Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

‘இன்ஸ்டன்ட் நீதி’யைப் பலரும் விமர்சித்துவருகிறார்கள். ஆனால் இதுவரை ஆளும் அரசுகள் மௌனத்தை மட்டுமே பதிலாகத் தந்துகொண்டிருக்கின்றன!

கழுகார் பதில்கள்

‘இன்ஸ்டன்ட் நீதி’யைப் பலரும் விமர்சித்துவருகிறார்கள். ஆனால் இதுவரை ஆளும் அரசுகள் மௌனத்தை மட்டுமே பதிலாகத் தந்துகொண்டிருக்கின்றன!

Published:Updated:
கழுகார் பதில்கள்
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.

இளையராஜா, பாக்யராஜ் விவகாரங்களையெல்லாம் பார்த்து, மனசுக்குள் சிரித்துக்கொள்பவர் யாராக இருக்கும்?

இந்தக் கேள்விக்கு பதில் கேட்டால்... ‘சின்னக் குழந்தையும் சொல்லும்!’

இளையராஜா, பாக்யராஜ்
இளையராஜா, பாக்யராஜ்

@கார்த்திகேயன் கவிதா

இளையராஜா - புத்தக அணிந்துரைப் பிரச்னை, திட்டமிட்டுத் தமிழர்களுக்குள் பிளவு ஏற்படுத்த உருவாக்கப்பட்டதுபோலத் தெரிகிறதே?

தமிழர்கள் ரொம்பத் தெளிவானவர்கள். அன்னம்போலத் தேவையானதை மட்டும் தனியே பிரித்து எடுத்துப் பருகுவார்கள். இசைந்தும் இணைந்தும் இருப்பார்கள். அதுதான் இதுவரையிலான வரலாறு!

சிவகுருநாதன், நாட்டரசன்கோட்டை.

தமிழகத்தில் பா.ஜ.க-வினரின் சமீபத்திய ஸ்டேட்மென்ட்டுகளையெல்லாம் பார்க்கும்போது, என்ன தோன்றுகிறது கழுகாரே?

‘சவுண்ட் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்!’ என்று அவர்கள் நினைப்பது புரிகிறது!

ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

கழுகாரிடம் கேள்வி கேட்கும் வாசகர்களுக்கு விருதுகள் வழங்கக் கோரி பிரதமருக்குக் கழுகார் கடிதம் எழுதுவது போலக் கனவு கண்டேன். பலிக்குமா?

நாட்டில் நடக்கிற இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும், கனவு காணும் அளவுக்கு உங்களுக்கு நிம்மதியான தூக்கம் வருகிறது என்று நினைக்கும்போது, பொறாமையாக இருக்கிறது மாடக்கண்ணு!

க.அருச்சுனன், செங்கல்பட்டு.

ஆறுமுகசாமி விசாரணை கமிஷனால் யாருக்குப் பயன்?

உங்கள் கேள்வியின் முதல் பகுதியிலும் இறுதிப் பகுதியிலுமாக இரண்டு பதில்கள் உள்ளன. டேக் இட்!

சௌந்தர், அரியலூர்.

நம் நாட்டின் பல மாநிலங்களில் இருக்கிற ஆளுநர் - முதல்வர் மோதல்போல வெளிநாடுகளிலும் நடப்பதுண்டா?

