்!

சௌந்தர், அரியலூர்.

உலகின் பல பகுதிகளில் வாழும் ஆதிவாசிகள் மிகவும் வெள்ளந்தியானவர்கள் என்று படித்தேன். நிஜமாகவா?

இரண்டாம் உலகப் போர் சமயம். அமெரிக்க விமானப்படை, ஜப்பான்மீது தாக்குதலை எளிதாக்கும் நோக்கோடு தங்களது விமான தளங்களை பசிபிக் கடல் பிராந்தியத்தில் அமைத்திருந்தனர். விமானத்தில் வந்த அவர்களைத் தம்மிலும் மேலானவர்கள் என நினைத்து, அங்கு வாழ்ந்த பழங்குடியின மக்கள் அவர்களுக்கு உதவினர். கடுமையாக உழைத்துக் கொடுத்தனர். போர் முடிவில் அமெரிக்கப்படை அங்கிருந்து கிளம்பிச் சென்ற பிறகு, அப்பழங்குடியினர் வான் கலன்கள், ஹெலிகாப்டர்கள் போன்ற வடிவங்களை உருவாக்கி, வெள்ளந்தியாக அவற்றை வழிபட்டும் வந்தனர். கடைசி வரை, போர் குறித்தோ, மனித உயிர்களை அழிக்க வந்த கலன்கள் அவை என்றோ அவர்கள் அறியவே இல்லை. இதில் அவர்கள் தப்பு ஒன்றும் இல்லை!

கழுகார் பதில்கள்

சுகன்யா, சென்னை-110.

“இந்த 30 வருஷத்துல... சாதாரணமாயிருந்த ஒரு நடிகனை வளர்த்தெடுத்து, `தளபதி’யா மாத்துனது ரசிகர்கள்தான். அந்தத் தளபதியை, தலைவனாக்கிப் பார்க்கணுமா, வேணாமாங்குறதை ரசிகர்களும், சூழ்நிலையும்தான் முடிவு பண்ணணும்!” - என்ற விஜய்யின் வார்த்தைகள்?

ஹாஹாஹா... எங்கேயோ கேட்ட குரல்!

கழுகார் பதில்கள்

மாயா, புதுப்பேட்டை.

எந்தக் கேள்வியைத் தாங்கிக்கொள்ள முடியாது?

இயலாத நிலையில் எளியவர்கள், வலியவர்களை நோக்கிக் கேட்கும் கேள்விகள் மிக கனமானவை. மோகனரங்கன் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் அமெரிக்கக் கவிஞர் இ.இ.கம்மிங்ஸ் எழுதிய கவிதை இது!

என்னை நோக்கி

விஷம் வைக்கப்பட்டும்

இன்னும் உயிரோடிருக்கும் எலி

அதைச் செய்த என்னை

அமைதியாகத் தரையினின்றும்

அண்ணாந்து பார்த்தவாறு

வினவுகிறது

“நீங்கள் செய்திடாத எதை

நான் அப்படிச் செய்துவிட்டேன்?”

தே.அண்ணாதுரை. கம்பம், புதுப்பட்டி.

மக்களுக்கு, கலை என்ன செய்கிறது?

“கலை, மனிதனின் ஆன்மாவிலிருந்து அன்றாட வாழ்க்கையின் தூசியைக் கழுவுகிறது” என்கிறார் ஓவியர் பாப்லோ பிகாசோ!

திருப்பூர். அர்ஜுனன்.ஜி, அவிநாசி.

நாமெல்லோரும் இந்தியர். மதத்தால் அல்ல, மொழியால் அல்ல, உணர்வால் என்பதை எப்போது உணரப்போகிறார்கள் அரசியல்வாதிகள்?

அதெல்லாம் அவர்களுக்கும் நன்றாகவே தெரியும். உணர்ந்ததாக வெளியில் காட்டிக்கொண்டால் அவர்களின் ‘முதலுக்கு’ மோசமாகிவிடுமே!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!