1955-லேயே சிங்கப்பூரின் முதல் முதலமைச்சர் டேவிட் மார்ஷலுக்கும் ஆளுநர் ஜான் நிக்கலுக்கும் மோதல் நடந்திருக்கிறதே... 1955-ல் தேர்தலில் வென்று முதல்வரான மார்ஷலுக்கு, ஆளுநர் ஜான் நிக்கல் பல சிக்கல்களைக் கொடுத்தார். ` ‘கோட்’ அணிந்துகொண்டு சட்டமன்ற அவைக்கு வரக் கூடாது’ என்றார் ஆளுநர். அதைமீறி ‘முதல்வர் கோட்’ அணிந்துகொண்டுதான் வந்தார் மார்ஷல். சட்டமன்றத்தில் முதல்வருக்குத் தனி அலுவலகத்தைக்கூட ஒதுக்க ஆளுநர் ஒப்புக்கொள்ளவில்லை. உடனே முதல்வர், ‘சட்டமன்றத்துக்கு வெளியே ஆப்பிள் மரத்தடியில் எனக்கான அலுவலகத்தை அமைத்துக்கொள்வேன்’ என்று கூறினார். ‘முதல்வரான எனக்கு மேஜையும் தொலைபேசியும் தர வேண்டும். இல்லையென்றால் மேஜையை வீட்டிலிருந்து கொண்டுவருவேன். தொலைபேசி தராவிட்டால் ஒலிபெருக்கியைக் கொண்டுவருவேன்’ என்று முதல்வர் எச்சரிக்க, சட்டமன்ற அலுவலக மாடிப்படி அருகே ஓர் அறையை அவருக்கு ஒதுக்கினார்கள். அதிகாரத்துக்கான மோதலில் மனிதர்கள், பதவிகள், நாடுகள் மாறலாம். ஆனால், காட்சிகள் ஒன்றுதான்!

மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி, மதுரை.

வானொலி நேயர், பத்திரிகை வாசகர், சினிமா ரசிகர் இவர்களில் யாராக இருப்பதில் பெருமிதம்?

எதிலும் ரசனையில்லாமல் இருப்பதுதான் பிரச்னை. மற்றபடி, ‘ஏதாவது ஒரு விஷயத்தில் ரசனை இருப்பது வொர்க் லைஃப் பேலன்ஸுக்கு சிறந்த ஒன்று’ என்கிறார்கள் உளவியலாளர்கள். எழுத்து, ஒலி, ஒலி-ஒளி என மூன்று ஊடகமும் தனித்தனியான ரசனைக்குரியவை. மூன்று பேருமே பெருமிதம்கொள்ளலாம்!

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்

சுப்ரமணியன், தூத்துக்குடி.

மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் நகரில், ராம நவமி ஊர்வலத்தின்போது கல் எறிந்தார்கள் என்று, பலரது வீடுகள் புல்டோசர்கள் கொண்டு இடிக்கப்பட்டிருக்கின்றனவே?

போலீஸ் விசாரணை, நீதிமன்ற விசாரணைகளுக்கெல்லாம் முன்பாகவே, கலவரம் செய்தவர்களாக அடையாளம் காணப்படுபவர்களின் வீடுகளை ‘ஆக்கிரமிப்பு இடங்கள்’ என்று காரணம் காட்டி இடிக்கிறார்கள். அவர்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபணமானாலும், அவர்களுக்கு வீடு திரும்பக் கிடைக்காது. 2005-லேயே ஒரு மின் விபத்தில் இரண்டு கைகளையும் இழந்தவரின் வீட்டை ‘இவர் கல் வீசினார்’ என்று குற்றம்சாட்டி இடித்திருக்கிறார்கள். `கைகளை இழந்தவர் எப்படிக் கல் வீசியிருக்க முடியும்?’ என்ற கேள்விக்கு பதிலில்லை. ம.பி-யின் செந்த்வா நகரில், வேறொரு வழக்கில் கைதாகி ஒரு மாதமாகச் சிறையிலிருப்பவரும் கல் வீசிய குற்றச்சாட்டில் சிக்கி, வீட்டின் முன்பகுதியை இழந்திருக்கிறார். இப்படியான ‘இன்ஸ்டன்ட் நீதி’யைப் பலரும் விமர்சித்துவருகிறார்கள். ஆனால் இதுவரை ஆளும் அரசுகள் மௌனத்தை மட்டுமே பதிலாகத் தந்துகொண்டிருக்கின்றன!

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism